திருச்சி ER பள்ளிக்கு “மீண்டும் போகலாமா ? …”

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

“மீண்டும் பள்ளிக்குப் போகலாம்…” – 1988 ஆம் ஆண்டு ER (இடையாற்று மங்களம் ராமசாமி ஐயர்) ஹையர் செகண்டரி ஸ்கூலில் பிளஸ் டூ முடித்து வெளியேறிய மாணவர்களுக்கு என்று ஒரு வாட்ஸ் அப் குழு இயங்குகிறது. அதில் எதேச்சையாக நடந்த ஒரு உரையாடலில் ‘நாம் எல்லோரும் ஒன்று கூடி நமது ஆசிரியர்களை அழைத்து ஒரு விழா நடத்தி அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றால் நன்றாக இருக்குமே’ என்ற பேச்சு வந்தது.
ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் ரங்கநாதன் அதன் முயற்சிகளை எடுத்தார். ஒரு சிலர் மட்டுமே நேரில் அடிக்கடி சந்தித்து இந்த ஏற்பாடுகள் குறித்து பேசிக்கொள்ள, பெரும்பாலானவர்கள் டிஜிட்டல் மீடியாவில் விர்ச்சுவலாக ஆஜரானார்கள்.
இயன்றவர்கள் தொகையை அள்ளிக் கொடுக்க, சிலர் கிள்ளிக் கொடுக்க, துண்டு விழுந்த தொகையை எல்லாம் தன் தலையில் சுமந்து கொண்டார் மங்கலம் பில்டர்ஸ் முரளி.
ER School
ER School

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

ஓடி ஓடி உழைத்து எல்லோரையும் ஒன்றிணைத்து ஆசான்கள் அனைவரையும் ஓரிடத்தில் ஒன்று கூடி அமர வைத்த சாதனையை செய்தார் ரங்கநாதன். அங்கே இங்கே என்று இடம் மாறி கடைசியில் ஶ்ரீரங்கம் யோக திருமண மஹாலில் நிகழ்வு நடந்தது. காலை 10 மணிக்கு அங்கே வந்தவர்களை சந்தனம் கொடுத்து வரவேற்று கட்டித்தழுவி தங்கள் பள்ளி நாட்களை அசை போட்டு மறக்க முடியாத நினைவுகளை சொல்லிச் சொல்லி மாய்த்து போனார்கள்.
ஒவ்வொருவராக ஆசிரியர்கள் அரங்கத்தில் வந்து கூட, அவர்கள் முன்வரிசையில் அமரவைக்கப்பட்டு அன்றைய மாணவர்களாக இருந்து இன்று பல்வேறு நிறுவனங்களில் உயர் அதிகாரிகளாக இருப்பவர்கள் பின்வரிசைகளில் அமர்ந்து கொண்டார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

டாக்டர் கே ரமேஷ்,
‘வானோர் வணங்கும் அன்னையே…’ என பள்ளியின் இறைவணக்க பாடலை பாட, எல்லோரும் ஒன்று கூடி பாடி, பள்ளி நாட்களின் நினைவுக்குள் புகுந்தார்கள். மங்களம் பில்டர்ஸ் முரளி வரவேற்புரை ஆற்றினார். “நான்கு தசாப்தங்களுக்கு முன்பு தொடங்கிய பயணத்தின் இன்றைய தினத்தில் பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கிறேன்” என்று ஆரம்பித்தார். ‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்ற யவை’ என்ற குறளை சொல்லி, “மறந்து போன நினைவுகளை மீண்டும் வாழ்ந்து பார்க்க கிடைத்த வாய்ப்பு இது” என்றார்.

முதலில் பள்ளி மாணவர்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்த, TMT என்று அழைக்கப்படுகிற தியாகராஜன் சாரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தன் முன்னால் வைக்கப்பட்ட பிறந்தநாள் கேக்கை சிறுபிள்ளை போல் பார்த்துக் கொண்டிருந்தார் TMT சார். ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாலை அணிவிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டு சால்வை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது. நமது பாரம்பரிய கலாச்சாரப்படி வேஷ்டி புடவை மற்றும் “விபுல ஆசிரியர்” (உன்னத உபாத்தியாயர்) என்கிற மொமெண்டோ கொடுக்கப்பட்டது.

திருச்சி ER பள்ளி ஆசிரியர்கள்
திருச்சி ER பள்ளி ஆசிரியர்கள்
இந்த நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பாஸ்கர் பேசினார். ‘நமது ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவைக்கு நன்றி சொல்லி பள்ளி நாட்களை திரும்பிப் பார்க்க கிடைத்த வாய்ப்பு இது’ என்றார்.இந்த நிகழ்வு முடிந்த உடன் வந்திருந்தவர்கள் அனைவரும் ஒன்று கூடி குரூப் போட்டோ எடுத்துக் கொண்டோம்.
