அன்பு விஜய் அவர்களுக்கு ஏழை கவிஞன் எழுதுவது…..
அன்புள்ள அரிஸ்டோகிரட்டிக் அரசியல்வாதி மெர்சல் விஜய் அவர்களுக்கு ஏழைக் கவிஞன் எழுதுவது.
உங்கள் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிகளை பார்த்தேன் சற்று நேரத்தில் அலைபேசியை அணைத்து விட்டேன். கீறல் விழுந்த பழைய இசைத்தட்டைக் கேட்பது போல இருந்தது. பாயாசத்தையும் பாசிசத்தையும் ஒரே டம்ளரில் ஊற்றி குடிக்கக் கூடிய உங்கள் அறியாமை தெளிவாகத் தெரிந்தது.
கற்றாழைச் செடிக்கும் தாழம் செடிக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை. இரண்டையும் ஒரே கோட்டில் வைத்து பார்க்கிறீர்கள்.
அதே சமயம் பிஜேபியை தொட்டுப் பார்க்க கூட உங்களுக்கு துணிவில்லை. ஆனால் திமுகவை கசக்கிப்பார்க்க துடிக்கிறீர்கள்.
கல்வி நிதியை கொடுப்பவனுக்கும், அதை பெறுபவனுக்கும் உங்கள் தராசில் ஒரே நிறைதானா ? எடை தானா ? … உங்கள் பேச்சின் தொனி எப்படி இருக்கிறது ?மத்திய அரசு கொடுக்கத் தயாராக இருப்பது போலவும், தமிழக அரசு அதைப் பெற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுவது போலவும் ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறீர்கள்..
இதிலிருந்து நிகழ்கால அரசியல் உங்களுக்குப் புரியவில்லை .நிகழ்கால அரசியல் புரியாத நீங்கள் இறந்த கால அரசியலையும் எதிர்கால அரசியல் எவ்வாறு கணக்கிடப் போகிறீர்கள்.
மொழிப் பிரச்சனையை உங்களுடைய அணில் அளவு மூளையை வைத்துக் கொண்டு அளவிடுகிறீர்கள். எவ்வளவு ஒரு தீவிரமான பிரச்சனை! எத்தனை உயிர்கள் பலியான பிரச்சனை. தந்தை பெரியார் முதல் போராடிய ஒரு பிரச்சனையை எல் கே ஜி, யு கே ஜி மாணவர்களுக்கு இடையே நடக்கும் சிறு பிள்ளைத்தனமான சண்டை போல சித்தரிப்பதன் மூலமாக இந்தி எதிர்ப்பை கொச்சைப்படுத்துகிறீர்கள்.
மொத்தத்தில் உங்களுக்கு கூட்டத்தை பார்த்தவுடன் கதாநாயக பிம்பம் வந்துவிடுகிறது. அதில் பேசக்கூடிய ஏகத்தாளமான ஒரு பாணி உங்களை அறியாமலேயே வந்து விடுகிறது. அது வரத்தானே செய்யும். நீங்கள் வெறும் சினிமாக்காரர், சினிமாக்காரர் மட்டுமே.
ஒரு கணம் விஜயகாந்த் அவர்களின் அரசியல் வரலாற்றினைப் பாருங்கள்
நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் . நான் பார்த்துள்ளேன். காவேரி பிரச்சனை முதல் ஈழப் பிரச்சனை வரை கலை உலகத்தை திரட்டி போராடிய மாபெரும் போராளி விஜயகாந்த் .
அது மட்டுமல்ல அவருடைய படங்கள் புரட்சியும் எழுச்சியும் மிக்க படங்கள் தவிர அவர் திரை உலகிலேயே ஒரு தலைவராக தன்னை உருவாக்கிக் கொண்டார். எம்ஜிஆர் போல அரசியல் சினிமா இரண்டும் இல்லாவிட்டாலும் அவர் திரை உலகில் ஒரு* கேப்டனாக *தான் இருந்தார் . நடிகர் சங்கப் பிரச்சனையை அற்புதமாக கையாண்டார். அரசியலுக்கு அவர் வந்த பிறகு தனியாளாக நின்று ரிசிவந்தியத்தில் வெற்றி பெற்றார்.
