சிறைகைதிகள் -உறவினர்கள் உரையாட நவீன அறை தயார் !
மதுரை மத்திய சிறையில் தற்போது சுமார் 2000 தண்டனை மற்றும் விசாரணை சிறைவாசிகள் உள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் சிறையில் உள்ள கைதிகளை சந்திக்க சிறைவாசிகளின் உறவினர்கள் அளிக்கும் மனுக்கள் அடிப்படையில் ஏராளமானோர் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் கைதிகளிடம் அவர்களது உறவினர்கள் உரையாடும் போது இரைச்சல் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்படும் சூழல் உருவாகும். இதனை தொடர்ந்து சிறைக்கைதிகள் உறவினர்களுடன் நேர்காணல் செய்யும் அறையானது முற்றிலும் நவீனமயமாக்கப்பட்டு இன்று திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் சிறைவாசிகள் எந்தவித தொந்தரவும் இன்றி அவர்களது உறவினரிடம் இண்டர்காம் தொலைபேசி வசதி மூலம் பேசும் வசதியாக சுமார் 70,000ரூபாய் மதிப்பீட்டில் 15 க்கும் மேற்பட்ட இண்டர்காம் தொலைபேசிகள், கண்ணாடி தடுப்பு அறைகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு முற்றிலும் நவீனமாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை தமிழக சிறைத் துறையில் புழல் மத்திய சிறை மற்றும் கோயமுத்தூர் மத்திய சிறைகளை தொடர்ந்து மதுரை மத்திய சிறைக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மத்திய சிறையில் நவீன சிறைவாசிகள் நேர்காணல் அறையை மதுரை சரக துணைத் தலைவர் பழனி திறந்து வைத்தார். அவருடன் சிறை கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து இன்டர்காம் வசதியின் செயல்பாடுகள் குறித்து போலீசார் விளக்க அளிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து தமிழக அரசின் அறிவுரையின்படி திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
– மதுரை ஷாகுல்