காலை 11 மணிக்கு எடுக்கப்பட்ட இந்த படத்தை மதியம் ரெண்டு மணிக்கு நிகழ்ச்சி முடியும் போது பிரிண்ட் போட்டு, பிரேம் போட்டு, அதையும் ஒரு பையில் போட்டு, நினைவு பரிசுகளுடன் (தரமான ஸ்வீட் காரத்துடன், உள்ளிருக்கும் சுடுதண்ணியின் வெப்பநிலையை வெளியே டிஜிட்டலில் காட்டும் அளவுக்கு நவீன தொழில்நுட்பம் கொண்ட ஒரு பிளாஸ்க் – வந்திருந்த எல்லோருக்கும் தன் சார்பில் இந்த பிளாஸ்க்கை கொடுத்து மகிழ்ச்சி கொண்டவர் முன்னாள் மாணவர் திருநாவுக்கரசு) கொடுத்து அனுப்பும் அளவுக்கு மிகச் சிறந்த முறையில் ஏற்பாடு செய்த ரங்கநாதனுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பாஸ்கர், நமது பள்ளியின் வசீகரமான ஆசிரியர், (மறைந்த) கார்த்திகேயனின் சகோதரர். ஒவ்வொரு ஆசிரியரையும் குறிப்பிட்டு அவர்களது சிறப்பியல்புகள், அவர்களது பணியின் கால அளவு, வகுப்பில் அவர்கள் தனித்துவமாக செய்த செயல்கள், அவர்களின் சின்ன சின்ன குறைகள் உள்ளிட்டவற்றை நகைச்சுவையாக சொன்ன விதம் ஆசிரியர்கள், மாணவர்கள் இருவரிடம் இருந்தும் கரகோஷத்தை பெற்று தந்தது. (ஆசிரியர்களின் பெயர், அவர்களின் படிப்பு, அவர்கள் பணியில் சேர்ந்த வருடம், எத்தனை வருடம் பணிபுரிந்தார்கள், என்ன மாதிரியான சிறப்பியல்பு கொண்டவர்கள், அவர்களின் குடும்பத்தார் யார் யார் என்பதை எல்லாம் இவர் எப்படி நினைவில் வைத்திருக்கிறார் என்பது ஆச்சரியம்) பாஸ்கர், 1994 இல் பள்ளியில் பணியில் சேர்ந்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியராக பணியாற்றி வருகிறார். விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் பல விளையாட்டு வீரர்களையும் உருவாக்கி இருக்கிறார். அனைத்து ஆசிரியர்களுடனும் அவர்கள் குடும்பத்தாரடனும் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் எல்லோருக்கும் பாஸ்கர்தான் பாலமாக இயங்கிக் கொண்டிருக்கிறார். இனி பாஸ்கர் சொன்னதிலிருந்து நான் தொகுத்த சுருக்கம் கீழே…

ஆசிரியர்களை அழைத்து ஒரு விழா நடத்தி அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றால் நன்றாக இருக்குமே'
ஆசிரியர்களை அழைத்து ஒரு விழா நடத்தி அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றால் நன்றாக இருக்குமே’
டி எம் தியாகராஜன். TMT
சயின்ஸ் BT அசிஸ்டன்ட் ஆக இருந்து உதவி தலைமை ஆசிரியராக ரிட்டயர் ஆனார். 38 வருஷம் சர்வீஸ் பண்ணிருக்கிறார். இவருடைய சகோதரர் TM சீனிவாசன் கரஸ்பாண்டன்டாக இருந்தார். மாணவர்களிடம் ரொம்ப ஃப்ரெண்ட்லியாக இருப்பார். 32 வருஷம் NCC ஆபீஸராக இருந்தார்.
மாணவர்களுக்கு மதிய உணவு இடைவேளையில் 10 நிமிடத்தில் சாப்பிட்டுவிட்டு தான் கொடுக்கும் முக்கிய வினாக்களை எழுதி காட்ட வேண்டும் என்று சொல்வார். காலையில் அந்தக் கேள்வியை ஒப்பிக்க வேண்டும் மதியம் அதை எழுதி காட்ட வேண்டும் என்பது இவரது நடைமுறை. இதை வைத்து பல மாணவர்கள் கரையேறி போனது உண்மை.
