அமைச்சராவார் திமுக எம்எல்ஏ! டைரக்டர் பாலா சொன்னது!
ஒலிம்பியா மூவிஸ் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) படம் – பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் படத்தின் புரமோ நிகழ்ச்சி பிப்ரவரி 07-ஆம் தேதி இரவு சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிலரின் பேச்சு….
*யுகபாரதி*
“நானும் ராஜுமுருகனும் ஒரே ஊர்ல வளர்ந்தோம், ஒண்ணா ஊர் முழுக்க சுத்தின பசங்க நாங்க. அந்த ராஜுமுருகன், இன்னைக்கு இப்படியொரு படத்தை கொடுத்திருக்கார்னு
நினைக்கும்போது எனக்கு பெருமையா இருக்கிறது.
இந்தப் படம் எல்லா வகையிலும் ராஜுமுருகனுக்கு ஒரு பெரிய வெற்றியை தரும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை”.
*இயக்குநர் மாரிசெல்வராஜ்*
“இந்தப் படம் பார்த்த பிறகு, என்னோட அசிஸ்டென்ட்ஸோட சேர்ந்து அதிக நேரம் விவாதம் பண்ண வைத்த படம் இது. இந்த படம் ஒரு விஷயத்தை தெளிவாக கேட்கிறது – எளிய மனிதன் எல்லாத்தையும் இழந்த பிறகு, அவனிடம் மீதமிருக்கும் கடைசி ஆயுதம் என்ன? அந்த கேள்வியையே இந்த படம் ரொம்ப ஆழமாக முன்வைக்கிறது”

*இயக்குநர் லிங்குசாமி*
“மக்களுக்குத் தேவையான, அர்த்தமுள்ள படம் இது”.
*இயக்குநர் பாலா*
“தயாரிப்பாளர் அம்பேத்குமார் மிக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து இப்படிப்பட்ட அர்த்தமுள்ள படங்களை தயாரிப்பது பெரிய விஷயம். இன்னும் இரண்டு படங்கள் இதே ராஜு முருகனுக்கு செய்துவிடுங்கள். நீங்கள் கண்டிப்பாக மந்திரியாகிவிடலாம்.
‘மை லார்ட்’ நல்ல படம் மட்டுமல்ல, நம்பிக்கையை தரும் படம்”.
*தயாரிப்பாளர் அம்பேத்குமார்*
“நான் இனி எத்தனை படங்கள் தயாரித்தாலும் மை லார்ட் மாதிரி ஒரு படம் செய்வேனா எனத் தெரியாது. அந்தளவுக்கு இது மிகச்சிறந்த படம்”.
*நடிகை சைத்ரா*
“இந்தப் படத்தின் ஒரு பகுதியாக என்னை இணைத்துக்கொண்ட ஒலிம்பியா பிலிம்ஸ் நிறுவனத்திற்கும், டைரக்டருக்கும் படக்குழுவிற்கும் மனப்பூர்வமான நன்றி. இந்த அனுபவம் என் வாழ்க்கையிலும், கலைப் பயணத்திலும் என்றும் நினைவில் இருக்கும்”.
*நடிகர் சசிகுமார்*
“இந்த படம் ஒரு கூட்டுப் பயணம். நடிகர்கள், இசையமைப்பாளர், பாடகர்கள், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவரும் தங்களது முழு உழைப்பையும் நேர்மையையும் இந்தப் படத்திற்கு கொடுத்திருக்கிறார்கள்.
நீங்கள் படம் பார்த்து உண்மையாக பேசினால், அதுவே எங்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம்”.
*இயக்குநர் ராஜு முருகன்*
“இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் இயற்கையைவேண்டிக் கொள்வது என்மீது வைத்த அம்பேத்குமார் என்ற மனிதனுக்காகத்தான். அவர் வைத்த நம்பிக்கை பொய்யாகக் கூடாது என்பதே என் மனதில் இருந்த ஒரே எண்ணம்.
சசிக்குமார் அண்ணன் இல்லையென்றால் இந்தப்படம் இல்லை. அன்பையும் நம்பிக்கையையும் பேச பணம் தேவைப்படுகிறது. எப்படியாவது இப்படத்தில் பணத்தை சம்பாதித்து என் தயாரிப்பாளருக்கு தந்து விட வேண்டும். இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென்று நம்புகிறேன்”.

‘மை லார்ட்’–ல் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார் . இதனை தமிழகம் முழுவதும் ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் வெளியிடுகின்றது.








Comments are closed, but trackbacks and pingbacks are open.