“டைரக்டரை அலைக்கழித்த சீட்டிங் கம்பெனி” – நடிகர் ரவிமோகன் ஆவேசம்!
தங்களது கம்பெனியின் இரண்டு படங்களில் நடிக்க 30 கோடி சம்பளம் பேசப்பட்டு, முதல் படத்திற்கான 15 கோடி சம்பளத்தில் 6 கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கி ஒப்பந்தமும் போட்டார் நடிகர் ரவிமோகன். அவர் ஒத்துக் கொண்டபடி எங்களின் படத்தில் நடிக்காமல், சொந்தக் கம்பெனிப்படமான ‘ப்ரோ கோட்’ படத்தில் நடிக்கப் போய்விட்டார். நாங்கள் இதைப்பற்றிக் கேட்ட போது, ஒப்பந்தத்தை ரத்து பண்ணுவதாகவும் அட்வான்ஸை திருப்பித் தருவதாகவும் சொன்னார். ஆனால் இன்னும் அட்வான்ஸை திருப்பித் தரவில்லை.
எனவே எங்களின் அட்வான்ஸைத் திருப்பித் தராமல், அவரது சொந்தப் படத்திலோ, வேறு கம்பெனி படங்களிலோ நடிக்க தடை விதிக்க வேண்டும்’. இப்படி ஒரு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் பாபி டச் கோல்டு சினிமாக் கம்பெனியின் பாலச்சந்திரன். வரும் 23—ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ரவிமோகனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் உண்மையை விளக்கி, ஜூலை.16—ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ரவிமோகன். அதில் “அந்த நிறுவனத்திடம் அட்வான்ஸ் வாங்கியது உண்மை. 2024 செப்டம்பர் மாதம் போடப்பட்ட ஒப்பந்தத்தில் 2024 அக்டோபர் மாதமே ஷூட்டிங்கை தொடங்கிவிடுவதாக தயாரிப்பாளர் உறுதியளித்ததால் 80 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கினேன். ஆனால் அவரோ ஷூட்டிங்கை தொடங்குவது மாதிரி தெரியவில்லை.
இது சம்பந்தமாக பேச அவரை பலமுறை தொடர்பு கொண்ட போதும் சரியான பதில் இல்லை. மேலும் டைரக்டருக்கும் சம்பளத்தைக் கொடுக்காமல் அலைக்கழித்தார். அப்புறம் தான் தெரிந்தது சினிமாத்துறையில் இது ஒரு சீட்டிங் கம்பெனி என்று. இதே போல் பல நடிகர்கள்—டைரக்டர்களை சீட்டிங் போட்டுள்ளனர். எனவே அந்தத் தயாரிப்பாளர் தான் எனக்கு 9 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும். இனிமே அவர் சினிமா தயாரிப்பதற்கே தடை விதிக்க வேண்டும்” என ஆவேசமாகியுள்ளார் ரவிமோகன்.
— மதுரை மாறன்