ஆர் சந்திரசேகர்
ஆர் சி என்று அழைக்கப்படுபவர். திருச்சி சின்னக்கடை தெருவில் குடியிருப்பவர். BT ஆசிரியராக இருந்து PG யாக புரமோட்டானவர். பிசிக்ஸ் பாடம் நடத்துபவர். மாணவர்களிடம் ரொம்ப கண்டிப்புடன் நடந்து கொள்வார். இவர் பேப்பர் திருத்தினால் மிகத் துல்லியமாக இருக்கும். யாருமே போய் இந்த விடைக்கான மார்க்கை விட்டு விட்டீர்கள் என்று திருத்தம் சொல்லி மார்க் வாங்கும் அளவுக்கு இருக்காது.
DR தங்க பிச்சையப்பா
உடற்கல்வி ஆசிரியர். 1974 முதல் 89 வரை பள்ளியில் உடற்கல்வி இயக்குனராக இருந்தார். அதன் பின்னர் தேசிய கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக பணியாற்றினார். 2008 இல் ஓய்வு பெற்றார். நிறைய விளையாட்டு வீரர்களை உருவாக்கியவர்.
S. லட்சுமணன் .

நடராஜ ஐயரால் நேரடி நியமனம் செய்யப்பட்டவர். BT ASSISTANT ஆக இருந்தார். இவருடைய சகோதரரும் இங்கேதான் வேலை செய்தார். இவர் கணித ஆசிரியர். 78 இல் உயர்வு பெற்று எகனாமிக்ஸ் ஆசிரியராக மாறினார். உதவி தலைமை ஆசிரியராக பத்து வருடம் வேலை செய்து 93-94 இல் தலைமை ஆசிரியராக வேலை செய்து ஓய்வு பெற்றார். 34 வருடங்கள் ஆசிரியராக வேலை செய்திருக்கிறார்.

திருச்சி ER பள்ளி ஆசிரியர்கள்
திருச்சி ER பள்ளி ஆசிரியர்கள்
எம் கிருஷ்ணசாமி
BT மேக்ஸ் டீச்சர். 30 வருடங்கள் வேலை செய்தவர். ஆரம்ப காலத்தில் பல கட்டிடங்களை கட்டித் தந்தவர். பள்ளியின் அனைத்து சுத்தப்படுத்தும் பணிகளையும் இவர் தான் செய்வார் . ஆசிரியர்களுக்கு கருவூலத்திலிருந்து சம்பளம் வாங்கித் தரும் வேலையை இவர் தான் செய்வார். தேர்வு பணிகளை மிகச் சிறப்பாக செய்பவர்.
டாக்டர் வி கிருஷ்ணமூர்த்தி
PG ஆங்கில ஆசிரியர். ஆரம்பத்தில் செகண்டரி கிரேட் ஆசிரியராக பணியில் சேர்ந்து 36 வருடங்கள் வேலை செய்து 2000 ஆண்டில் ரிட்டயர் ஆனார். நமது பள்ளியின் முதல் டாக்டரேட் ஆசிரியர் இவர்தான். 11, 12 ஆம் வகுப்புகளுக்கு ஆங்கில பாடம் நடத்தியவர். இவருக்கும் இவருக்கு பின்னால் பணியில் சேர்ந்த ஆர்கே என்கிற ஆர் கோதண்டராமன் சாருக்கும் யார் திறமையாக கேள்வித்தாள் செட் பண்ணுகிறார்கள் என்பதில் ஒரு ஆரோக்கியமான போட்டி நடக்கும். ஓய்வு பெற்ற பிறகு 20 வருடங்கள் மண்ணச்சநல்லூர் சிதம்பரம் பிள்ளை கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணிபுரிந்தவர். தன் தகுதியை வளர்த்துக் கொண்டு எப்படி பிரமோஷன் ஆக வேண்டும் என்பதை இவரைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.
மனோகர்.

செகண்டரி கிரேடு தமிழ் டீச்சராக இருந்து BT யாக புரமோட்டாகி ஸ்கவுட் இல் 22 வருடங்கள் பணிபுரிந்தார். சிறந்த ஆசிரியர் அவார்டு வாங்கியவர். உதவி தலைமை ஆசிரியராக இருந்து ரிட்டயர் ஆனவர். கவர்னர் புரஸ்கார் அவார்டு இவர் மூலம் 7,8 பேர் வாங்கி இருக்கிறார்கள். பழகுவதற்கு ரொம்ப தன்மையான மனிதர்.

திருச்சி ER பள்ளி ஆசிரியர்கள்
திருச்சி ER பள்ளி ஆசிரியர்கள்
P S பாலசுப்ரமணியன்
சமூக அறிவியல் ஆசிரியர் . முப்பது வருடத்திற்கு மேல் பணிபுரிந்தவர். இவர் போர்டில் மேப் வரைந்து பாடம் சொல்லித் தந்தால் மாணவனுக்கு அது மறக்கவே மறக்காது. எங்கே நதி இருக்க வேண்டும் எங்கே மலை இருக்க வேண்டும் என்பதெல்லாம் மனதில் கல்வெட்டாய் பதிந்து விடும்.
