மீண்டும் கடலில் இறங்கிய டிட்வா !
நேற்று முழுவதும் இலங்கையின் நிலப்பரப்பில் மையம் கொண்டிருந்த டிட்வா புயல் இன்று காலை 5.30 மணி அளவில் அதன் பயண திட்டத்தில் எந்த பெரிய மாற்றமும் இன்றி வடக்கு வட மேற்கு திசையில் பயணித்து மீண்டும் கடல் பரப்பில் இறங்கியுள்ளது.
இன்னும் சில மணிநேரங்களில் இலங்கைக்கு மழை படிப்படியாக குறைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் 30.11.2025 காலை வரை
இலங்கையின் வடக்கு கடலோர பகுதிகளில் கடல் அலை மேலெழும்புதல் (SEA SURGE WARNING) அமலில் இருக்கும். தாழ் பகுதியில் வசிக்கும் மக்கள் கவனம் தேவை.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படி மேலும் அறிவியல் சேர்த்து இந்தப் பதிவை பலரும் பயன்பெற எழுதுகிறேன்.
தற்போதைய நிலவரப்படி புயலின் மையம் வேதாரண்யம் கோடியக்கரைக்கு தெற்கு தென் கிழக்கு திசையில் 135 கிமீட்டர் தொலைவில் இருக்கிறது.
நிலப்பரப்புடன் தொடர்பில் இருந்தமையால் சற்று வலிமை குன்றிய நிலையில் இருந்த புயல் கடல் பரப்பின் மீது தொடர்பு ஏற்படுத்திக் கொண்டமையால் மீண்டும் வலிமை (INTENSIFICATION) பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் புயல் – மழை அதிகம் தரும் சிஸ்டமாக மாற்றுவதற்கான சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. அவற்றை விரிவாகப் பார்ப்போம்.
1.மேடன் ஜூலியன் ஊசலாட்டங்கள் (MJO) தற்போது ஏழாம் நிலையில் (Phase 7) அதன் ஆம்ப்ளிட்யூட் +1 என்ற நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இருக்கும்.
2.புயல் பயணிக்க உள்ள பாதையில் கடல் நீர் மேற்பரப்பு வெப்பம் 28 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் இருந்து வருகிறது. இது புயல் வலிமை பெற சாதக அம்சம். காரணம் – புயல் கடல் நீர் மேற்பரப்பு வெப்பத்தில் இருந்து தான் தனக்கான ஆற்றலை எடுக்கிறது.
NCICS ( North Carolina Institute for Climate studies) மாதிரி – தற்போதைய சூழ்நிலையில் புயல் நிலவும் பகுதியில் மேற்கை நோக்கிய காற்று (Westerly wind anomaly ) மணிக்கு 7 முதல் 9 மைல் என்ற வேகத்தில் வீசி வருகிறது.
பூமத்திய ரேகையை ஒட்டி கடலில் அடித்து வரும் ராஸ்பை (EQUATORIAL ROSSBY WAVES) அலைகள் ( புயலுக்கு சாதகமான அம்சம்) இவையன்றி தெற்கு வங்காள விரிகுடா பகுதிகளிலும் , கிழக்கு அரேபிய கடல் பகுதிகளிலும் குறைவான அதிர்வெண் கொண்ட பின்புற அலைகள் (Low frequency Background waves) நிலவி வருகின்றன.
கூடவே 29 .11.2025 இன்று புயலுக்கு வடக்கு திசையில் தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் கிழக்கு நோக்கிய காற்று ( மணிக்கு 3-5 மைல் என்ற வேகத்தில் EASTERLY WIND ANOMALY) வீசிவருகிறது.
கூடவே இன்று மேற்கூறிய காற்றுகளுடன் கெல்வின் காற்று எனும் கிழக்கு நோக்கிய காற்றும் சேர்ந்து கொண்டு இத்தகைய சூழ்நிலை டிசம்பர் 2,2025 வரை நிலவ வாய்ப்புள்ளது.
மேற்கூறிய அனைத்து காற்று சார்ந்த சூழ்நிலைகளும், புயலின் மழை தரும் தன்மையை (CONVECTIVE ACTIVITY) அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
புயலின் சுழற்சி வேகத்தைப் பொருத்தவரை , ஒரு புயலின் மையத்தின் கீழ் பகுதியில் காற்றுக் குவியல் ஏற்படும். இதை CONVERGENCE என்கிறோம்.
புயலின் மேற்பரப்பில் காற்று சிதறல் ஏற்படும். இதை DIVERGENCE என்கிறோம்.
