திமுக கூட்டணியில் நாம் தமிழர் கட்சி!
காலப் பெட்டகம் – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 1971
தமிழ்நாட்டின் ஐந்தாவது சட்டமன்றத் தேர்தல் 1971ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பெற்றது. 1969 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு முதல் அமைச்சர் பொறுப்பை கலைஞர் கருணாநிதி ஏற்றுக்கொண்டார். ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் 184 தொகுதிகளில் வெற்றி பெற்றது வரலாற்று சாதனையாகும். இந்தச் சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. மீண்டும் கலைஞர் மு. கருணாநிதி இரண்டாவது முறை தமிழகத்தின் முதல்வரானார்.
1971 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத்தொகுதிகளிலிருந்தும் 43 தனித் தொகுதிகளிலிருந்தும் 2 மலைவாழ் மக்களின் தனித்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1967 இல் தேர்தலில் போட்டியிட்டபோது தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார். 71 தேர்தலில் தந்தை பெரியார் திமுகவை ஆதரித்து பரப்புரைகள் செய்தார். தந்தை பெரியார் தலைமையில் இயங்கி வந்த திராவிடர் கழகம் சார்பில் சேலத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் இராமன் உருவப்படம் செருப்பால் அடிக்கப்பட்டது என்றும் பொதுவெளியில் பிள்ளையார் சிலைகள் பெரியாரால் உடைக்கப்படுகின்றன என்றும் பெரியார் ஆதரிக்கும் திமுகவுக்கா உங்கள் ஓட்டு என்று இந்து நாளிதழில் இந்து மத ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்தனர்.
1971 தேர்தல் முடிவுகள்
திமுக கூட்டணி
திராவிட முன்னேற்றக் கழகம் 184
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8
அனைத்திந்திய பார்வர்டு பிளாக் 7
பிரஜா சோசலிஸ்ட் கட்சி 4
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2
பழைய காங்கிரஸ் கூட்டணி
பழைய காங்கிரஸ் 15
சுதந்திராக் கட்சி 6
சுயேட்சைகள் 8
1969 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. இந்திரா காந்தி தலைமையில் இருந்த காங்கிரஸ் இண்டிகேட் என்றும் இந்திரா காந்திக்கு எதிராக மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா, காமராஜர் போன்ற மூத்த தலைவர்கள் எதிரான காங்கிரஸ் கட்சிக்குச் சிண்டிகேட் என்றும் அழைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 71 தேர்தலில் திமுகவும் இண்டிகேட் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. சிண்டிகேட் காங்கிரஸ் தமிழ்நாட்டில் பழைய காங்கிரஸ் என்னும் பெயரில் காமராஜ் தலைமையில் போட்டியிட்டது. 67 தேர்தலில் தோல்வியடைந்த காமராஜ் 71 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. அதே நேரத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு காமராஜ் வெற்றிபெற்றார்.
திமுக தலைமையில் கூட்டணி அமைத்த இந்திராகாந்தியின் இண்டிகேட் கட்சிக்குத் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஓர் இடத்தைக்கூட திமுக ஒதுக்கவில்லை. மக்களவைத் தேர்தலில் இண்டிகேட் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. 1967 இல் திமுகவோடு கூட்டணி அமைத்த இராஜகோபாலச்சாரியாரின் சுதந்திரா கட்சி 71 தேர்தலில் கூட்டணியிலிருந்து விலகியது. திமுகவின் கூட்டணியில் நாம் தமிழர் கட்சி, முஸ்லீம் லீக், ஃபார்வார்டு ப்ளாக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிரஜா சோசலிஸ்ட் கட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன. திமுகவிற்கு எதிராக பழைய காங்கிரசு, சுதந்திரா கட்சி, சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி, தமிழ் நாடு உழைப்பாளர் கட்சி, தமிழ் அரசு கழகம், குடியரசு கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாரதிய ஜன சங்கம் போன்ற கட்சிகள் எந்த ஒரு கூட்டணிகளிலும் சேராமல் தனித்துப் போட்டியிட்டன.

காமராஜ் தலைமையில் இருந்த காங்கிரஸ் படுதோல்வி அடைந்து 15 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப் பெற்றது. திமுக கூட்டணியிலிருந்து விலகிய சுதந்திராக் கட்சி 6 இடங்களை மட்டுமே வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 205 இடங்களில் வெற்றிப் பெற்றது. திமுக மட்டுமே 184 தொகுதிகளில் வரலாற்று சாதனையான வெற்றியைப் பெற்றது. காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் ப.கக்கன், கே.விநாயகம், டி.எல்.இரகுபதி, என்.காமலிங்கம், பாஷ்யம் ரெட்டி, அனந்தன், கே.ராமதாஸ், டி.சுலோச்சனா ஆகியோர் தோல்வி அடைந்தனர். 67 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அனந்தநாயகி அவர்கள் 71 தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு, தமிழரசு கட்சியின் தலைவர் ம.பொ.சிவஞானத்தைத் தோற்கடித்து வெற்றிப் பெற்றார்.
கலைஞர் மு. கருணாநிதி தலைமையில் அமைந்த அமைச்சரவையில், சத்தியவாணிமுத்து, சி.பா.ஆதித்தனார், பண்ருட்டி இராமச்சந்திரன் உள்ளிட்டோர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர்.
71 சட்டமன்றப் பேரவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பெற்றவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றிப் பெற்ற கே.ஏ.மதியழகன். 72 இல் திமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட பின்னர் சட்டமன்றப் பேரவைத் தலைவராக புலவர் கோவிந்தன் தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்றத் தேர்தலில் 24 இடங்களை எந்தக் கட்சியும் பெற்றிடவில்லை என்பதால் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு காலியாக இருந்தது. எனினும் பழைய காங்கிரஸ் கட்சியில் வெற்றிபெற்ற பி.ஜி கருத்திருமன் அதிக இடங்களில் வெற்றிப் பெற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராகச் செயல்பட்டார். 67 இல் ஆட்சியை இழந்த காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டும் படுதோல்வி அடைந்தது. அந்தத் தோல்வியிலிருந்து இன்றுவரை மீளவில்லை என்பது தொடர் வரலாறாகவே உள்ளது.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.