எஸ் வசந்த கிருஷ்ணன்
காமர்ஸ் டீச்சர் . 1978 இல் PUC முடிந்து ஹையர் செகண்டரி தொடங்கப்பட்டபோது இவர் காமர்ஸ் அண்ட் அக்கவுண்ட்ஸ் பாடம் எடுக்க வந்தார். மாணவர்களுடன் மிக நட்பாக இருப்பார். இலகுவான வழியில் எப்படி பாடம் சொல்லித் தர வேண்டும் என்பது இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்.
RK என்கிற ஆர் கோதண்டராமன்
1978ல் டைரக்ட் PGயாக அப்பாயிண்ட் ஆனவர். ஒரு சின்சியரான ஆசிரியர். கடைசி ஓய்வு பெறும் நாள் வரை வகுப்பில் ஒரு நிமிடத்தை கூட விரயம் செய்யாமல் பாடம் நடத்தக்கூடியவர். இங்கிலீஷ் மீடியம் வகுப்புக்கு வந்து விட்டால் ஆங்கிலத்தை தவிர தமிழில் ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்;
தமிழ் மீடியம் வகுப்பு போனால் பாடத்தை ஆங்கிலத்தில் நடத்தி விளக்கத்தை தமிழில் சொல்லி புரிய வைப்பார். 1982-83இல் ஹைதராபாத் யுனிவர்சிட்டியில் மிக சிரமமான போஸ்ட் கிராஜுவேட் டீச்சிங் இன் இங்கிலீஷ் (PGTE) என்கிற பட்டத்தை படித்து முடித்தவர். 2001 முதல் 03 வரை தலைமை ஆசிரியராக இருந்தவர். பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக ஆசிரியராக மாறிக் கொண்டார். மீண்டும் ஈகோ பார்க்காமல் பத்து வருடங்கள் PG ஆசிரியராக வேலை செய்தார் பணிக்காலத்தில் வருடத்தின் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் வேலைக்கு வந்து பலமுறை நிர்வாகத்திடம் பரிசு வாங்கியவர்.
ரவிசங்கர்
BT சோசியல் சயின்ஸ், 34 வருஷம் சர்வீஸ் செய்தவர். மாணவன் படிக்கவில்லை என்றால் அடி வெளுத்துவிடுவார். மாணவர்கள் இவரை எளிதாக அப்ரோச் பண்ணலாம். யாரையும் ஃபெயில் பண்ண மாட்டார். முப்பது மார்க் வந்து விட்டாலே ஏதாவது ஒரு காரணத்தை தேடி 5 மார்க் போட்டு பாஸ் பண்ண வைத்து விடுவார். மாணவருடைய ஒரு வருடத்தை வீணாக்க கூடாது என்பதை கொள்கையாக வைத்திருந்தவர்.
வரதன்
கெமிஸ்ட்ரி ஆசிரியர். 89 வரை டால்மியா ஹையர் செகண்டரி ஸ்கூலில் வேலை செய்தவர். 89 இல் சுந்தரேசன் சார் ரிட்டயர் ஆனதும் அவருக்கு ரீப்ளேஸ்மென்ட் வேண்டும் என்று சொல்லி டால்மியா ஸ்கூலில் பேசி இவரை நம் பள்ளிக்கு அழைத்து வந்தார்கள். இ ஆர் பள்ளியில் கெமிஸ்ட்ரி என்றால் ஈஸ்வரன், சுந்தரேசன் தான் அத்தாரிட்டி என்ற நிலைமை இருந்தது. அவர்களுக்கு மாற்று கிடைக்குமா என்று தேடிய நேரத்தில் வந்து சேர்ந்தவர் வரதன் . எத்தனையோ டாக்டர் இன்ஜினியர்களை உருவாக்கி இருக்கிறார். 11,12 எல்கேஜி குழந்தை போல் தான் சொல்வதை மாணவர்களை திருப்பி சொல்ல வைப்பார். பத்து முறை கூட சால்ட் அனாலிசிஸ் திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுத்து மாணவர் மனதில் பதிய வைத்து மார்க்கு வாங்க வைப்பார். 23 வருடங்கள் வேலை பார்த்து ஓய்வு பெற்றாலும் இன்றும் இவரை வீட்டில் போய் பார்க்காத மாணவர்களே இருக்க மாட்டார்கள்.
