மோசடிகளின் காலமா? பேராசைகளின் காலமா ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

Frontline hospital Trichy

ஒரு காலத்தில் நடுத்தர மக்களின் சேமிப்பு பழக்கம் என்றாலே அஞ்சலகமும் எல்.ஐ.சி.யும் என்பதாகத்தான் இருந்தது. சாமான்ய மக்களின் சேமிப்பு சமையலறையின் அஞ்சறை பெட்டிகளும், கை தவறினால் சிதறிப்போகும் மண்ணாலான உண்டியல்களுமாக இருந்தது. அன்றாடத் தேவைக்கு அதிகமான பணமிருந்தாலும், அதை ஏதேனும் ஒரு அரசுடமையாக்கப்பட்ட வங்கியிலோ அல்லது நிலத்தில் போடுவது என்பதுதான் அதிகபட்ச ‘முதலீடு’ என்பதாக இருக்கும்.

இன்றைய கேஜட் உலகத்தில், விரல் நுனியில் ஆன்லைன் டிரேடிங் சர்வசாதாரணமாக விளையாடுகிறது. பங்குச்சந்தைகளில் முதலீடு, தங்கப் பத்திரங்களில் முதலீடு, பிட்காயின் என முதலீட்டின் எல்லை விரிவடைந்திருக்கிறது. செலவை சிக்கனமாக்கி எதிர்காலத் தேவைக்காக சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் மாறி, இன்று ஒரே நொடியில் கோடீஸ்வரனாகிவிட மாட்டோமா என்ற பேராசை பிடித்தாட்டுகிறது. இந்த பேராசைக்கு பாமரன் படிப்பறிவு பெற்றவன் என்ற பாகுபாடு கிடையாது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

‘ஆசையைத் தூண்டும் வாய்வீச்சு’ ஒன்றையே முதலீடாக்கி கல்லா கட்டிவரும் கம்பெனிகள் கொழிக்கும் காலமாக மாறியிருக்கிறது. ஊருக்கு ஊர் கம்பெனிகளின் பெயர்கள் மாறுபடுகிறது. நபர்கள் வேறுபடுகிறார்கள். பணம் கட்டி ஏமாந்த மக்கள் வீதிக்கு வருவது மட்டும் மாறாமல் தொடர்கிறது. அதிகவட்டிக்கு ஆசைப்பட்டதுதான் இந்த ‘ஏமாந்த கதைகளின்’ அடிநாதமாகவும் இருக்கிறது.

தீபாவளி சீட்டு, பண்டிகைக்கால சீட்டு, நகைச்சீட்டு, மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி ஏமாற்றி விட்டார்கள் என்பதில் தொடங்கி, வாயில் நுழையாத பெயர்களை கொண்ட ஏகப்பட்டு நிறுவனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. ”நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டு வருகிறேன்” என்ற கதையாக, பங்குச்சந்தையில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கித் தருகிறேன் பேர்வழி என்ற பெயரில் பெருங்கும்பலே இயங்கி வருகிறது.

முன்பின் தெரியாத நபர்களை நம்பி நாம் ஏலச்சீட்டு கட்டிவிடுவதில்லை. நேரடி பரிச்சயம் இல்லாவிட்டாலும்கூட, ஏதோ ஒருவகையில் உறவினராகவோ, நண்பர்களாகவோ, அல்லது நமது நம்பிக்கைக்குரியவர்கள் பரிந்துரைக்கும் நபர்களாகவோத்தான் இருப்பார்கள். ஆனால், மற்ற நிதி நிறுவனங்களைப் பொறுத்தவரையில் இதுபோன்ற நேரடி அறிமுகம் அவசியமில்லாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அந்நிறுவனத்தின் முகவர்கள்தான் நம்மோடு நேரடி தொடர்பில் இருக்கிறார்கள். முகவர்களாக இருக்கும் அந்த ‘நம்பிக்கைக்குரியவர்களை’ நம்பித்தான் முதலீடும் செய்கிறோம்.

