தமிழ்நாட்டில் காந்தியின் தடம் –
தமிழ்நாட்டில் காந்தியின் தடம்—-இடுப்பில் முக்கால் அளவுக்கான வேட்டியும் மேலே போர்த்திக் கொள்ள ஒரு துண்டு என்கின்ற உடையை காந்தி தேர்ந்தெடுத்தது மதுரையில் தான்.
காந்தி நடத்திய போராட்டங்களில் முதன்மையானது ஒத்துழையாமை இயக்கம். பிரிட்டிஷாரின் ரௌலட் சட்டம் எனும் அடக்குமுறை சட்டத்தை எதிர்த்து இந்தப் போராட்டத்தை நடத்துவது என அவர் தீர்மானித்தது சென்னையில்தான். அதற்கான கல்வெட்டு இங்கே உள்ளது.
சென்னை ராதாகிருஷ்ணன் சாலை – கதீட்ரல் சாலையில் உள்ள சோழா ஓட்டல் வாசலில் கல்வெட்டு உள்ளது. அப்போது இந்த இடத்தில் திலகர் பவனம் என்ற வீடு இருந்திருக்கிறது.
சென்னைக்கு காந்தி வந்தபோது ஒரு சில முக்கியமானவர்கள் வீடுகளில் தங்கி இருக்கிறார். தேசத்தந்தை, மகாத்மா என்றெல்லாம் போற்றப்பட்ட அவருக்கே இங்கே சமூக நிலைமை அப்போது எப்படி இருந்தது என்பதை புரிய வைத்த நிகழ்வுகளும் உண்டு.
அதில் ஒன்று, நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் உருவான பிறகு, தமிழ்நாட்டுக்கு காந்தி வருகை தந்தபோது 16-9-1927ல் தஞ்சாவூரில் அவரை நீதிக்கட்சித் தலைவர் சர். ஏ.டி.பன்னீர்செல்வமும், தமிழறிஞர் உமாமகேசுவரனாரும் சந்திக்கிறார்கள்.
அப்போது, “தமிழ்நாட்டில் முற்றிக் கொண்டிருக்கும் பிராமணர்-பிராமணரல்லாதார் பிரச்சினையில் நீங்கள் தலையிட்டுத் தீர்த்து வைத்தால் என்ன?” என்று காந்தியிடம் கேட்கிறார்கள்.
அதற்கு காந்தி, “இதை என்னிடத்தில் நீண்ட காலத்திற்கு முன்பே ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் வந்து சொன்னார். ஆனால், இப்போது முன்புபோல பிராமணர்கள் இல்லை. இப்போது மாறிவிட்டார்கள்” என்று பதிலளித்தார். “எந்த அடிப்படையில் அப்படி சொல்கிறீர்கள்?” என ஏ.டி.பன்னீர்செல்வமும் உமாமகேசுவரனாரும் காந்தியிடம் கேட்க, “முன்பெல்லாம் நான் சென்னையில் சீனிவாச அய்யங்கார் (மயிலாப்பூர்) வீட்டில் வந்து தங்கினால், தாழ்வாரத்தில்தான் உட்கார்ந்திருப்பேன்.
இப்போது, அவர் வீட்டை என் வீடாகவே நினைத்து பழகி வருகிறேன். என் மனைவி கஸ்தூரியும் அவர்களுடைய அடுப்பரங்கரை வரை செல்கிறாள்” என்று சொல்லியிருக்கிறார் காந்தி. (தமிழ்நாட்டில் காந்தி –அ.ராமசாமி)
இதுதான் திராவிட இயக்கத்தின் தாக்கம்.
அன்று மாலையில் தஞ்சாவூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்த சந்திப்பு பற்றி குறிப்பிட்டுப் பேசிய காந்தி, “பிராமணரோ அல்லது யாரோ, தாம் உயர்ந்தவர் என்று உரிமை கொண்டாடும்போது, பிராமணரல்லாதார் அதை எதிர்த்துப் போரிட்டால் முழுக்க முழுக்க நான் அதை ஆதரிக்கிறேன்” என்றார்.
கோவி. லெனின்
மூத்த பத்திரிகையாளர்