அங்குசம் பார்வையில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ – சினிமா விமர்சனம்.
அங்குசம் பார்வையில் ‘தலைவர் தம்பி தலைமையில்’
தயாரிப்பு: ’கண்ணன் ரவி குரூப்’ கண்ணன் ரவி, இணைத் தயாரிப்பு : தீபக் ரவி, டைரக்ஷன் : நிதிஷ் சஹதேவ், ஆர்ட்டிஸ்ட் : ஜீவா, பிரார்த்தனா நாதன், இளவரசு, தம்பி ராமையா, ஜென்சன் திவாகர், மணிமேகலை, ஜெய்வந்த், சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், அனுராஜ், சுபாஷ் கண்ணன், சரத். ஒளிப்பதிவு : பப்லு அர்ஜு, இசை : விஷ்ணு விஜய், எடிட்டிங் : அர்ஜுன் பாபு, கிரியேட்டிவ் தயாரிப்பாளர்; ஜீவா, நிர்வாகத் தயாரிப்பாளர்: முத்துக்குமரன், பி.ஆர்.ஓ : சதீஷ் [ எஸ்-2]
கம்பம் அருகே இருக்கும் ஒரு கிராம பஞ்சாயத்தின் தலைவராக இருக்கிறார் ஜீவரத்தினம்[ ஜீவா] அந்த ஊரில் நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு முன்னால் நிற்பார். அப்படித்தான் இளவரசு மகள் செளமியா[பிரார்த்தனா நாதன்] கல்யாணத்திற்கு மைக்செட் சகிதம் போய் இறங்குகிறார். பக்கத்து வீட்டில் வசிக்கும் மணி[ தம்பி ராமையா]யும் இளவரசுவும் பகையாளிகள் . செளமியாவின் கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு மணியின் அப்பா மண்டையைப் போடுகிறார். மறுநாள் காலை முகூர்த்த நேரமான 10.30-க்குத் தான் அப்பாவின் பாடியை எடுப்பேன் என வம்பு பண்ணுகிறார் மணி.
“மத்தியானத்துக்கு மேல தான் பாடியை எடுக்கணும்” என அடம் பிடிக்கிறார் இளவரசு. இந்த இருவரிடமும் மாட்டிக் கொண்டு தலைவர் தம்பி ஜீவா படும் அவஸ்தைகளும் செமத்தியான மெசேஜுடனும் முடியும் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘தலைவர் தம்பி தலைமையில்’.
இந்த பொங்கலுக்கு வந்திருக்கும் சூப்பர் டேஸ்ட் & ஃபீல்குட் எண்டெர்டெய்ண்மெண்ட் படம் என்பதில் சந்தேகமேயில்லை. இரண்டே கால் மணி நேரமும் நல்ல க்யாரண்டிக்கு உத்தரவாதமான படம்.
அப்பப்ப காமெடி ஏரியாவிலும் கலக்கும் ஜீவா இதில் தனி ஆளாக காமெடி டிராக்கையும் செண்டிமெண்ட் டிராக்கையும் இழுத்து, க்ளைமாக்ஸில் நச்சுனு மெசேஜுடன் படத்தை முடித்திருக்கிறார் டைரக்டர் நிதிஷ் சஹதேவின் பேருதவியுடன். சித்தப்பன் வீட்டை தீவைக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனை மீட்கும் சீனில் ரகளையாக எண்ட்ரியாகிறார் ஜீவா. க்ளைமாக்ஸில் “நீ தெளிவானவன் தான்டா, நாங்க தான் பைத்தியம்” என டச்சிங்குடன் படத்தை முடிக்கிறார் இந்த தலைவர் தம்பி. படம் முழுவதும் வெள்ளை வேட்டி—சட்டை காஸ்ட்யூம் ஜீவாவுக்கு அம்சமா இருக்கு.
ஒரு இரவில் கதையை ஆரம்பித்து மறுநாள் பொழுது விடிந்ததும் படத்தை முடித்துள்ள டைரக்டர் நிதிஷ் சஹதேவ், அந்த இரவுக்குள் இரண்டு பகைக்குடும்பங்களின் கோபம், கொந்தளிப்பு, கல்யாணப் பெண் பிரார்த்தனா நாதனின் மனப்போராட்டம், கொதிப்பு, மற்ற சின்னச்சின்ன கேரக்டர்களின் நடிப்பு, இவற்றுடன் பெரிய தண்ணீர் தொட்டியைக் கூட ஒரு கேரக்டராக்கி, அந்த தண்ணீர் தொட்டி மூலமே க்ளைமாக்ஸில் ஸ்ட்ராங்கான சேதி சொல்லி நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். டைரக்டருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
தனது கேரக்டருக்குத் தேவையான, அளவான, கச்சிதமான நடிப்பை வழங்கி நம்ம மனசுக்குள் நிற்கிறார் ஹீரோயின் பிரார்த்தனா நாதன். சீனியர் நடிகர்களான இளவரசு, தம்பி ராமையாவின் நடிப்பைப் பற்றி நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஜீவாவிற்கு எதிராக வேலை செய்யும் ஜென்சன் திவாகர், பிரார்த்தனாவின் மாப்பிள்ளையாக வரும் நடிகர், அவரின் தம்பி கேரக்டர், இளவரசுவின் மனைவியாக வரும் மணிமேகலை, ஒன்சைடு லவ்வராக வரும் நடிகர் என எல்லா கேரக்டர்களுமே மனதில் நிற்கும்படி திரைக்கதையை வடிவமைத்துள்ளார் டைரக்டர் நிதிஷ் சஹதேவ்.
கேமராமேன் பப்லு அர்ஜுவின் கடின உழைப்பு இரவு நேரக்காட்சிகளில் தெரிகிறது. இரண்டு பாடல்களிலும் பின்னணி இசையிலும் குறிப்பாக க்ளைமாக்ஸில் தண்ணீர் தொட்டி இழிந்து விழும் சீனில் மியூசிக் டைரக்டர் விஷ்ணு விஜய் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
ஒரு கல்யாண வீடு, ஒரு சாவு வீடு இதை வைத்துக் கொண்டு களத்தில் விளையாடியிருக்கிறார்கள் டைரக்டர் நிதிஷும் ஹீரோ ஜீவாவும். படத்தைத் தயாரித்த கண்ணன் ரவிக்கும் குடும்பத்தாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
100% எண்டெர்டெய்ன்மெண்டுக்கும் ஃபீல்குட்டுக்கும் க்ய்ராண்டி இந்த ‘தலைவர் தம்பி தலைமையில்’.
அங்குசம் மதிப்பெண் – 60/100
–ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.