கண் முழுக்க கஞ்சா போதை … கையில் பட்டாக்கத்தி … திருச்சியில் திகில் கிளப்பும் க்ரைம் கும்பல் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கண் முழுக்க கஞ்சா போதை … கையில் பட்டாக்கத்தி …

திருச்சியில் திகில் கிளப்பும் க்ரைம் கும்பல் 

”எங்கள் பகுதியில் இரவு நேரங்களில் வெளியில் நடமாட முடியவில்லை. கஞ்சா போதையில் கையில் பட்டாக் கத்திகளுடன் துணிச்சலாக வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். மொபைல் போன் பறிப்பு, செயின் பறிப்பு, பூட்டிய கடைகளை உடைத்து திருடுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது. வீட்டிற்கு வெளியே வாகனங்களை நிறுத்த முடியவில்லை. எந்நேரம் வேண்டுமானாலும் அவை திருடு போகலாம்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

நேற்று இரவு கூட, முதியவர் ஒருவரை மிரட்டி 1800 ரூபாயை பறித்து சென்றிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அவசர உதவி எண் 100க்கு அழைத்து புகார் சொல்லியிருக்கிறோம். லோக்கல் போலீசில் புகாரும் அளித்திருக்கிறோம். ஆனாலும், குற்றச் சம்பவங்கள் தொடர் கதையாகவே நீடிக்கிறது.” என்பதாக புலம்புகிறார்கள் திருச்சி மாநகராட்சி வார்டு எண் 20 ஐ சேர்ந்த பகுதி மக்கள்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

சந்திரசேகர்.
சந்திரசேகர்.

”திருச்சியின் இதயப் பகுதியாகவும் வணிக மையமாகவும் இயங்கிவரும் பகுதிகளுள் ஒன்று பெரிய கம்மாளத்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். வளையல் வியாபாரம் தொடங்கி நகை வியாபாரம் உள்ளிட்டு பல்வேறு மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் நிறைந்த வியாபார மையம் இது. மலைக்கோட்டை தொடங்கி காந்தி மார்க்கெட் வரையில் குறுக்கும் நெடுக்குமாக நெரிசல் மிகுந்த நூற்றுக்கணக்கான சந்துகளையும் தெருக்களையும் கொண்ட பகுதி இது.

வளையல்காரத்தெரு, நரசிம்மலு நாயுடு தெரு, நடு கல்லுக்காரத்தெரு, நடுவளையல்காரத்தெரு, பெரிய செட்டித்தெரு, சின்ன செட்டித் தெரு, மட்டகாரத்தெரு, சின்ன கம்மாளத்தெரு போன்றவற்றில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் இந்த போக்கு அதிகரித்திருக்கிறது. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 3 பைக்குகள் காணாமல் போயிருக்கிறது. சமீபத்தில் பழைய பாஸ்போர்ட் ஆபீஸ் பின்புறம் கடையின் பூட்டை உடைத்து 50,000 பணத்தை திருடி சென்றார்கள். வயதான பாட்டி ஒருத்தரிடமிருந்து 2.5 பவுன் செயினை வழிப்பறி செய்திருக்கிறார்கள். மூன்று மாதங்களுக்கு முன்பு கண்திறந்த கருமாரியம்மன் கோயிலுக்கு எதிரில் இதுபோன்ற செயலை தட்டிக்கேட்ட ஒருவரை கஞ்சா போதையில் அடித்திருக்கிறார்கள்.

பெரிய கம்மாளத்தெருவின் ஒரு பகுதி கோட்டை போலீஸ் நிலையத்தின் எல்லையிலும்; மற்றொரு பகுதி காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தின் எல்லையிலும் வருகிறது. இரண்டு போலீசாரும் இணைந்துதான் இந்த குற்றச் சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும். காந்தி மார்க்கெட் கிரைம் இன்ஸ்பெக்டர் அருள்ஜோதியும் இது தொடர்பாக விசாரணை நடத்தி சென்றிருக்கிறார். நாங்களும் போலீசில் பலமுறை புகார் அளித்திருக்கிறோம். ஆனாலும், இதுவரை குற்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை.” என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர்.

