ஜல் ஜல் கொலுசு சத்தம் ! ரெட் கலர் ஜாக்கெட்டில் உலா வரும் டீன் ஏஜ் பேய் ?
ஜல் ஜல் கொலுசு சத்தம் ! ரெட் கலர் ஜாக்கெட்டில் உலா வரும் டீன் ஏஜ் பேய் ? ஐ. (AI) தொழில்நுட்ப காலத்திலும், கிராபிக்ஸ் வீடியோவை வெளியிட்டு பேய் என்று பரப்பி வருகிறது ஒரு கூட்டம். அதையும் பார்த்து விட்டு ஆமாம் பேயே தான் என்று அலறி வருகிறது இன்னொரு கூட்டம்.
திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களை இந்த ‘பேய் பிசாசு’களுக்கு ரொம்பவும் பிடித்து விட்டது போல ! கடந்த மாதம் போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் மையம்கொண்ட பெண் ‘பேய்’ ஒன்று திருவண்ணாமலை வழியாக, ஆரணி சிப்காட் பக்கம் நகர்ந்துள்ளது போல.
இதற்கு எவிடன்ஸ் தான் அந்த வீடியோ. “வெறும் அலறல் சத்தம் மட்டுமே பதிவான வீடியோ. கூடவே, பைக் வெளிச்சத்தில் ரெட் கலர் ஜாக்கெட்டில், சற்றே முகம் சிதைந்த நிலையில் இளம்பெண் உருவம் தோன்றும்” அந்த வீடியோ தான், போச்சம்பள்ளி , ஊத்தங்கரை செங்கம் சுற்று வட்டாரங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஹிட்ச்காக்கின் திகிலூட்டும் திரைப்படங்களைப் போலவே, இந்த டீனேஜ் ‘பேய்’ -க்கும் ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கிறது.
“கடந்த மே மாசம் பௌர்ணமி அன்று … கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் … ஒரு ஷூ கம்பெனியில் வேலை பார்க்கும் இரு இளைஞர்கள் நைட் டூயூட்டியை முடித்துவிட்டு … அவர்கள் ஊரான கல்லாவிக்கு பைக்கில் சென்று கொண்டு இருந்தார்கள் …
ஜல் ஜல் கொலுசு சத்தம்… ரெட் கலர் ஜாக்கெட் … வயசு பொண்ணு … கூடவே அலறல் சத்தத்தோடு அந்த உருவம் அருகே வர … அதை அப்படியே வீடியோ எடுத்திருக்கிறார்கள் … நெருங்கி வந்தபோது தான் தெரிந்திருக்கிறது சிதைந்த முகம் … கீழே பார்த்தால் தரையில் கால்கள் படவில்லை … அலறி எடுத்து ஓடியவர்கள் தான் … வீடு போய் சேர்வதற்குள் கடும் காய்ச்சல் …” இதுதான் அந்த ஃப்ளாஷ் பேக்.
இந்நிலையில், “அதே டெய்லர், அதே வாடகை” பார்த்திபன் பட வசனம் போல, ஆரணி அருகே அந்த ‘பேயை’ கண்டதாக மற்றொரு வதந்தி.
“திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள பாளையத்தை சேர்ந்த பாலாஜி. தச்சூருக்கு சொந்த வேலையாக போனவர், நள்ளிரவில் வீட்டிற்கு பைக்கில் கிளம்பினாராம். வடுகசாத்து ஏரிக்கரை பக்கம் வண்டி போனதாம். அப்போது திடீரென கொலுசு சத்தம். கூடவே, பெண்ணின் அழுகுரல். பைக்கை நிறுத்தி விட்டு சுற்றி முற்றி பார்க்கிறார். கண்ணில் ஒன்றும் தென்படவில்லை. ஒன்றுமில்லை என்று திரும்பி பார்த்தால் ஒரு பெண் உருவம் நிற்கிறது. பதறிப்போன பாலாஜி பைக்கை எடுக்க, தடுத்துக்கொண்டு போகாதே வா வா என்கிறது அந்த ‘பேய்.’ அதிர்ச்சியடைந்த பாலாஜி, பைக்கை வந்த வழியே திருப்ப அப்போதும் விடாமல் வா வா என்றதாம் ‘பேய்.’ பாலாஜியும் இதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டாராம்.
இந்த வீடியோ தற்போது திருவண்ணாமலை மாவட்ட மக்களின் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஒருவனுடைய ஒரே ஒரு புகைப்படம் இருந்தால் போதும், ஒரு மணி ஓடும் படமாகவே மாற்றிவிடலாம். அதேபோல் தான் ஒருவருடைய குரலாகவே ஒலிக்க செய்ய அவரது சில விநாடிகள் குரல் மாதிரிகள் போதுமானது. அது போல் உருவான கிராபிக்ஸ் வீடியோவை பேயாக உலவ விட்டிருக்கிறார்கள் சில குசும்பு பிடித்த ஆசாமிகள்.

பேயை கண்டதும் தானாக போகும் சிறுநீரைக் கூட, கட்டுப் படுத்த முடியாதவர்கள், அந்த பதட்டத்திலும் போனை எடுத்து எப்படிடா, வீடியோ ஷூட் எடுக்க முடியும்? என்று எவரும் கேட்கவில்லை! மாறாக, வதந்தியாக பரவி வருகிறது.
திராவிடர் கழகத்தின் தர்மபுரி மண்டல செயலாளர் திராவிடமணியிடம் பேசினோம், “ நான் கூட அந்த வதந்திகளை படித்தேன்.
நம்ம போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் சுற்றி திரிந்த அந்த பேய் தற்போது ஆரணிக்கு ஷிப்ட்டாகி விட்டதா? என்றவர், அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலும் பேய், பிசாசு இருப்பதாக இன்னும் நம்பிக்கொண்டிருப்பது முட்டாள்தனமானது.
மூடநம்பிக்கைகளை பரப்புபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’’ என்கிறார். மாவட்ட நிர்வாகம் தான் இந்த வதந்தியை தடுத்து நிறுத்தி, பொருத்தமான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
கா.மணிகண்டன்