போலீசு அதிகாரிகளுக்கு திருச்சி எஸ்.பி. சொன்ன அலெர்ட் அட்வைஸ் !
திருச்சி மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் தலைமையில், நடைபெற்ற மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்வுக்கூட்டத்தில், வழக்குகளை விரைந்து புலனாய்வு செய்வது தொடர்பான ஆலோசனைகளை வழங்கியதோடு, சமீபத்தில் நடைபெற்ற தொட்டியம் மதுர காளியம்மன் கோவில் திருவிழாவை எவ்வித அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னின்று செய்த போலீசாரை பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பெருமைபடுத்தியிருக்கிறார்.
திருச்சி மாவட்ட போலீசின் சார்பில், எஸ்.பி. தலைமையில் ஒவ்வொரு மாதமும் மாதந்திர குற்ற தடுப்பு கலந்தாய்வு கூட்டத்தை நடத்தி வருகிறார்கள். நடப்பு மாதத்திற்கான கலந்தாய்வு கூட்டம், ஏப்ரல்-17 இன்று, ஆயுதப்படை சமுதாயக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

திருச்சி மாவட்டத்தில் பணியாற்றும் 2-கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 1-உதவி காவல் கண்காணிப்பாளர், 8-துணை காவல் கண்காணிப்பாளர்கள், 30-காவல் ஆய்வாளர்கள் (சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து), 55-உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார்கள்.
இன்றைய, கலந்தாய்வு கூட்டத்தில் தனிச்சிறப்பக பிற துறைகளான சட்டத்துறை, சிறைத்துறை, மருத்துவத்துறை மற்றும் காவலர்கள் வீட்டு வசதி வாரியத்துறைகளை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள். இதுபோன்ற பல துறை போலீசார்களும் எவ்வாறு இணக்கமாக இணைந்து செயல்படுவது என்பது குறித்து, நிர்வாக ரீதியான விளக்கங்களை அளித்திருக்கிறார் எஸ்.பி. செல்வநாகரத்தினம் .
மிக முக்கியமாக, திருச்சி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுக்கப்பட வேண்டிய வழக்குகள் மற்றும் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் பற்றி விவாதித்து தக்க அறிவுரைகளையும் எஸ்.பி. வழங்கியிருக்கிறார்.

நிறைவாக, சமீபத்தில் நடைபெற்ற தொட்டியம் மதுர காளியம்மன் கோவில் திருவிழாவில் எந்தவித சிறு அசம்பாவிதமும் இல்லாவண்ணம் சிறப்பாக பணியாற்றிய 25 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வெகுவாக பாராட்டியிருக்கிறார், எஸ்.பி.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதற்கு முன்னர், திருச்சி மாவட்டத்தின் எஸ்.பி.யாக பணியாற்றிய வருண்குமார் ஐ.பி.எஸ்., ஆபரேஷன் அகழி உள்ளிட்ட பல அதிரடிகளால் அதிர வைத்தார். ரவுடிகளுக்கு எதிராக அதே பாணியில், அதிரடி தொடரவேண்டும் என்றே எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், சத்தமே இல்லாமல் தொடர்ச்சியாக குண்டாஸ் வழக்குகளை பதிவு செய்து ரவுடிகளை அலறவிட்டிருக்கிறார், தற்போதைய எஸ்.பி. செ. செல்வநாகரத்தினம் ஐ.பி.எஸ். சமீபத்தில் 8 கிலோ கஞ்சாவுடன் கடத்தல் கும்பலையும் வளைத்து பிடித்திருக்கிறார். கஞ்சா கடத்தல், ஆன்லைன் லாட்டரி, மூன்றாம் நம்பர் லாட்டரிக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை திருச்சி மாநகர போலீசார் எடுத்து வருவதைப் போல, திருச்சி மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளிலும் எஸ்.பி.யின் அதிரடி வேட்டையை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள், போலீசு வட்டாரத்தில்.
— அங்குசம் செய்திப்பிரிவு.