பெயிண்டிங் தொழிலாளியை பலி எடுத்த ஆர்.சி.,இன்சூரன்ஸ் இல்லாத பள்ளி பேருந்து !
ஆர்.சி., இன்சூரன்ஸ் இல்லாத பள்ளி பேருந்து மோதி பலியான பெயிண்டிங் தொழிலாளி !
”இதுவரை சிகிச்சை மேற்கொண்டதற்கான கட்டண பாக்கியை செலுத்திவிட்டு, இறந்தவரின் உடலை எடுத்து செல்லுங்கள்.” என தனியார் மருத்துவமனை நிர்வாகம் கறார் காட்ட. “எங்களிடம் பணம் செலுத்த வசதியில்லை. அவர் இறப்புக்கு காரணமான பள்ளி நிர்வாகம்தான் பணத்தை கட்டவேண்டும்” என இறந்தவரின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட முயற்சித்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகாவை சேர்ந்த பூலாங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் 54 வயதான கணேசன். பெயிண்டிங் காண்டிராக்டரான இவர், வழக்கமான பணி நிமித்தமாக ஊருக்குள் செல்லும் சாலையில் கடந்த அக்-11 சனிக்கிழமை அன்று காலை 8.30 மணியளவில் நடந்து சென்றிருக்கிறார்.

அப்போது, திண்டுக்கல் மெயின்ரோடு டி.கள்ளிக்குடி பகுதியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடெமி வளாகத்தில் இயங்கிவரும் விகாஸ் வித்யாஸ்ரம் சி.பி.எஸ்.சி. பள்ளி பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக மோதியது. பரபரப்பான பிரதான சாலையில் அல்ல. ஊருக்குள் செல்லும் சாலை ஒன்றின் வளைவில் பேருந்து பின்னோக்கித் திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது.
படுகாயமடைந்த கணேசனை, சுமார் 1.5 மணி நேர தாமதத்திற்குப் பிறகு, என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடெமியின் நிறுவனர் விஜயாலயன் சொன்னது போல, மணப்பாறையில் உள்ள குமரன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.
அக்-11, சனிக்கிழமை தொடங்கி, அக்-13 திங்கட்கிழமை நள்ளிரவு 12.30 மணி வரையில் மணப்பாறை குமரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கணேசன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

பிறகு, உயர் சிகிச்சையின் அவசியம் கருதி குமரன் மருத்துவமனை நிர்வாகத்தினர், திருச்சிக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தியதையடுத்து மீண்டும் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடெமியின் நிறுவனர் விஜயாலயனை தொடர்புகொண்டிருக்கிறார்கள் கணேசனின் உறவினர்கள். அவர் சொன்னதின் அடிப்படையில், திருச்சி தென்னூர் கே.எம்.சி. மருத்துவமனையில் கணேசன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அக்-13 திங்கட்கிழமை நள்ளிரவு 12.30 தொடங்கி, அக்-17 வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணி வரையில் சிகிச்சை தொடர்ந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்துவிடுகிறார்.
இந்த இடத்தில், ஏற்கெனவே வாக்கு கொடுத்தபடி மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத்தை ஏற்க மறுத்திருக்கிறது, என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடெமி நிர்வாகம். தென்னூர் கே.எம்.சி. மருத்துவமனை நிர்வாகமோ, கட்ட வேண்டிய பணத்தை கட்டிவிட்டு கணேசன் சடலத்தை எடுத்து செல்லுங்கள் என்று கறார் காட்டிய நிலையில்தான் இந்த கொந்தளிப்பு.
கணேசனின் உறவினர் முகேஷிடம் பேசினோம். “ஆக்சிடெண்ட் ஆனப்பவே என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடெமி ஒனர் விஜயாலனுக்கு தகவல் சொன்னோம். எங்க ஊரைச் சேர்ந்த ராஜலிங்கம்தான் அவரிடம் பேசினார். அவர் சொன்னதுக்காகத்தான், திருச்சி ஜி.எச்.க்கு போகாமல், மணப்பாறை குமரன் மருத்துவமனைக்கு போனோம்.

விலா எலும்பு நுரையீரலில் குத்திடுச்சினு சொன்னாங்க. ஒரு பக்கம் கை முழுக்க சிதைந்திருச்சி. இரத்தம் வேற உறஞ்சிருக்குனு சொன்னாங்க. ஒரு கட்டத்தில திருச்சிக்கு கூட்டிட்டு போங்கனு சொல்லிட்டாங்க. இங்க வந்ததுக்கு அப்புறம், நுரையீரல்ல காத்து போயிருச்சி. எலும்பு குத்தியிருக்கு. ஆபரேசன் பண்ணனும்னு சொன்னாங்க. காய்ச்சல் வரவும், காய்ச்சல் குறைஞ்சதும் பண்ணலாம் சொன்னாங்க. அதுக்குள்ள இப்படி ஆயிருச்சி..” என்கிறார், முகேஷ்.
“ஆக்சிடெண்ட் நடக்கிறது சகஜம்தான். ஆனால் இந்த விபத்து தவிர்த்திருக்க வேண்டியது. பள்ளி வாகனத்தில் மோதி அவர் இறந்திருக்கிறார். வாகனத்தை பின்னோக்கி இயக்கியபோதுதான் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது.
இதுபோன்ற விபத்துகளை தடுக்கும் நோக்கத்தில்தான், பள்ளி வாகனத்தில், பள்ளிக் குழந்தைகளுடன் ஒரு அட்டண்டர் இருக்க வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது. அந்த பேருந்தில் அட்டண்டர் இருந்தாரா? என்பது முதல் கேள்வி.
அடுத்து, அந்த பள்ளி வாகனத்துக்கு இன்சூரன்ஸ் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், வருடந்தோறும் செய்ய வேண்டிய வாகனத்திற்கான தகுதிச்சான்றை (எஃப்.சி.) பெறவில்லை.

