சட்ட விரோத கருக்கலைப்பு செய்த பெண் பலி ! திருச்சி மருத்துவத்துறை அலட்சியம் !
துறையூர் அருகே சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்த பெண் பலி !
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மனைவி பிரியா வயது 31. இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் இந்நிலையில் பிரியா நான்கு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இது பற்றி தனக்கு தெரிந்த ஜோசியர் ஒருவரிடம் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா ,பெண் குழந்தையா என ஜோசியம் கேட்டு உள்ளனர் .அதற்கு ஜோதிடர் மூன்றாவதாக பிறக்க போவதும் பெண் குழந்தை என கூறியதையடுத்து பெண் குழந்தை வேண்டாம் என முடிவு எடுத்த பிரியா, குடும்பத்தில் யாரிடமும் சொல்லாமல் கருக்கலைப்பு செய்வதற்காக துறையூர் அருகே செங்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் ஈஸ்வரி என்ற பெயரில் மெடிக்கல் நடத்தி வரும் போலி மருத்துவரான சித்ரா என்பவரிடம் சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர்.
இதில் ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் பாதிக்கப்பட்ட பிரியா இது குறித்து தனது கணவர் சிவகுமாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார் .உடனடியாக துறையூருக்கு வந்த கணவர் சிவக்குமார் தனது மனைவி பிரியாவை துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார் .அங்கு பிரியாவிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் .திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றவுடன் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து உரிய பாதுகாப்பு இன்றி சிகிச்சை அளித்து தனது மனைவி பிரியாவின் இறப்புக்கு காரணமாக இருந்து செங்காட்டுப்பட்டியில் மெடிக்கல் வைத்திருக்கும் சித்ரா என்ற பெண் மீது சிவகுமார், துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அவரது புகாரின் பேரில் சித்ராவை கைது செய்த துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல் துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதிகளில் கொப்பம்பட்டி ,B.மேட்டு , கோட்டப்பாளையம் உள்ளிட்ட சுமார் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மெடிக்கல் என்ற பெயரில் வெறும் 10-ம் வகுப்பு மட்டுமே படித்து , ஆர்எம்பி சர்டிபிகேட்டை வேறு ஒருவரிடம் வாங்கி மெடிக்கலில் வைத்துக்கொண்டு, தங்களது வீடுகளிலும் தனியார் மருத்துவமனைகள் போல ,காய்ச்சல் முதல் அபாயகரமான கருக்கலைப்பு வரையிலும் , குளுக்கோஸ்டிரிப் ஏற்றுவது, வெட்டுக்காயங்களுக்கு தையல் போடுவது, நரம்பு ஊசி போடுவது உள்ளிட்ட சிகிச்சைகளை எவ்வித அனுபவமும் இல்லாமல் அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடி அவர்களை பலிகடாவாக்கி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்திலேயே துறையூர் தாலுகாவில் , உப்பிலியபுரம் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் புற்றீசல்போல பெருகியுள்ள போலி மருத்துவர்கள் மீது மாவட்ட நிர்வாகமும், அரசு சுகாதாரத்துறையும் கடும் நடவடிக்கை எடுத்து அப்பாவி பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– ஜோஸ்