வனமாலி
வாயில்லா பூச்சி வனமாலி என்று அழைக்கப்படுபவர். வொக்கேஷனல் டீச்சராக இருந்தவர். இவருக்கு ரொம்ப லைட் சப்ஜெக்ட் தான். மாணவர்கள் இவரிடம் நிறைய உரிமை எடுத்துக் கொள்வார்கள். கோபமே பட மாட்டார். பழைய மேக்ஸ் டீச்சர் கே ஆர் என்று அழைக்கப்படுகிற கே. ரங்கநாதனின் பிரதர் இன் லா. யாராவது மன வருத்தத்துடன் இருந்தால் ஜோக் சொல்லி அவரை சிரிக்க வைத்து விட்டு தான் நகர்வார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சுப்புசாமி
பள்ளி நிர்வாகத்திற்கு மிக நெருக்கமானவர் ER பள்ளியில் இத்தனை கட்டிடங்கள் வந்திருக்கிறது என்றால் எந்தவித லாப நோக்கமும் இல்லாமல் அன்றைக்கு இருந்த தலைவர், N.ரங்கராஜன், கரஸ்பாண்டன்ட் TM சீனிவாசன் உடன் இணைந்து பல கட்டிடங்களை கட்டி பள்ளியின் உட்கட்டமைப்பு வசதியை பெருக்கிய இவர்தான் காரணம். ஆசிரியராக இருந்தாலும் சிவில் பணிகளில் ஆர்வம் கொண்டவர். 90% கட்டிடங்கள் இவர் மூலம்தான் உருவானது. இன்றைக்கு 93 வயதில் தான் கட்டி வைத்த கட்டிடங்களை பெருமையோடு பார்த்துக் கொண்டு வாழ்கிறார். 25 ஆம் தேதிக்கு மேல் டி எம் சீனிவாசன் சாரிடம் போய் வேலை செய்த ஆட்களுக்கு கூலிப்பணம் வாங்க முடியாது. ‘அஞ்சு நாட்கள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ… பணம் பேங்கிலேயே இருக்கட்டும். பள்ளிக்கூடத்திற்கு வட்டி வரவேண்டும்’ என்று சொல்லிவிடுவார். அப்படிப்பட்ட கஷ்ட சூழ்நிலைகளிலும் தன் சொந்த பணத்தை கூலியாக கொடுத்து அட்ஜஸ்ட் செய்து கட்டிடங்களை கட்டி பள்ளியை வளர்த்தவர். நட்புக்கு சுப்புசாமியையும் TM சீனிவாசனையும் சொல்லலாம்.
ராஜகோபால்
ஆறாவதிலிருந்து எட்டாவது வரை 36 வருடம் சர்வீஸ் பண்ணி இருக்கிறார். இவரால் அடித்தளம் பெற்று வளர்ந்தவர்கள் கற்றுக்கொண்ட கணக்கு, ஆங்கிலத்தை பயன்படுத்தி இன்று கலெக்டர் வரை இருக்கிறார்கள். சின்ன பசங்க என்று கூட பார்க்க மாட்டார். தப்பு செய்தால் அடி வெளுத்து விடுவார். இன்றைக்கும் அடிப்படை ஆங்கில கிராமர் படிக்க வேண்டும் என்றால் இவரைத்தான் பின்பற்ற வேண்டும். ஒழுங்காக படிக்காவிட்டால் அடித்து விடுவார் என்பதால் மாணவர்கள் இவரை நெருங்கி போக பயப்படுவார்கள்.
ராமசாமி
ரொம்ப அருமையான டீச்சர். 9, 10 க்கு மாணவர்களுக்கு எளிமையாக அறிவியல் சொல்லித் தருவார். யாரையும் அடிக்க மாட்டார். கடைசி வகுப்பில் அரை மணி நேரம் விளையாட போகிறேன் என்று சொன்னால் சரி போடா என்று அனுப்பி விடுவார். 99 சதவீதம் தேர்ச்சியுடன் தன் ஓய்வு வரை மாணவர்களை அருமையாக படிக்க வைத்தவர்.
சத்தியமூர்த்தி
பயாலஜி ஆசிரியர். 750 முதல் 800 டாக்டர்களை உருவாக்கியிருக்கிறார். பள்ளியில் மட்டுமல்லாது வெளியில் டியூஷன் எடுத்ததன் மூலமும் பல மாணவர்கள் நிறைய மார்க் வாங்க உதவி செய்தவர். இன்றும் அரசாங்கம், அரசு பள்ளி மாணவர்களுக்கு உருவாக்கும் அனிமேஷன் பாடங்களுக்கு இவர் தான் வழிகாட்டியாக இருக்கிறார். இப்போது டெபுடேஷனில் அரசாங்க பணியை செய்து கொண்டிருக்கிறார். பாட்டனி, ஜூவாலஜி இரண்டிலும் இவர் ஒரு அத்தாரிட்டி. சென்னையில் இவர் வகுப்படுப்பதை இன்று இருக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஸ்டூடியோவில் வரவைத்து கேமராவில் பதிவு செய்து வைத்திருக்கிறார்.