எந்தக் மூன்றாவது கட்சியும் பெறாத பதினோரு சதவீத வாக்குகளை தமிழகம் முழுவதும் பெற்றார். அவருடைய வீழ்ச்சி என்பது இயக்கத்தின் வீழ்ச்சி அல்ல.
தனி மனிதனின் தனிப்பட்ட செயல்கள் காரணமான வீழ்ச்சி. அதோடு அவருடைய உடல் நலம் ஒரு காரணம் இல்லாவிட்டால் அவர் ஆரோக்கியமாக இருந்திருந்தால் நீங்கள் இந்த மேடையில் நிற்கக் கூட வாய்ப்பு கிடைத்திருக்காது.
கணக்குப் போட்டுப் பார்த்தால் அவருக்கு இருந்த ஒரு மாபெரும் சமுதாயம்.. நாயக்கர் சமுதாயம்… போன்ற ஒரு பின்னணி உங்களுக்கு இல்லை. பல மாவட்டங்களில் அவர்கள் வலுவாக இருந்தாலும் கொங்கு மண்டலத்தில் அவர்கள் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தார்கள். உங்களுக்குப் பின் யார் இருக்கிறார்கள் ? அப்படிப்பட்ட விஜயகாந்த இருந்தாலும் ஆரோக்கியமாக இருந்திருந்தாலும் இனியும் ஒரு பத்து சதவீதம் கூட வாங்கி இருக்கலாம் தவிர ஆட்சியை எந்த காலத்திலும் பிடித்திருக்க முடியாது. அவரோடு ஒப்பிடும் பொழுது நீங்கள் சிறுவர்கள் விளையாடும் கோழி குண்டு அளவு மிக மிகச் சின்னவர் மட்டுமல்ல வேடிக்கை மனிதர்.
உங்களைச் சுற்றி இருக்கக்கூடிய அரசியல் முகம் யார்? நீங்களே அரசியல் முகம் அல்ல. உங்களைச் சுற்றி இருப்பவர்கள் வணிகர்கள் அவருக்கும் மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை சமூக ஊடகம் தவிர மற்ற யாரும் அறிந்திருக்காத முகங்கள். இவர்களை வைத்துக் கொண்டு நீங்கள் ஆட்சியைப் பிடிப்போம் .திமுகவை அகற்றுவோம் என்று சவடால் பேச்சு பேசுகிறீர்கள்.
எழுபதுக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை நீங்கள் போட்டு இருக்கலாம் . திமுக அதிமுக போல பூத் கமிட்டிகளை நீங்கள் நியமித்திருக்கலாம். மற்றபடி அதிமுக, திமுக கட்சிகளின் வாக்கு சேகரிக்கும் ஆற்றலில் ஒரு சதவீதம் கூட அவர்களிடத்தில் நிச்சயம் இருக்காது . காரணம் கமலஹாசன் ஞானோதயம் வந்த பிறகு சொன்ன வார்த்தைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
வாக்காளன் வேறு. ரசிகன் வேறு
அதிமுக திமுக கட்சிகளில் ஒவ்வொரு மாவட்ட செயலாளர் தனிப்பட்ட சாதிய செல்வாக்கும் ஓரளவு அரசியல் செல்வாக்கும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக திமுகவை பொருத்தவரை சிற்றரசர்கள் போலவே தங்களுடைய மாவட்டங்களை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். அந்த கோட்டைகளை உடைத்துக் கொண்டு உங்களுடைய குறும்படை நுழைந்து விடும் என்று நீங்கள் கற்பனை செய்தால் அது கற்பனை மட்டுமே.
