கணக்கு காட்டவா சிறப்பு பேருந்துகள்…?
திருச்சி சமயபுரம் சித்திரை தேர்த்திருவிழாவை யொட்டி, தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் நெடுங்கூர் பேருந்து நிறுத்தத்தில் காலை 9.30 முதல் 10.30 வரையில் எந்த ஒரு அரசு பேருந்துகளும் நிறுத்தப்படவில்லை.
கை காட்டியும் நிறுத்தாமல் சென்ற பேருந்துகள்:
9.33 மணி – 4240
9.44 மணி – 3925
9.59 மணி – 4525
10.06 மணி – 3940
10.19 மணி – ***
காலியாக சென்ற சிறப்பு பேருந்துகளும், இன்னும் 10 பேரை ஏற்றிச் செல்லலாம் என்ற நிலையில் சென்ற வழக்கமான பேருந்துகளும் கூட நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்லாதது தான் சோகம்.
சிறப்பு பேருந்துகள் என்ற ஸ்டிக்கர் ஒட்டிச் சென்ற சமயபுரம் வரையில் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் இருக்கைகள் காலியாக இருந்தும், பயணிகளை ஏற்றாமல் சென்றது சிறப்பு பேருந்துகள் இயக்கத்தையே கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துவிட்டதுதான் அவலம்.
பயணிகள் அவதிப்படுவதை பார்த்து பரிதாபப்பட்ட நெடுங்கூர் சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசார் சென்னையில் இருந்து பயணித்த பேருந்தை வழிமறித்து ஏற்றி விட்டார்கள். அதுவும் கூடுதல் கட்டணத்தில்.தனியார் பேருந்துகளோ புளி மூட்டை போல பயணிகளை ஏற்றிச் செல்கிறது.
சிறப்பு பேருந்துகளை வழக்கமான பேருந்துகள் போல எல்லா ஸ்டேஜிலும் நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும் என்பது அல்ல வாதம். சமயபுரம் வரை செல்வதற்காக காத்திருக்கும் பயணிகளை மட்டுமாவது ஏற்றிச் செல்வதில் என்ன கேடு என்பதுதான் கேள்வி?
தமிழகத்தில் பிரபலமான சமயபுரம் கோவிலுக்கு சித்திரை நாளை முன்னிட்டு பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் படையெடுப்பார்கள் என்பதை கருத்தில் கொண்டுதான், மாவட்ட நிர்வாகமும் போக்குவரத்து துறை நிர்வாக இயக்குநரும் கூட்டாக இணைந்து ”சிறப்பு பேருந்து இயக்கம்” என்றொரு தனிச்சிறப்பான முன்னெடுப்பை மேற்கொள்கிறார்கள்.
இதற்காக, இரவு – பகல் பாராமல் அதிகாரிகள் கடுமையாக மெனக்கெடுகிறார்கள். ஆனால், சிறப்பு பேருந்து இயக்கம் என்ற நோக்கத்தை சிதைக்கும் வகையில், இதுபோன்ற ஓட்டுநர்கள் – நடத்துநர்கள் ”கணக்கு காட்டுவதற்காக” டிரிப் இயக்குவது, போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் அதன்வழியே ஆளும் அரசுக்கும்கூட அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதுதான் இங்கே அழுத்தமாக பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.
ஆதிரன்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.