சந்தானகிருஷ்ணன்
பி ஜி எக்கனாமிக்ஸ் டீச்சர். ராகு காலம் எமகண்டம் என்று சொன்னால் இன்று பாடம் வேண்டாம் என்று சொல்லிவிடுவார். ஆனால் அடுத்து யாரிடமாவது ஒரு வகுப்பு கடன் வாங்கி ‘அப்போ ராகுகாலம் ஒத்துக்கிட்டேன். இப்ப நல்ல நேரம் தானே வா’ என்று சொல்லி வகுப்பெடுத்து விடுவார். பாடங்களை முழுமையாக நடத்தி முடித்து விடுவார். இவரிடம் படித்து எக்கனாமிக்சில் ஃபெயிலியர் என்பது ரொம்ப அபூர்வம். ரொம்ப பரோபகாரி. எல்லோருக்கும் உதவி செய்பவர்.
ரமணி சார்
BT மேக்ஸ் டீச்சர். உதவி தலைமை ஆசிரியராக இருந்தவர். எத்தனையோ ஆசிரியர்களுக்கு பென்ஷன் பேப்பர்களை தயார் செய்து தந்தவர். போட்டித் தேர்வுகளுக்கு ஒன்பது, பத்து வகுப்பு மாணவர்கள் எப்படி ஷார்ட் கட் வழிகளில் கணக்கு போட்டு மார்க் வாங்கலாம் என்பதை சொல்லித் தருவார். அரசாங்கத்தின் அத்தனை நடைமுறை விதிமுறைகளையும் தெரிந்து வைத்திருப்பார். ஆசிரியர்களுக்கு இவர் தயார் செய்து தரும் பென்ஷன் பேப்பர்களில் எந்த தவறும் கண்டுபிடிக்க முடியாது.
திருச்சி ER பள்ளி ஆசிரியர்கள்
திருச்சி ER பள்ளி ஆசிரியர்கள்
குமாரசுப்பிரமணியன்
34 வருடம் ஜூனியர் அசிஸ்டெண்டாக இருந்து பணியாற்றியவர். அத்தனை ஆசிரியர்களுக்கும் ஒண்ணாம் தேதி சரியாக சம்பளம் கிடைக்க வழி செய்தவர். மாவட்ட கல்வி அலுவலகத்தில் பியூன் மாதிரி உட்கார்ந்து இருந்து காரியங்களை சாதித்துக் கொண்டு வருபவர். நடராஜ ஐயர் குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர். எஜமானர் குடும்பத்திற்கு மிக விசுவாசமானவர். அந்த வீட்டிலிருந்து எந்த தகவல் பள்ளிக்கு வருவதாக இருந்தாலும் குமார் மூலமாகத்தான் வரும். ரங்கராஜன் சார் கரஸ்பாண்டாக ஏதாவது ஒரு தகவலை ஒரு ஆசிரியருக்கு சொல்ல வேண்டும் என்றால் குமார் கையில் ஒரு துண்டு சீட்டை கொடுத்து அனுப்புவார். குமார் ஒரு ஆசிரியரிடம் போய் பேசுகிறார் என்றால் கரஸ்பாண்டெட் அவருக்கு ஒரு தகவல் சொல்லி இருக்கிறார் என்று அர்த்தம். ஒரு ஆசிரியர் நன்றாக பாடம் நடத்தினாலும் குமார் மூலம் துண்டு சீட்டு அனுப்பி அவரை தன் அறைக்கு வரச் சொல்லி பாராட்டுவார் ரங்கராஜன். கண்டிப்போ, பாராட்டோ அவரது அறையில் அடுத்த ஆளுக்கு தெரியாமல் தான் நடக்கும். அதற்கு இந்த குமார் தான் தூதுவராக இருப்பார்.
டாக்டர் வி ராமகிருஷ்ணன்
தற்போது தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருப்பவர். கெமிஸ்ட்ரியில் டாக்டரேட் முடித்து பள்ளிக்குள் வந்தவர். இன்றும் பாடம் நடத்துபவர். கோபப்பட்டால் மாணவர்களை அடித்து விடுவார்.