எந்தக் காலத்திலும் உங்கள் தலைமையில் நீங்கள் கூட்டணியை அமைக்க முடியாது.
அப்படி அமைக்கக்கூடிய சூழல் வரவே வராது . திமுக கூட்டணிக்கு வர மாட்டீர்கள் . உங்களுக்கு நான் கூறும் யோசனை அதிமுகவோடு கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள்.
துணை முதல்வர் போன்ற கோரிக்கைகள் வைத்துக் கொள்ளுங்கள். தந்தால் பெற்றுக் கொள்ளுங்கள். அப்படி தந்தால் ஆட்சியில் பங்கு என்பதை எடப்பாடி அவர்கள் ஏற்றுக் கொண்டார் என்று பொருள். ஆனால் என்னுடைய அனுமானத்தில் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார் . கூடுதல் இடங்களை கூட்டணி கட்சி என்ற விதத்தில் உங்களுக்கு தரலாம். அவ்வளவுதான்
மின்னம்பலம் போன்ற ஊடகங்கள் சொல்லக்கூடிய செய்தி துணை முதல்வர் அத்தோடு இரண்டரை ஆண்டுகள் அதிமுகவும் நீங்களும் பிரித்துக் கொள்வோம் என்று பேசுவதாக செய்திகள் வருகின்றன . அதற்கு அதிமுக ஒத்துக்கிட்டாலும் இப்படிப்பட்ட ஒரு அரசாங்கத்தை தமிழக மக்கள் ஒரு காலத்தில் அங்கீகரிக்க மாட்டார்கள் .
அந்த சிந்தனையை தமிழர்களுக்கு வராது . அது ஒவ்வாமை மிக்கது. ஆகவே நீங்கள் ஜூனியர் பார்ட்னராக அதிமுகவோடு இருக்கலாமே தவிர ஆட்சியில் பங்கு என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
நீங்கள் பேச்சுக்கத்தான் எம் ஜி ஆர் போல என்று சொல்லுகிறீர்கள் அவர்களைப் போல மக்கள் மத்தியில் நின்று பேசும் சாதுரியமோ இறங்கி வரக்கூடிய பக்குவமோ உங்களுக்கு இல்லை. நீங்கள் ஜெயலலிதாவாக உருவாகிக் கொண்டு வருகிறீர்கள். ஆனால் அவரை போல ஆளுமை ஒரு துளிகூட உங்களிடம் இல்லை.
தரையில் கால் பாடாமல் மக்களோடு கைகுலுக்காமல் எளிய மனிதராக உங்களால் அரசியல் செய்ய முடியாது.
தனித்து நிற்போம் என்று அடம்பிடித்தால் இரண்டு தேர்தல்களை கூட உங்கள் கட்சியால் சந்திக்க முடியாது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஏனென்றால் குறைந்த அளவு வாக்கு சதவீதத்தோடு நீங்கள் நின்று விடுவீர்கள். ஆயிரம் குறை இருந்தாலும் திமுகவுக்கு மாற்று அதிமுக தான் ஆகவே அதிமுகவோடு கூட்டணி வைத்துக்கொண்டு சில இடங்களை பெறுவதன் மூலம் உங்கள் கட்சிப் பெயரை அன்றாடம் ஒலிக்கச் செய்யுங்கள் மற்றபடி ஆட்சி அதிகாரம் உங்கள் கைக்கு வரும் என்று கனவு கூட கண்டு விடாதீர்கள். அப்படி ஒரு கனவு வந்தால் உடனே எழுந்து விடுங்கள். அதற்கு மேல் கனவு கண்டுகொண்டு இருந்தால் உங்கள் உடம்புக்கு ஆகாது.
புரிதலுக்கு நன்றி
இப்படிக்கு உங்களை அறிந்த நீங்கள் அறியாத ஏழை கவிஞன்
ஜெயதேவன்