இதன் காரணமாக, அந்த வாகனத்தில் மோதி இறந்து போன கணேசன் குடும்பத்தினர் இழப்பீட்டை கூட பெற முடியாது. மாணவர்களிடமிருந்து சில ஆயிரங்களை கட்டணமாக வசூலிக்கும் கல்வி நிறுவனம் பள்ளி பிள்ளைகளின் பாதுகாப்பில் இவ்வளவு அலட்சியம் காட்டலாமா? ஒரு வேளை விபத்தில் பள்ளி பிள்ளைகள் சிக்கியிருந்தாலும் அவர்களுக்கும் இதே சிக்கல்தான். எஃப்.சி.யே செய்யாத பேருந்தை எப்படி துணிந்து இயக்கினார்கள் என்பதுதான் முதல் கேள்வியாக இருக்கிறது.
இதன் காரணமாகத்தான், ஜி.எச்.க்கு அழைத்து செல்ல வேண்டியவரை, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கிறார் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடெமி விஜயாலன். ஒரு கட்டத்தில், விபத்தில் இறந்ததற்கு நான் எதற்கு பணம் கட்ட வேண்டும் என்று ஒதுங்கிவிட்டார். இதுதான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம்.” என்கிறார், அதே பகுதியை சேர்ந்தவரும் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான பொன்.வேலுச்சாமி.
கொந்தளிப்பான சூழலை புரிந்து கொண்ட தில்லைநகர் காவல் ஆய்வாளர் சிவக்குமார், எடுத்த முயற்சிகளின் பலனாக என்.ஆர். அகாடமி விஜயாலன் தரப்பில் மருத்துவ கட்டணத்தை செலுத்த ஒப்புக்கொண்டதையடுத்து, கணேசனின் சடலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

“தீபாவளி திருவிழா காலமாக இருப்பதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் இதற்கு மேல் போராட்டத்தை நீட்டிக்க நாங்கள் விரும்பவில்லை. இறந்து போன கணேசன் சாதாரண பெயிண்டர். அவரது இரு மகன்கள் சிவனேசன் மற்றும் உதயகுமார் டிகிரி டிப்ளமோ முடித்துவிட்டு அன்றாட கூலிக்கு செல்பவர்கள். ஏழ்மையான குடும்பம்தான். ஆனாலும், அவர்கள் தரப்பில் சுமார் 1.5 இலட்சம் வரையில் இரு தனியார் மருத்துவமனைகளிலும் கட்டியிருக்கிறார்கள்.
அந்த பணத்தை யார் திருப்பித் தருவது? இதற்கும் என்.ஆர். நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும். தனது பள்ளி வாகனம் எஃப்.சி. செய்யாமல் இருக்கிறது, இன்சூரன்சும் இல்லை என்பதை மறைப்பதற்காகத்தான் ஜி.எச்.க்கு அனுப்பி வைக்காமல் குமரன் மருத்துவமனைக்கு திருப்பி விட்டிருக்கிறார். இதுதான் இவ்வளவு பிரச்சினைக்கு காரணம்.” என்கிறார்கள் களத்தில் இருந்த மார்க்சிஸ்ட் தோழர்கள் பொன்.வேலுச்சாமி, எஸ்.ஏழுமலை, ஆர்.ராஜா, ஆர்.செந்தில்குமார் மற்றும் மாறன் ஆகியோர்.

இந்த விவகாரம் தொடர்பாக, இந்த வழக்கின் விசாரணை அதிகாரி இனாம்குளத்தூர் எஸ்.ஐ. ராஜ்குமாரிடம் பேசினோம். ”தகவல் கிடைத்ததும் உடனடியாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சம்பந்தபட்ட பள்ளி வாகனத்தை கைப்பற்றியிருக்கிறோம். வாகனத்திற்கு எஃப்.சி. இருக்கிறதா? இன்சூரன்ஸ் இருக்கிறதா? என்பது எல்லாம் எங்களது அடுத்தகட்ட விசாரணையில்தான் தெரியவரும்.” என்றார்.
குற்றச்சாட்டுகள் குறித்து, என்.ஆர். அகாடெமியின் விஜயாலனிடம் பேச முயற்சித்தோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை.
முறையான தகுதிச்சான்று இன்சூரன்ஸ் இல்லாத பள்ளி வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி பெயிண்டர் கணேசன் உயிரிழந்த விவகாரம், தனியார் பள்ளி வாகனங்களின் தகுதிநிலை குறித்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.
வருடம் தோறும் கணக்குக்காகவும் கண்துடைப்புக்காகவும்தான் தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்படுகிறதா? இல்லை, தனியார் பள்ளிகள் திட்டமிட்டே இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுகிறார்களா? என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறது.
தனியார் பள்ளி பேருந்து மோதி இறந்துபோகும் நபர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தை மட்டுமல்ல; அதே பேருந்தில் பயணிக்கும் பள்ளி பிள்ளைகளின் உயிர்பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணையை அரசு மேற்கொள்ளுமா? இதுபோன்ற விதிமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?
– ஆதிரன்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.