ஒருவேளை அந்நிறுவனம் ஏமாற்று நிறுவனமாக அமைந்துவிட்டால், நம்மால் அதிகபட்சம் ”கட்டிய பணத்தை திருப்பிக்கொடு” என்று முகவர்களின் சட்டைக் காலரைத்தான் பிடிக்க முடியும். ”நானே அந்நிறுவனத்தை நம்பி இவ்வளவு முதலீடு போட்டிருக்கிறேன். என்னையும் சேர்த்துதான் ஏமாற்றியிருக்கிறது. நான் என்ன செய்ய?” என அந்த முகவரும் கையை விரித்துவிடுவார். பிறகு, அந்த ஏமாற்றுக் கம்பெனிக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்து, நீதிமன்றத்தை நாடி போட்ட பணத்தை திரும்பப் பெறுவதற்குள் நாயலைச்சல், பேயலைச்சல் பட வேண்டியதாகிவிடுகிறது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கொடுப்பதைவிட, ”அதிக வட்டி” தருகிறோம் என எந்த ஒரு நிறுவனம் சொல்கிறதோ, அப்போதே அந்நிறுவனம் ஏன் ஒரு பிராடு நிறுவனமாக இருக்கக்கூடாது? என்ற அலாரம் நமக்குள் அடித்திருக்க வேண்டுமல்லவா? வங்கியில் போட்டால் போட்ட பணம் இரட்டிப்பாக இப்போதைய நிலையில் எட்டு வருடங்களுக்கு மேல் ஆகும் என்ற நிலையில்; மூன்றே ஆண்டுகளில் இரட்டிப்பாக்கித் தருகிறோம் என்று எவர் ஒருவர் சொன்னாலும்; ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளால் முடியாத ஒன்று, இவர்களால் மட்டும் எப்படி சாத்தியமாகிறது? என்ற கேள்வி இயல்பாகவே எழ வேண்டுமா இல்லையா?
மிக முக்கியமாக, வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு குருவி போல சிறுக சிறுக சேர்த்த பணத்தை முதலீடு செய்யப்போகிறோம் அல்லது மாதந்தோறும் குறப்பிட்ட அளவு பணத்தை தவணை முறைகளில் கட்டப்போகிறோம் என்றால் அந்த நிறுவனத்தை பற்றிய அடிப்படை விவரங்களை அறிந்துகொள்ள முயற்சிக்க வேண்டாமா? சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தில் காட்சிப்படுத்திருக்கும் சம்பவங்களைப் போலத்தான், முதலில் பல்வேறு கவர்ச்சிகரமான வார்த்தை ஜாலங்களால் மக்களின் ஆசையைத் தூண்டிவிடுகிறார்கள்.

”டி.வி.யில பேப்பர்ல விளம்பரம் கொடுத்தா கோடி கணக்கில் செலவாகும். அவன்கிட்ட கோடிய கொட்றதுக்கு பதிலா, வாய்வழியா எடுத்து சொல்லி விக்கிறதாலதான் கம்மி விலைக்கு கொடுக்க முடியுதுனு…” மொக்கையான ஒன்றை நம் தலையில் கட்டும் மல்டிலெவல் மார்க்கெட்டிங் பிசினஸ் போலவே, இவர்களும் பல்வேறு கம்பி கட்டும் கதைகளை கைவசம் வைத்திருக்கிறார்கள். நிலத்தில்தான் முதலீடு செய்யப்போகிறோம். ஒரு கோடி ரூபாய்க்கு சென்ட் கணக்கில்தான் சிட்டிக்குள் நிலத்தை வாங்க முடியும். அதே ஒரு கோடியை கொண்டு சிட்டியிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளி விவசாய நிலத்தை ஏக்கர் கணக்கில் வாங்கிவிட முடியும். பின்னர், இதனை நாமே வீட்டு மனை பட்டாவாக மாற்றி பிரித்துக்கொள்ளலாம். கூடவே, வாங்கிப்போட்ட நிலத்தைச் சுற்றிலும் அன்றாடத் தேவைகளான மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள், பள்ளிக்கூடங்கள், சூப்பர் மார்க்கெட்டுகளை நாங்களே நிர்மாணிக்கப்போகிறோம். இதனால், அடிமனையின் மதிப்பு மிகக்குறுகிய காலத்தில் கிடுகிடுவென உயர்ந்துவிடும், என்று அவர்கள் சொன்னதை நம்பி பணத்தை போட்டவர்கள் எல்லாம் இன்று போட்ட பணம் கிடைக்காதா? என்று விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