கத்தியுடன் தெருக்களில்
கத்தியுடன் தெருக்களில்

“பெரிய கம்மாளத்தெரு, சின்ன கம்மாளத்தெரு என நான்கு தெருக்களும் ஒன்றாக இணையும் இடத்தில் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மிகவும் நெரிசலான பகுதி இது. ஜனத்தொகையும் நெருக்கடியான பகுதி. வீடுகளும் மிக நெருக்கமாகத்தான் இருக்கும். ஆனாலும், இரவு ஆகிவிட்டால் சில விடலை பசங்க தைரியமாக வருகிறார்கள். கையில் பட்டா கத்தி போன்ற ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்.

முக்கியமாக கஞ்சா போதையில்தான் திரிகிறார்கள். அவர்களை நெருங்கவே முடிவதில்லை. போகிறவர்கள் வருகிறவர்களை மிரட்டி பணத்தை பறிப்பது; செயினை பறிப்பது; செல்போனை பறிப்பது என செய்கின்றனர். ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சம்பவம் நடக்கும்போதும், அதற்குரிய சிசிடிவி ஆதாரத்தோடு போலீசில் புகார் அளிக்கிறோம். நூறுக்கு போன் செய்கிறோம்.

20வது வார்டு சந்திரசேகர்.
20வது வார்டு சந்திரசேகர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சமீபத்தில் வீட்டின் சுவர் ஏறிக்குதித்து மாடியில் இருந்து லேப்டாப் மற்றும் பணத்தை திருடி சென்றவனை விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தோம். அவன் மீது, 250 ரூபாயை வழிப்பறி செய்தான் என்றும் அதை போலீசார் மீட்டு திருப்பி கொடுத்தார்கள் என்று கேசு போட்டு உடனே வெளியில் விட்டுவிட்டார்கள். அப்புறம் எப்படி அவர்களுக்கு பயம் வரும்? போலீசை கேட்டால், எல்லாருமே கஞ்சா போதையில் இருக்கிறார்கள்.

18 வயதுக்கு கீழானவர்களாக இருக்கிறார்கள். அவர்களை ஜெயிலில் பிடித்து போட முடியாது. அடிக்கவும் முடியாது. நாங்கள் என்ன செய்ய முடியும். நீங்கள்தான் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருந்து கொள்ள வேண்டும் என்று எங்களையே சொல்கிறார்கள்.” என்பதாக வேதனையை தெரிவிக்கிறார் அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியரான சதீஷ்.

பேராசிரியரான சதீஷ்.
பேராசிரியரான சதீஷ்.

“முருகன் டாக்கீஸ் பின்புறம், சத்தியமூர்த்திநகர், இ.பி. ரோடு பகுதிகளை சேர்ந்த சிறுவர்கள்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். இதே பகுதியில் செயல்பட்டு வரும் இரண்டு பார்க்குகளில் பகல் நேரங்களிலே இவர்கள் சரக்கு அடிப்பதும்; கஞ்சா அடிப்பதுமாகத்தான் இருக்கிறார்கள். இவர்களை யாரேனும் தட்டிக்கேட்டால், அவ்வளவுதான் அங்கேயே அவர்களை சுற்றுபோட்டு பொளந்துவிடுவார்கள்.

இவர்கள் மீது போலீசில் புகார் சொன்ன ஏரியா முன்னாள் கவுன்சிலர் ஒருவர் மீதே கொலைவைறி தாக்குதல் நடத்தினார்கள். போலீசு கேசானது. 15-வது வட்ட செயலாளர் எம்.ஆர்.சி. சந்திரன் ஆபிசில் புகுந்து திருடினார்கள். எல்லாமே வயசு பசங்கதான் சார். ஃபுல் கஞ்சா போதை. மூனு நாளைக்கு முன்னாடி, பட்டாக் கத்தியை கையில வச்சிகிட்டு, பூட்டுன கடையை உடைக்கிறதும்; அங்க இருக்கிற டூ வீலரை திருடவும் முயற்சி செய்திருக்கான். சிசிடிவி புட்டேஜ் இருக்கிறது.

