திருப்பத்தூரில் ஜோராக நடக்கும் கிராவல் மண் கடத்தல் ! தகவல் கொடுத்தவரை காட்டி கொடுத்த போலீஸ் ?
திருப்பத்தூரில் ஜோராக நடக்கும் கிராவல் மண் கடத்தல்! தகவல் கொடுத்தவரை காட்டி கொடுத்த போலீஸ்?திருப்பத்தூர், குருசிலாப்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பனூரில் கனிம வளம் கொள்ளையடிப்பதில் போட்டி. இருதரப்பினர் மோதல். நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர் ? என்ற கேள்வியோடு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
குருசிலாப்பட்டு 1 வது வார்டுக்கு உட்பட்ட பாப்பனூர் பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஒத்துழைப்புடன் சட்டவிரோத மண் கடத்தல் நடைபெறுவதாக, அந்த பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்ற இளைஞர் காவல் உதவி எண் 100 – க்கு தகவல் கொடுத்துள்ளார் . அடுத்த கணமே தகவல் கொடுத்த இளைஞர் மண் கடத்தும் கும்பலால் தாக்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கனிம வளம் கொள்ளை தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்து பொதுமக்கள் சார்பில் வைரல் வீடியோ வெளியான நிலையில், அங்குசம் சார்பில் விசாரணையில் இறங்கினோம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட அரசு புறம்போக்கு ஏரி மற்றும் குளங்களில், விவசாயப் பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம் என்று திருப்பத்தூர் ஒன்றிய வருவாய்த்துறையினர் விவசாயிகளுக்கு அனுமதி அளித்துள்ளனர்.
விவசாயிகள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் வழங்கியிருந்த அனுமதியைப் பயன்படுத்தி வணிக நோக்கில் பிச்சனூர், தாதவள்ளி , பாப்பனூர் போன்ற அனுமதிக்கப்படாத இடங்களில் வண்டல் மற்றும் கிராவல் மண்ணை சிலர் வெட்டிக் கடத்தி, முறைகேடாக விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, குருசிலாப்பட்டு ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பாப்பனூரில் கடந்த ஒருமாத காலமாக வருவாய்த்துறை அனுமதி பெற்று ஒன்றிய அலுவலகப் பணிக்காக மண் எடுப்பதாகவும் கூறி சிலர் கிராவல் மண் எடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

பாமகவைச் சேர்ந்த லட்சு என்ற லட்சுமணன் மற்றும் திமுகவை சேர்ந்த சிவ சண்முகம் ஆகியோர் இரண்டு குரூப்பும் போட்டி போட்டுக் கொண்டு மண் எடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, இருபது நாட்களுக்கு முன்னரே வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகாராக தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள்.
கூடவே, வரைமுறையின்றி மண் எடுப்பதை கேள்வி கேட்ட அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம், “அதிகாரிகள் அனுமதியோடுதான் மண் எடுக்கிறோம். எங்கே வேண்டுமானாலும் போய் சொல்லிக் கோ. எங்களை ஒன்றும் செய்ய முடியாது “ என்று திமிராகவும் தெனாவெட்டாகவும் பதில் சொல்லியிருக்கிறார்கள்.
இதில் உச்சக்கட்டமாக, “எங்கள் பகுதியை சேரந்த இளைஞர் ஒருவர் 100 க்கு தகவல் கொடுத்துள்ளார். அடுத்த கணமே தகவல் கொடுத்த அந்த இளைஞரை மண் கடத்தலில் ஈடுபட்ட சிவ சண்முகம் என்பவரின் தம்பி தாக்கியதில், படுகாயம் அடைந்த அந்த இளைஞர் தற்போது அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வேலியே பயிரை மேய்ந்த கதையாக, தகவல் கொடுத்தவரையே போலீஸ் காட்டி கொடுத்தால் நாங்கள் எப்படி அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியும்” என கேள்வி எழுப்புகிறார்கள் அப்பகுதி மக்கள்.
பொதுமக்களின் எதிர்ப்பு; மற்றும் உள்ளூர் இளைஞர் தாக்கப்பட்டது; ஆதாரத்துடன் வெளியான வீடியோ ஆகியவற்றின் காரணமாக, இந்த பிரச்சனை மேலிடம் வரை சென்றதால் வேறுவழியின்றி, ஆர்டிஓ உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் போலீசில் புகார் அளித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிய திருப்பத்தூர் டிஎஸ்பி செந்திலை தொடர்பு கொண்டோம். “யாரு உங்களுக்கு தகவல் சொன்னது? நீங்கள் எந்த ஊரு என்று விசாரித்தவர், “நீங்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரடியாக போங்க. அப்பதான் பதில் கிடைக்கும்” என்றும்; மேலும், “உங்களுக்கு யார் தகவல் கொடுத்தார்களோ அவர்களிடமே போய் கேளுங்கள்” என்றார் மிகவும் ‘பொறுப்பாக’ !
இதனை அப்படியே உங்களது பதிலாக வைத்துக் கொள்ளலாமா என்றதும், சுதாரித்தவர், “இரண்டு தரப்பினர் மீதும் எப்ஐஆர் போட்டுள்ளோம். மேலும், விசாரணை நடந்து வருகிறது” என்று முடித்துக் கொண்டார்.
மண் கடத்தலை விட, 100க்கு போன் செய்த இளைஞர் மண் கடத்தல்காரர்களின் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதுதான் பேரதிர்ச்சியாக இருக்கிறது.
கா. மணிகண்டன்