பாவம் நடிகர் விஜயின் ரசிகர்கள் !
அனேகமாக 1985- ஆக இருக்கலாம். கரூர் வெங்கமேட்டில், மிகப்பிரமாண்டமான கொட்டகையில் மூன்று நாள் மாநாடு. நுழைவுக் கட்டணம் ₹5 செலுத்த வாய்ப்பில்லாமல் தடுமாறியதைப் பார்த்து, புலியூரில் பொரிக்கடை வைத்திருக்கும் மணி அண்ணன் எனக்கும் சேர்த்து ஒரு நுழைவுச் சீட்டு வாங்கித் தந்தார். ஒவ்வொரு நாளும் அவருடன் சைக்கிளில் அழைத்துச் செல்வார். பத்து கிலோ மீட்டர் தூரம். கவலைப்பட மாட்டார். மாநாட்டில் தீனியும் வாங்கிக் கொடுப்பார். நாஞ்சில் மனோகரன், பேரா. அன்பழகன், ரகுமான் கான், வை.கோ மற்றும் கலைஞரின் பேச்சுக்கு நான் ரசிகன். மூன்று நாட்களும் கருத்துரைகளால் நிரம்பி வழிந்தது மாநாட்டுத் திடல். அது ஒரு காலம். அழகிய காலம்.
1999-ல் சி.பி.ஐ. எம்.எல். லிபரேஷன் கட்சியில் அடிப்படை உறுப்பினராக அடையாள அட்டை பெற்ற பின், சென்னையில் நடந்த 3 நாள் மாநாட்டில் , பிரதிநிதியாகக் கலந்து கொள்ள கட்சி விதி அனுமதிக்காததால், தன்னார்வலராகக் கலந்துகொண்டேன். அந்த மாநாடு இன்னொரு திறப்பைத் தந்தது. மூன்று நாளும் அரங்கு நிறைந்த பிரதிநிதிகள் மத்தியில் தலைவர்கள் திபங்கர், பக்ஷி, சங்கர், குமாரசாமி, பாலசுந்தரம் எனப் பலரும் நிகழ்த்திய அற்புத உரைகளைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. மாநாட்டுப் பிரதிநிதிகளின் இடத்திற்கே ஓடி ஓடிச் சென்று குடிநீர் வழங்கிய அனுபவம் மறக்க முடியாதது.
உணவு வேளைகளில் தலைவர் திபங்கரும் தோழர்களோடு வரிசையில் நின்று தட்டில் உணவு வாங்கியது எனக்கு வியப்பான ஒன்று. கலை நிகழ்ச்சிகளில் ‘காணவில்லை, தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை’ என நான் பாட, வாய்ப்புக் கொடுத்த ஜனநாயகத்தன்மையை பின்னாளில் உணர்ந்தேன். அம்மா நாட்டில்தான் தோழர்கள் மீ.த.பாண்டியன், பழ.ஆசைத்தம்பி போன்றோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிட்டியது. மாநாட்டின் கடைசி நாளில், தோழர் திருமாவளவன் அவர்களின் அனல் பறக்கும் பேச்சு.
கொடிக்கம்பம் சாய்ந்ததில் ₹25 லட்ச ரூபாய்க் காரைப் பறிகொடுத்தவரின் அழுகை, 18 வயது இளைஞனின் மூச்சுத் திணறல் மரண வேதனை, பேனர் கட்டியதில் மின்சாரம் தாக்கி இறந்த இளைஞனின் துயரச் செய்தி, இன்னொருவரின் மூச்சுத் திணறல் மரணம், பச்சிளம் குழந்தைகளின் கதறல், ஆயிரக்கணக்கான நாற்காலிகள் உடைப்பு, உணவும் குடிநீரும் கிடைக்காத அவதி…இப்படியான துயரங்கள் எதுவுமே அப்போது இல்லை.
பாவம் நடிகர் விஜயின் ரசிகர்கள்!
— தோழர் புலியூர்