புயல் வலிமையடைகிறது என்றால் மேற்புற காற்று சிதறலை விட கீழ்ப்புற காற்றுக் குவியல் அதிகமாகிறது என்று அர்த்தம்.
டிட்வா புயலைப் பொருத்தவரை, இன்று காலை 5.30 மணி நிலவரப்படி புயலின் கீழ்ப்புற காற்றுக் குவிப்பு திறன் அதிகரித்துள்ளது.
இதற்கடுத்த படியாக புயலை வலிமை குன்றச் செய்யும் முக்கியமான விஷயமாக இருப்பது அது கடந்து செல்லும் பாதையில் நிலவும் “காற்று முறிவு” (WIND SHEAR) புயல் கடக்கும் பாதையில் அதன் உயரத்தில் நடுப்பகுதியில் காற்று முறிவு 5 முதல் 10 நாட்ஸ் எனும் அளவில் குறைவாகவே உள்ளது. எனினும் காற்று வீசும் திசை புயலை மட்டுப்படுத்துவதாக உள்ளது.
எனினும் புயலின் ஆழ் பகுதியில் நிலவும் ( DEEP LAYER WIND SHEAR) கிடைமட்ட காற்று முறிவு 15-20 நாட்ஸ் எனும் அளவில் சற்று மிதமான அளவில் உள்ளது. இந்தக் காற்று புயலுக்கு எதிர் திசையில் சுழன்று வருவதால்(ANTICYCLONIC) , புயல் தனது வலிமையை தக்க வைக்க ஏதுவாக அமைகிறது.
எனினும் புயல் இன்று மேலும் வடக்கு நோக்கி தனது பயணத்தை செலுத்தும் போது, வலிமையான காற்று முறிவை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். புயல் சிஸ்டத்தின்தெற்கு – தென் கிழக்கு பகுதியில் இருந்து தொடர்ச்சியாக அதற்கு வெப்பமான காற்று கிடைத்து வருகிறது. இது புயலுக்கு சாதகமான அம்சம்.
ஆனால் புயலின் வட மேற்கு பகுதியில் இருந்து இந்திய தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் இருந்து குளிர்ந்த வரண்ட காற்று கிடைத்து வருகிறது. புயல் இன்னும் வடக்கே நகர நகர இந்த வரண்ட காற்று உள்ளே வரும் என்பது புயலுக்கு எதிரான அம்சம். எனவே வடக்கு நோக்கி புயல் விரைவாக வந்தால் விரைவாக வலுவிழக்கும்.
வடக்கு நோக்கி வராமல் மெதுவாக அதன் பயணம் இருந்தால் எதிர்பார்ப்பை விட அதிக மழையை தமிழ்நாட்டின் வட வடகிழக்கு மாவட்டங்களுக்குத் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முடிவாக என்ன தான் நடக்கும்?
புயலுக்கு சாதகமான அம்சங்கள் – புயலுக்குள் உள் நுழையும் வெப்பக் காற்று + பூமத்திய ரேகையில் நிலவி வரும் ராஸ்பி அலைகள் + கெல்வின் அலைகள் + தற்போதைய கடல் மேற்பரப்பு வெப்பம் ஆகியவற்றால் புயல் மேற்கொண்டு சற்று வலிமை அடையும் வாய்ப்பு உள்ளது.

ஆயினும் வடக்கு நோக்கி மெதுவாக நகர நகர, வரண்ட காற்றுடன் தொடர்பு அதிகரிக்கும் என்பதாலும், அதன் விளைவாக மையத்தில் வெப்பத்தை நிலைநாட்ட முடியாமை காரணமாகவும் எதிர் வரும் காற்று முறிவு வலிமையாக இருக்கும் என்பதாலும் புயல் வலிமை இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு மாதிரிகளிலும் ஒன்றுபட்டு கூறும் புயலின் பாதை இதுவே புயல் மேலும் வடக்கு வட மேற்கு திசையில் பயணித்து தமிழ்நாட்டின் வட கிழக்கு – வடக்கு – தென் ஆந்திர பகுதிகளில் 30-11-2025 க்குப் பிறகு வலிமை இழந்து கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் தொடர்ந்து எங்கும் நில்லாமல் நகர்ந்து கொண்டே சென்று எண்ணியது போல கரையைக் கடக்கப் பிரார்த்தனை செய்வோம்.
புயல் அதிக நேரம் நமது கடற்கரையில் நங்கூரம் போடுவது மிக அதிக மழையைத் தரக்கூடும்.
எனவே, மெதுவாகவேனும் நகர்ந்து சொல்லியபடி கரை கடந்து விடு டிட்வா…
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.