மலைக்கோட்டை மாநகரில் பகல்நேர குடிகாரர்களின் புகலிடமாக மாறிப்போன பூங்கா ! பீதியில் ஏரியாவாசிகள் !
போலீசார் என்னதான் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், தமிழகத்தில் கஞ்சா போதையைக் கட்டுக்குள் கொண்டு வருவதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதாகத்தான் அமைந்திருக்கிறது, கள நிலவரங்கள். பள்ளிச்சிறுவர்களும்கூட கஞ்சா போதைக்கு ஆட்பட்டு கிடக்கிறார்கள்.
திருச்சி மாநகரத்தில், மலைக்கோட்டை பெரிய கடைவீதிக்கு பின்புறம் அமைந்திருக்கிறது கள்ளர் தெரு. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட திரவியம் பிள்ளை பூங்கா என்பதாக, பளபளப்பாக காட்சியளிக்கிறது அறிவிப்பு பலகை. அதனை கடந்து சென்றால், பகல்நேர குடிகாரர்களின் புகழிடமாக மாறியிருக்கிறது என்பதுதான் காலக்கொடுமை.
காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே பூங்கா திறந்திருக்கும் என்பதாக அறிவிப்பு இருந்தாலும், யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் பூங்காவிற்குள் சென்றுவரலாம் என்ற நிலையே தற்போது இருந்து வருகிறது. மிக முக்கியமாக, குடியிருப்பு பகுதியையொட்டி அமைந்திருக்கும் இந்த பூங்காவை பகல்நேர குடிகாரர்கள் நிரந்தர குத்தகைக்கு எடுத்துவிட்டதாகவே புலம்புகிறார்கள், அப்பகுதி வாசிகள்.
”அதிகபட்சம் 20 வயதுக்குள்தான் இருக்கும். எல்லாமே விடலைப்பசங்க. மதியம் 12 மணிக்கு மேல வந்துருவானுங்க. பார்க்ல ஒரு மூலையில செட்டில் ஆயிடுவானுங்க. பசங்க கும்பலா சேர்ந்து தண்ணியடிக்கிறதுதான் வேலை. பாட்டில் போதை கூட பரவாயில்லை. கஞ்சா இழுக்கிறானுங்க. மதியான நேரத்துல கஞ்சா போதை தலைக்கேறிச்சினா, போறவன் வரவன்கிட்ட வம்பிழுக்கிறதே வேலையா போச்சு. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, அவரும் முன்னாள் கவுன்சிலரா இருந்தவருதான். பப்ளிக் வந்து போற பார்க்ல இப்படி குடிக்கலாமா?னு கேட்டிருக்காரு. அதுக்குனு அவர போட்டு அந்த அடி அடிச்சிருக்காங்க. போலீஸ்ல கம்ப்ளைண்டு கொடுத்தும் இதுவரை எந்த பிரயோசனமும் இல்லை. இப்ப வரைக்கும் குடிச்சிட்டுதான் இருக்கானுங்க. இப்போகூட, போன வாரத்துல பசங்க கும்பலா சேர்ந்து அப்பாவையும் பையனையும் சேர்ந்து அடிச்சானுங்க. பாவம் அந்த பையன் பத்தாம் வகுப்பு பரிச்சைகூட எழுத முடியாம சிரமப்பட்டான்.” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத அப்பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர்.
“இதுக்கு ஒரு முடிவு காணனும்னு பொம்பளைங்களா சேர்ந்து கலெக்டர் ஆபிசில் புகார் பன்னலாம்னுதான் இருக்கோம். எல்லாமே சின்ன வயசு பசங்க சார். சரி ஒருவாட்டி சொன்னா திருந்துவானுங்கனு பார்த்தா. ரொம்ப பன்றானுங்க. செல்வா, சந்த்ருனு சொல்றாங்க. அந்த பையன் மேல நிறைய கேசு இருக்குனு சொல்றாங்க. மத்தவங்ககிட்ட வம்பிழுக்கும் போதும் அந்த பையன் அப்படியே சொல்றான். என்மேல போலீஸ் கேஸ்லா நிறைய இருக்கு என்கிட்ட எவனும் வச்சிக்காதீங்கனு. ரவுடியிசம் பன்ற வயசா சார் இது?” எனக் கேள்வி எழுப்புகிறார், அங்கிருந்த மற்றொரு பெண்மணி ஒருவர்.
நாமும் அந்த சம்பந்தபட்ட திரவியம் பிள்ளை பூங்காவிற்குள் நுழைந்தோம். சரியாக மதியம் 1.30 மணி. பூங்காவில் பாதுகாவலர் என்றும் யாரும் இல்லை. பார்வையாளர்களும் இல்லை. புதர் மண்டிய மூலையில் சிலர் கும்பலாக அமர்ந்திருந்தார்கள். நெருங்கிச் சென்றால், கீறல் விழுவது நிச்சயம் என்ற நிலைதான். அத்தனை பேர் கண்களும் சொருகியபடி, சிகரெட்டும் பிளாஸ்டிக் கப்புமாக போதையில் மிதந்து கிடந்தார்கள்.
போதை ஆசாமிகளின் நடமாட்டத்தை தடுத்து நிறுத்தி, அப்பகுதி மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்!
— அங்குசம் புலனாய்வுக்குழு.