ஆர் எஸ் கிருஷ்ணமூர்த்தி
36 வருஷம் செகண்டரி கிரேட் டீச்சராகவே இருந்தவர். சயின்ஸ், மேக்ஸ், இங்கிலீஷ் மூன்றும் எடுப்பார். ஒரு மகள் டாக்டர் ஒரு மகள் இன்ஜினியர். பள்ளிக்கு ரொம்ப டெடிகேட்டட் டீச்சர். உடம்பு முடியல என்றாலும் பள்ளிக்கு வந்துவிடுவார் 90% லீவு போடாத ஆசிரியர்.
சேதுராமன்
இவர் 12 வருடங்கள் தான் இ ஆர் பள்ளியில் வேலை செய்தார். அந்த 12 வருடத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதை சிறப்பாக செய்தார். ஓய்வு பெற்ற பிறகு 63 வயதில் டாக்டர் பட்டம் வாங்கியவர். இன்றும் திருப்பாவை திருவெம்பாவை திருப்புகழ் எல்லாம் ஆராய்ச்சி செய்து கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறார். மாணவர்களுகள் இவரைக் கண்டால் ரொம்ப ஜாலியாகி விடுவார்கள். யாரையும் திட்ட மாட்டார். அடிக்க மாட்டார் அன்போடு அனுசரித்து பேசுவார்.
சுந்தரேசன் சார்
இப்ப 94 வயது. 91 வயது வரைக்கும் வகுப்பெடுத்தார். குளித்தலையைச் சேர்ந்தவர். நடராஜா ஐயருக்கு மிக நெருக்கமானவர். சப்ஜெக்ட்டில் அத்தாரிட்டியும் அட்மினிஸ்ட்ரேட்டில் கெப்பாசிட்டியும் உள்ளவர்.
ரொம்ப சிஸ்டமேட்டிக்கான மனிதர். டைமிங் பஞ்சுவாலிட்டி இவரை போல் பின்பற்ற முடியாது. 1987 முதல் 2018 வரை குளித்தலையில் இருக்கும் பாரதிய வித்யா பவன் பள்ளியில் தினமும் போய் 2 மணி நேரம் வகுப்பு நடத்துவார். 91 வயது வரை வகுப்பு எடுத்திருக்கிறார். இவரும் 1978ல் தான் PG யாக எலிவேட் ஆனார். இவர் டைம் டேபிள் போட்டு தந்தால் அதில் எந்த குழப்பமும் இல்லாமல் இருக்கும்.
செப்டம்பர் 1ஆம் தேதியா செப்டம்பர் எட்டாம் தேதியா நிகழ்ச்சி என்ற குழப்பத்தில் எட்டாம் தேதி என்று நினைத்துக் கொண்டு இருந்து விட்டார். நான் (பாஸ்கர் சார்) போன் பண்ணி சொன்னவுடன் ‘ஆகா நான் எப்படியும் மிஸ் பண்ண கூடாது’ என்று 94 வயதில் உடனே கிளம்பி ஓடோடி வந்தவர் சுந்தரேசன். இ ஆர் ஸ்கூலுடன் இவர்களுக்கு இருக்கும் பந்தம் அப்படியானது. நடராஜ ஐயர் குடும்பத்துக்கு இன்றும் என்றும் விசுவாசமானவர்.
ராகவன்
நடராஜா ஐயரின் பேரன். வெளிநாட்டில் பால்பண்ணையில் வேலை செய்துவிட்டு 2011க்கு பிறகு பள்ளிக்கு வந்தார். பள்ளியை எடுத்து சிறப்பாக நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள். ஒருவர் வெளிநாட்டில் இருக்கிறார். இன்னொருவர் மத்திய அரசு பணியில் இருக்கிறார். நாங்கள் படிக்கும்போது கரஸ்பாண்டாக இருந்த N.ரெங்கராஜன் ஐயரின் மகன். இப்படி ஒவ்வொரு ஆசிரியருக்கும் பாஸ்கர் அறிமுகச் சுருக்கம் தர, அந்தந்த ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். மாணவர்கள் பலரும் பேசும்போது பள்ளியில் தன் அனுபவம் ஒரு சில ஆசிரியர்களுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என பலவற்றையும் சொன்னார்கள் பெரும்பாலானவர்கள் மைக்கை ஓரமாக வைத்துவிட்டு நெடுஞ்சாண்கடையாக விழுந்து ஆசிரியர்களை நமஸ்காரம் செய்தது மனதை நெகிழச் செய்தது.
