பெரும்படத் தயாரிப்பாளரான பெண் பத்திரிகையாளர் !
பெரும்படத் தயாரிப்பாளரான பெண் பத்திரிகையாளர்! – தினமலர் பத்திரிகையின் சினிமா நிருபராக 20 ஆண்டுகளாக பணிபுரிபவர் கவிதா. அந்தப் பத்திரிகையின் யூடியூப் சேனலுக்காக சினிமா பிரபலங்கள் அனைவரையும் பேட்டி எடுத்தவர், எடுத்துக் கொண்டிருப்பவர். பிரபலங்களை மட்டுமல்ல, திறமையாளர்கள், நேர்மையாளர்கள், கடும் உழைப்பாளிகளின் சின்ன பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள், அதில் நடித்திருக்கும் சின்ன நடிகர்—நடிகைகளையும் பேட்டி எடுத்து, அந்தப் படங்கள் ரிலீசாவதற்கு முன்பே, அவைகளைப் பாராட்டி, அவை வெற்றியடைய தன்னால் முடிந்தளவு புரமோட் பண்ணுவார்.
தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவியாக மூன்றாவது முறை பொறுப்பு வகிக்கும் கவிதாவுக்கு, சினிமா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி முகமும் உண்டு.
இப்படிப்பட்ட பன்முகத்திறமை கொண்ட கவிதா, ‘இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ்’ என்ற சினிமாத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, ‘சாக்லேட்’ ‘தாத்தா’ என இரண்டு குறும்படங்களையும் ‘கொலை விளையும் நிலம்’ என்ற ஆவணப்படத்தையும் தயாரித்தார்.
இதையெல்லாம், நமது அங்குசம் இணையத்தில் மார்ச்.23—ஆம் தேதி பதிவிட்டிருந்தோம். அந்த செய்தியை எழுதும் போது குறும்படங்களைத் தொடர்ந்து, பெரும்படங்கள் தயாரிக்க, சக பத்திரிகையாளனாக கவிதாவை வாழ்த்துவோம் என்பதையும் எழுதியிருந்தோம்.

நாம் வாழ்த்திய ஒரு மாதத்திற்குள், பெரும்படத்தயாரிப்பாளராக முன்னேற்றம் கண்டுள்ளார் சகோதரி கவிதா. தனது ‘இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ்’ உடன் மெட்ரோ புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் கைகோர்க்க, தனது சகோதரி மகன் மெட்ரோ சத்யாவை ஹீரோவாக்கி, ‘ராபர்’ என்ற படத்தை மீடியம் பட்ஜெட்டில் தயாரித்து முடித்துள்ளார் கவிதா. ‘மெட்ரோ’ பட டைரக்டர் ஆனந்த் எழுதிய கதையை எஸ்.எம்.பாண்டி டைரக்ட் பண்ணுகிறார்.
கவிதாவின் ‘ராபர்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை மாஸ் ஹீரோ சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளியிட்டு படக்குழுவினரை பெருமைப்படுத்தினார்.வருகிற ஜூலை அல்லது ஆகஸ்டில் ‘ராபர்’ படத்தை ரிலீஸ் செய்ய, ராப்பகலாக உழைத்து வருகிறார் தயாரிப்பாளரான கவிதா.
வெற்றிவசப்பட, சகோதரி கவிதாவை அங்குசம் சார்பாக வாழ்த்துவோம்.
–மதுரை மாறன்
படங்கள்
’ராபர்’ ஃபர்ஸ்ட்லுக் வெளியிடும் சிவகார்த்திகேயன் – படக்குழுவினருடன் எஸ்.கே.