டிச-31 ஆம் தேதி இரவு 9 மணி வாக்கில் மணியக்கார தெருவில் ஒரு முதியவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 1800 ரூபாயை பறித்து சென்றிருக்கிறார்கள். ஆறு மணிக்கு மேல பெண்கள் வெளிய வரவே பயப்படுறாங்க சார். எத்தனை முறைதான் சார் போலீசில் கம்ப்ளெயிண்ட் பன்றது? ஒவ்வொரு முறையும் சிசிடிவி புட்டேஜோட கொடுக்கிறோம். யார் புகார் கொடுக்கிறோம்னு திருட்டு பசங்களுக்கு தெரிஞ்சிடுது. அவன் வந்து நம்மளை மிரட்டுறான். பொதுஜனம் எப்படி தைரியமா புகார் கொடுப்பாங்க சொல்லுங்க?” என கேள்வி எழுப்புகிறார், பெயர் வெளியிட விரும்பாத அதே பகுதியை சேர்ந்த ஒருவர்.

திருச்சி க்ரைம்..
திருச்சி க்ரைம்..

20 வது வார்டு கவுன்சிலர் எல்.ஐ.சி. சங்கர் பேசினோம். “நீங்கள் சொல்றது எல்லாம் உண்மைதான் சார். இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடந்துகிட்டுதான் இருக்குது. நாங்களும் என்ன பன்றதுன்னு தெரியாமத்தான் இருக்கோம். பொது ஜனங்களோட ஒத்துழைப்பும் வேணும். ஜனவரி-05 ஆம் தேதி முயல்மார்க் கல்யாண மண்டபத்துல இது சம்பந்தமா ஆலோசனை கூட்டம் ஒன்னு நடத்த இருக்கிறோம். அந்தக் கூட்டத்துல ஸ்ரீரங்கம், பாலக்கரை போலீசு ஏ.சி. ரெண்டு பேருமே வாரோம்னு சொல்லியிருக்காங்க. பொதுமக்களிடமும் கருத்துக்கள் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கிறோம்.” என்கிறார், அவர்.

எல்.ஐ.சி சங்கர் கவுன்சிலர்
எல்.ஐ.சி சங்கர் கவுன்சிலர்

கோட்டை காவல் ஆய்வாளர் பெரியசாமியிடம் பேசினோம். “எங்க கவனத்துக்கும் சில விசயங்கள் வந்தது. நாங்களும் ரோந்து சென்று கொண்டுதான் இருக்கிறோம். காவலர்கள் பற்றாக்குறையோட, வழக்கமான பணி, பந்தோபஸ்து பணினு போதுமான போலீசார் இல்லாத நிலையிலும், நானே அந்த தெருவில தினமும் நடந்து போயிட்டுதான் இருக்கேன். எங்க கண்ணில் யாரும் அப்படி மாட்டவில்லை. ஒரு குறிப்பிட்ட பார்க் பற்றி சொன்னார்கள். அங்கேயும் பட்டா புக் போட்டு பாலோ செய்திட்டுதான் இருக்கிறோம். இருந்தாலும், எங்களால் முடிந்த பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் கொடுத்து கொண்டுதான் இருக்கிறோம்.” என்கிறார்.

கமிஷனர் காமினி IPS
கமிஷனர் காமினி IPS

”18 வயதுக்கும் கீழானவர்கள்; கஞ்சா போதையில் குறிப்பாக இரவு நேரங்களில் நடமாடுகிறார்கள். அப்பகுதியில் உள்ள இரண்டு பார்க்குகளில் பகல் நேரங்களிலே, பார் போல பயன்படுத்தி வருகிறார்கள். எதிர்ப்பவர்களை சகட்டுமேனிக்கு தாக்குகிறார்கள். வெளிப்படையாக இவர்கள் மீது புகார் கொடுக்கவே அஞ்சுகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க; இரவு ஆறுமணிக்கு மேல் வெளியில் நடமாடவே முடியவில்லை” என்பதுதான் மையமான குற்றச்சாட்டுக்களாக நீடிக்கிறது.
பெரிய அசம்பாவிதம் ஏதும் நிகழ்வதற்கு முன்பாக, மாநகர போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

– அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.