எனக்கும் பேச வாய்ப்பு கிடைத்தது. “பெற்றெடுத்த பிள்ளைகளை விட தத்தெடுத்த மாணவர்களை சிறப்பாக
வார்த்தெடுத்து வளர்த்தெடுத்த ஆசிரியர்களை வணங்குகிறேன். சைக்கிளில் பள்ளிக்கு வந்த உங்களிடம் படித்த மாணவர்கள் உலகத்தின் அத்தனை விமானங்களிலும் பறந்து கொண்டிருக்கிறார்கள். பூகோள உருண்டையை சுழற்றிவிட்டு கண்ணை மூடிக்கொண்டு அதிலே விரலை வைத்தால் அந்த இடத்தில் இருக்கும் நாட்டில் நமது பள்ளியில் படித்த ஒரு மாணவன் உயர்ந்த பொறுப்பில் பணியாற்றிக் கொண்டிருக்கிறான் என்றால் அதை உங்கள் பெருமையாக பார்க்கிறீர்கள்.
நீங்கள் கற்றுக் கொடுத்த ஒழுக்கம், நேர்மை, நியாயம், பண்புகள், நமது மண் சார்ந்த, மரபு சார்ந்த பழக்க வழக்கங்கள், புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழும் நம்முடைய மாணவர்களால் மிகச் சரியாக பின்பற்றப்படுகிறது என்றால் அது எல்லாம் உங்கள் வெற்றி தானே…
பதினோராம் வகுப்பில் “The Blind Dog” என்கிற ஆங்கில உரைநடை பகுதியில் “Rascal, want you tumble me down ? have sense !…” என்று கோதண்டராமன் சார் நாடக வசனம் போல் ஏற்ற இறக்கத்துடன் உச்சரித்து நடத்தியது 55 வயதில் எனக்கு இன்னும் மறக்காமல் இருக்கிறது என்றால் அவர்கள் எப்படி பாடம் நடத்தினார்கள் என்பதற்கு இதுதானே உதாரணம் என்றதும், கோதண்டராமன் சார் எழுந்து நின்று சபையை வணங்கி, நான் அவருக்கு அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நான் புலனாய்வு செய்து எழுதிய சில செய்திகளை சொல்லி, இதில் எல்லாம் பணத்துக்கு மதி மயங்காமல், அதிகாரத்துக்கு அடிபணியாமல், துணிச்சலாக வெளியே கொண்டு வந்ததற்கு நேர்மையை சொல்லிக் கொடுத்த நீங்கள் எல்லோரும் தான் காரணம் என்று சொல்லி அவர்களை வணங்கினேன்.
திருச்சி ER பள்ளி ஆசிரியர்கள்
திருச்சி ER பள்ளி ஆசிரியர்கள்
கோதண்டராமன் சார் பேசும்போது
“சிறந்த மாணவர்கள் தான் சிறந்த ஆசிரியர்களை உருவாக்குகிறார்கள்; சிறந்த ஆசிரியர்கள் தான் சிறந்த மாணவர்களை உருவாக்குகிறார்கள்” என்று தனக்கே உரிய பாணியில் ஆங்கிலத்தில் சொன்னார்.
93, 94 வயதுகளை தொட்ட ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த நிகழ்ச்சி குறித்த தங்கள் நெகிழ்ச்சியான கருத்துக்களை சொன்னார்கள். குரலிலே வயது முதிர்ச்சியின் காரணமாக நடுக்கம் தோன்றியிருந்தாலும் திறமையான சமுதாயத்தை உருவாக்கிய ஆசிரியர்கள் என்ற கர்வம் அதில் தொனித்தது.
குளித்தலையில் வசிக்கும் 94 வயது ‘ஆசிரியர் சுந்தரேசனும்’ அமெரிக்காவிலிருந்து பறந்து வந்த ‘மாணவன் சுந்தரேசனும்’ ஒன்றாய் அமர்ந்து தங்கள் நினைவுகளை அசை போட்டது குறிப்பிடத்தக்கது.
பள்ளியில் அந்த காலத்திலேயே கேன்டீன் நடத்திய நாராயண ஐயரின் மகன் ரமேஷ் தான் மதிய உணவை தயார் செய்து தந்திருந்தார். “யாருக்கு என்ன பிடிக்கும் என்று தெரியும் மெனுவை நானே பார்த்துக்கொள்கிறேன்” என்று முழு பொறுப்பையும் எடுத்துக்கொண்டார்.
பள்ளியில் படிக்கும் போது நான் கவனிக்கத்தக்க மாணவன் இல்லை என்றாலும் இந்த நிகழ்ச்சியில் எல்லோரையும் கவனித்து பொறுப்பாக இந்த பதிவை செய்துள்ளேன். முக்கியமான யாரேனும் விட்டிருந்தால் தயவு கூர்ந்து மன்னித்து அருள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
ஷானு
செய்தியாளர்.
ERHSS மாணவன்.
திருச்சி.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.