எங்கே போனாலும் என்னை ஒன்னும் பண்ண முடியாது ! மோசடி மன்னர்கள் – பாகம் 07
எங்க போனாலும் என்னை ஒன்னும் பண்ண முடியாது… குடுமியான்மலை ரவிச்சந்திரன்
குடுமியான்மலை ரவிச்சந்திரனுக்கு எதிரான ஒரு மனநிலை மேலெழுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தமிழகத்தினுடைய பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து புகார் கொடுக்கிறார்கள். மோசடியின் பரிமாணம் புரிந்து போலீசும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள்.
“அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா…” என்ற கதையாக, தூசியை தட்டிவிட்டபடியே, அடுத்த சுற்று வேட்டைக்குத் தயாராகிறார், குடுமியான்மலை ரவிச்சந்திரன். இதுபோல, அவருக்கு எப்போதெல்லாம் கௌரவக்குறைச்சல் ஏற்படுகிறதோ? எப்போதெல்லாம் போலீசு கேசாகி ஜெயிலுக்கு போகும் நிலை வருகிறதோ? அப்போதெல்லாம் பத்திரிகைகளை கவனிக்கும் விதத்தில் கவனித்து விடுவார்.
தமிழகத்தின் முன்னணி நாளிதழ்கள் தொடங்கி எல்லாவற்றிலும் விளம்பரங்களை வாரி வழங்கி வாயை அடைத்து விடுவதில் அண்ணனுக்கு நிகர் அண்ணன் மட்டுமே. அண்ணனின் பராக்கிரமத்தை பறைசாற்றி, முழுப்பக்க விளம்பரமே வெளியாகும். அரசியல் தாழ்வாரத்திலும் தனக்குத் தெரிந்த ஆட்களை வைத்து எல்லா விசயங்களையும் சரிகட்டுவதிலும் பலே கில்லாடிதான்.
இந்த பின்னணியில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. சென்னையை சேர்ந்த சுபாஷ் சுவாமிநாதன் என்பவர் குடுமியான்மலை ரவிச்சந்திரனுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு அது. இவரால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பேரில் நானும் ஒருவன். என்னிடமும் பல இலட்சங்களை ஏமாற்றியிருக்கிறார். வெளிநாடு தப்பிச்செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆகவே, அவரது பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும். அவருடைய அலுவலகங்களில் சோதனையை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டும். அவர் பயன்படுத்தும் வங்கி லாக்கர்களை சோதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளோடு கடந்த 2014 – ஆம் வருடம் 11 வது மாதம் 11 ஆம் தேதி அந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்குப்போட்ட சுபாஷ் சுவாமிநாதன், ஒரே ஒரு நாள் அந்த வழக்கில் ஆஜராக போயிட்டாரு. அதுதான் காரணம்னு மொத்த வழக்கும் தள்ளுபடி ஆகுது. அன்றைக்கே காலரை தூக்கிட்டு தமிழகத்தை மீண்டும் வலம் வர ஆரம்பிச்சிட்டாரு.
அந்த காலகட்டத்தில் மத்திய சுகாதாரத்ததுறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் தொடங்கி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தமிழ்வாணன், அன்றைய சபாநாயகர் ஆவுடையப்பன் வரையில் பலரிடமும் நெருக்கமாக இருப்பதைப்போல காட்டிக் கொண்டார் குடுமியான்மலை ரவிச்சந்திரன்.
இதுபோல அரசியலில், அதிகாரத்தில், பல்வேறு தளங்களிலும், செல்வாக்கு மிகுந்த நபர்களை எல்லாம் தனக்கு தெரிந்தவர்களாக காட்டிக்கொண்டு, படம் காட்டியே தமிழகம் முழுவதும் வசூல் வேட்டையை விரிவுபடுத்தி இருக்கிறார் குடுமியான்மலை ரவிச்சந்திரன்.
கடந்த, 2006 – ஆம் வருடமே சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளை என்கிற டிரஸ்ட்-ஐ அவர் தொடங்கிட்டாரு. அப்போதிருந்தே, கைவரிசையை காட்டவும் தொடங்கிட்டாரு. ஆக, 2006 எங்கே இருக்கு? 2025 எங்கே இருக்கு? ஏறத்தாழ 20 ஆண்டு கால இடைவெளி. இடைப்பட்ட காலத்தில் ஒருமுறை குண்டாஸிலும் ஜெயிலுக்கு சென்று திரும்பியிருக்கிறார். இரண்டுக்கு மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டிருக்கிறார். சாதாரண பிக்பாக்கெட் திருடன்களை கூட, முக்கியமான கோயில் திருவிழாக்களில் பிக்பாக்கெட் திருடர்கள் ஜாக்கிரதைனு படத்தை பிளக்ஸ் அடிச்சு வைக்கிறாங்க. குடுமியான்மலை ரவிச்சந்திரனுக்கும் அப்படி ஒரு “அலெர்ட்” செய்திருந்தால், பலரும் பல கோடிகளை இழந்திருக்க மாட்டார்கள்.
உள்ளூர் அளவில் சில்லரைத்தனமாக பிரச்சினைகளில் ஈடுபடும் ரவுடிகளைகூட தொடர் கண்காணிப்பில் வைத்திருக்கும் போலீசார், குடுமியான்மலை ரவிச்சந்திரன் போன்ற மோசடி பேர்வழிகளை எப்படி சுதந்திரமாக விட்டார்கள்? என்ற கேள்வி எழுகிறது. இந்த பின்னணியில்தான் தற்போது இரிடியம் மற்றும் ஆர்.பி.ஐ. பெயரை தவறாகப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதான குற்றச்சாட்டில் மீண்டும் கைதாகியிருக்கிறார், குடுமியான்மலை ரவிச்சந்திரன்.
கோயில்களுக்கு நன்கொடை தருவதாக வாக்குறுதி சொன்ன வகையில் வரவேண்டிய பாக்கி, விளம்பரம் வெளியிட்ட வகையில் வர வேண்டிய பாக்கி, என குடுமியான்மலை ரவிச்சந்திரனிடம் பாக்கித்தொகையை வசூலிக்கவே பெரும் படையே காத்திருக்கும் கதை திருப்பங்கள் நிறைந்தது.
தொடர்ந்து பேசுவோம்
— ஆதிரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.