“ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் – அன்வர் ராஜா திருக்குறள் அரசியல்
சசிகலா தரப்பிலிருந்து எடப்பாடியாரோடு ஐக்கியமான அன்வர் ராஜா !
கடந்த அங்குசம் இதழில் “நாலாபுறமும் சிதறிய அதிமுக தொண்டர்களையெல்லாம் தன்பக்கம் அணிதிரட்டும் வகையில் வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டார் எடப்பாடியார்..” என எழுதியிருந்தோம். குறிப்பாக, சின்னம்மாவிடம் ஐக்கியமானவர்களை குறிவைத்து, ”அந்தம்மா சொந்தக்காரங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க…
கட்சி தொண்டனுக்கு மரியாதை கிடைக்காது” என்றெல்லாம் எடுத்துக்கூறி எடப்பாடி தரப்பு கேன்வாஸ் செய்துவருவதையும் சுட்டிக்காட்டியிருந்தோம். இந்நிலையில், சசிகலா முகாமில் இருந்த இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா எடப்பாடி தலைமையில் மீண்டும் தன்னை அதிமுகவில் ஐக்கியமாகியிருக்கிறார். ஜெயலலிதா மறைவையடுத்து, சசிகலாவை அதிமுகவிற்குள் கொண்டுவரவேண்டும் என்று குரல் கொடுத்ததற்காகவும், கூட்டணி கட்சியான பாஜகவை விமர்சித்ததற்காகவும் 2021-இல் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது இணைந்திருக்கிறார்.
2001-2006 இல் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருந்தவர் அன்வர் ராஜா. தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட சொற்பொழிவாளரான அன்வர் ராஜா தனக்கேயுரிய பாணியில், மீண்டும் இணைவதற்கான காரணமாக, “ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
இந்த குறலுக்கு.. சாலமன் பாப்பையா கொடுத்துள்ள விளக்கம் – உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.
ஆகஸ்ட்-20 மதுரை மாநாடு முடிவதற்குள் இன்னும் இதுபோன்ற சுவாரஸ்யங்களுக்கு பஞ்சம் இருக்காது போல !
– ஷாகுல்.