ரியல் எஸ்டேட் பிசினஸ் பார்க்கத்தான் டி.டி.சி.பி.யும் (DTCP), ரெராவும் (RERA) அனுமதி வழங்குகின்றன. ஆனால், அந்த இரண்டை காட்டி ஒரு நிதிநிறுவனத்தை போல இலட்சக்கணக்கான வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை வசூலித்த கம்பெனிகளும் இருக்கத்தான் செய்கின்றன. எந்த ஒரு நிறுவனத்தில் நாம் முதலீடு செய்வதாக இருந்தாலும், முதலீட்டு பத்திரம் என்பது மிக முக்கியமானது. அதில் நம்மை பற்றிய விவரங்கள், கம்பெனியின் விவரங்கள், எவ்வளவு தொகை முதலீடு செய்திருக்கிறோம் என்ற விவரம், எப்போது முதிர்வு பெறும், முதிர்வின் முடிவில் எவ்வளவு கிடைக்கும்? என்பது போன்ற அடிப்படையான விவரங்கள் அதில் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
மாதம் ஆயிரம் ரூபாய் கட்டும் எல்.ஐ.சி. பாலிசியில்கூட, இந்த விவரங்கள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். ஆனால், இதுபோன்ற எந்த ஒரு ஆவணமும் இல்லாமல், ஆதாரம் இல்லாமல், தெருமுனை செட்டியார் கடையில் எழுதி கொடுத்த துண்டுச்சீட்டு போல சம்பந்தம் இல்லாத ரசீதை பெற்றுக்கொண்டு இலட்சக்கணக்கில் பணத்தை கொட்டியவர்கள் இன்று, உள்ளதும் போச்சே என்று அழுது புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

ஐ.டி. கணக்கில் வராமல் கள்ளப்பணம் வைத்திருப்பவர்கள் தொடங்கி, பூர்வீக சொத்தை விற்றுக் கிடைத்த பணம், மகளின் திருமணத்திற்காக சிறுக சிறுக சேமித்த பணம், அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற சமயத்தில் கிடைத்த ஓய்வூதியக்கொடை உள்ளிட்டவற்றை இதுபோன்ற நிறுவனங்களில் முதலீடு செய்துவிட்டு, இன்று அந்த நிறுவனத்தையும் நீதிமன்றத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த ரூபத்திலாவது, போட்ட பணம் திரும்பக்கிடைக்காதா? அதற்கோர் வழிபிறக்காதா? என விழிபிதுங்கி கிடக்கிறார்கள்.

கண்ணுக்கு முன்னே நிற்கும் முகவரை மட்டும் நம்பி, அவர்கள் அளந்துவிடும் கதைகளை நம்பி, கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்துதான் பிரச்சினையில் சிக்கிவிட்டார்கள் என்று சொல்வது பாமரத்தனமானது. மேஜிக் காட்டும் சாகசக்காரனை போல, நீங்கள் முதலீடு செய்யும் பணம் எப்படியெல்லாம் பல மடங்காகும் என்று கற்பணைக்கெட்டாத கதைகளை அள்ளிவிட்டபோதும், கனவுலகைவிட்டு அகலாமல் வாயைப்பிழந்து நின்ற தருணம் முதல் சறுக்கல். தொடக்கம் அவன் என்றாலும், முடிவாக உங்களை இயக்கியது ”பேராசை”தான் என்பதை மறுக்க முடியுமா?

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல். (குறள் – 363)
”தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும்கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்.

(குறள் விளக்கம் – கலைஞர் மு.கருணாநிதி)

-வே.தினகரன்.

 

வீடியோ லிங்:

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.