தமிழகத்துக்கு மோடி வருவதால் அது ஒன்றுதான் நன்மை ! கலாய்த்த கி.வீரமணி !
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவின் நினைவாக திராவிட வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் சார்பில் மதுரையில் தனியார் கல்லூரியில் நடைபெற்றுவரும் “இந்தியாவின் வரலாற்றை சிதைவுகளிலிருந்து மீட்டெடுத்தல்” என்ற தலைப்பிலான ஒரு நாள் மாநில மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் கருணானந்தன், வழக்கறிஞர் மதிவதனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் கி.வீரமணி பேசுகையில், “திராவிட நாகரீகத்தை முழுக்க இல்லாமல் ஆக்க வேண்டும் என முயல்கிறார்கள். ஆரிய நாகரீகம் தான் மேலானது. அதுதான் முதலில் தோன்றியது என மாற்ற நினைக்கிறார்கள். வரலாற்றை திரிக்க முயல்கிறார்கள். சிந்துவெளி நாகரீகம் மூத்த நாகரீகம் என்பதை தலைகீழாக தூக்கி போட்டுவிட்டார்கள். அதற்கும் முந்தைய நாகரீகம் நம்முடையது என்பதை கீழடி இப்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறது. கீழடி தொடர்பாக ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தயாரித்த ஆய்வு அறிக்கையை கூட வெளியே வரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பல நூற்றாண்டுகளாக திட்டமிட்டு வரலாற்று திரிபை செய்து கொண்டிருக்கிறார்கள். திராவிட நாகரீகம் குறித்து பெரிய பொய், புரட்டுகளை கூறி வருகிறார்கள். சமஸ்கிருதம் தனி மொழி இல்லை. சமஸ்கிருதம் என்றால், நன்றாக சமைக்கப்பட்டது என்று அர்த்தம். இந்தோ – ஐரோப்பிய பகுதிகளில் இருந்து இந்தியாவிற்குள் வந்தவர்கள் என்ற அவர்களுடைய வரலாற்றையே இன்று மாற்றி அவர்கள் இங்கேயே இருந்தவர்கள் தான் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியாக, இந்தியாவின் வரலாற்றை பண்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில்கூட, ஆதாரத்தின் அடிப்படையில் இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கினார்கள். வரலாறு என்பது நம்பிக்கை அல்ல, அது சான்றுகளால் ஆனது. ஹரப்பா நாகரீகமே வேத கலாச்சாரம் என்பதை நிறுவ முயல்கிறார்கள். இதைவிட பெரிய புரட்டு இருக்க முடியுமா? சிந்துவெளி நாகரீகம் இல்லாத சரஸ்வதி நதியில் இருந்து துவங்கியதாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
சிந்துவெளி நாகரீகத்தையே வேதகால சரஸ்வதி நாகரீகம் என கூறுகிறார்கள். இவற்றையெல்லாம் நாளைய வரலாறாக மாற்ற முயற்சிக்கிறார்கள். சிறுபான்மையினர் மீது தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் திப்பு சுல்தான் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனர்களை எல்லாம் இசுலாமிய மதத்திற்கு மாற சொன்னதால், 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்துக் கொண்டதாக எழுதி வைத்திருக்கிறார்கள். கீழடி தான் எதிர்காலத்தின் வரலாற்றின் மையப்பகுதியாக மாறப் போகிறது. ஒரு பொய்யை நிறுவுவதற்கு 10 பொய்யை சொல்ல வேண்டும் என்பதால்தான் இப்போது அவ்வளவு புரட்டுக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். திருப்பரங்குன்றம் விவகாரத்திலும் நீதிபதி இப்படித்தான் செய்தார். பொய்யை பேசுவதற்கு அறிவியலை பயன்படுத்துகிறார்கள் பொய்யை உடைப்பதற்காக பயன்படுத்தப்படும் அறிவியலையே இன்று பொய் சொல்வதற்கு பயன்படுத்துகிறார்கள்” என்றார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் அளித்த பேட்டியில், “கவர்னர் உரையுடன் சட்டமன்றத்தை துவங்க வேண்டும் என்ற வழக்கத்தை மாற்ற வேண்டும் என்பது முதல்வரின் நிலைப்பாடு அல்ல; மக்களின் விருப்பமும் அது தான். பேச வேண்டிய இடத்தில் பேசாமல் வெளியில் வந்து பேசிக் கொண்டிருக்கிறார் ஆளுநர். சட்டசபையில் பேச மாட்டேன் என்பவருக்கு மைக்கை ஆன் செய்தால், ஆப் செய்தால் என்ன? அவர் முதலில் ஆன் ஆக உள்ளாரா? சட்டசபையை சல்லித்தன சபையாக ஆக்கக்கூடாது. தார்மீக முறைப்படி பதவியில் தொடர்வதற்கு தகுதியற்றவர் டிடிவி தினகரன். நேற்றுவரை என்னென்னவெல்லாம் பேசினார். எல்லாம் திரிசூலத்தின் மகிமை இதுயார் யார் மீதெல்லாம் வழக்கு இருக்கிறதோ அவர்களை எல்லாம் மிரட்டி கூட்டணியில் சேர்க்கிறார்கள். கூட்டணிக்கு வராவிட்டால் வழக்கு வரும் என பயந்தும் கூட கூட்டணிக்கு வரவைக்கப்படுவார்கள். பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருவதால் எந்த லாபமும் இல்லை. ரோடு ஷோ நடத்துவதால், அவருக்கு நிறைய பூதூவுவார்கள். அதனால் பூ விற்பனை நன்றாக நடக்கும் அது ஒன்றுதான் மோடி வருவதால் நன்மை” என்றார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.