நடிகர் ரஜினிகாந்த்க்கு செய்யப்பட்டுள்ள டெவார் என்றால் என்ன???
திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு செய்யப்பட்டுள்ள டெவார் என்றால் என்ன??? திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு இதயத்தில் இருந்து உடல் முழுமைக்கும் தூய ரத்தத்தைக் கொண்டு செல்லும் “அயோர்ட்டா” எனும் மகா தமனியில் அனியூரிசம் எனும் வீக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த அனியூரிசம் என்பது தமனியின் சுவர்களில் தளர்ச்சி ஏற்படுவதால் ரத்த ஓட்ட அழுத்த மிகுதியால் புடைப்பு அல்லது வீக்கம் ஏற்படுகிறது.
இதன் விளைவாக அதீத ரத்த அழுத்தத்தின் காரணமாக அந்த பாதிப்புக்குள்ளான வீக்கம் ஏற்பட்ட பகுதியில் பிளவுற்று ரத்தப் போக்கு ஏற்படலாம்.
திரு. ரஜினி காந்த் அவர்களுக்கு படப்பிடிப்பின் போது இந்த அநியூரிசத்தின் காரணமாக
வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
அதற்காக உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு ரத்த நாளம் வழியாக கேதிடர் எனும் வளைந்து கொடுக்கும் குழாய் போன்ற கருவியை உள்செலுத்தி மகா தமனியில் வீக்கம் ஏற்பட்டுள்ள பகுதிக்கு கேதிடரை கொண்டு சென்று அங்கு ஸ்டெண்ட் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் வழியாக அநியூரிசம் ஏற்பட்டுள்ள பாதிப்புக்குள்ளான பகுதியில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள ஸ்டெண்ட் புகுத்தப்பட்டு பாதிப்பு சரிசெய்யப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சைக்கு TEVAR என்று பெயர். THORACIC ENDOVASCULAR AORTIC REPAIR.
சிகிச்சை முடிந்து திரு ரஜினிகாந்த் அவர்கள் நல்ல உடல்நிலையில் இருப்பதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சிகிச்சையானது ரத்த நாளம் வழியாகவே கேதிட்டரை உள்செலுத்தி செய்யப்பட்டுள்ளமையால் இரண்டு நாட்களில் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு வீட்டுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கபடுகிறது.
அவர் விரைவில் மீண்டு வர பிரார்த்தனைகள்
கட்டுரை
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை