முதலமைச்சர் ஏன் சர்வாதிகாரியாக மாறவில்லை ? கேள்வி கேட்கும் அதிமுக !
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் முதலமைச்சர் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என கூறினார், முதலமைச்சர் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுத்தாரா?
முதலமைச்சர் ஏன் சர்வாதிகாரியாக மாறவில்லை ? கேள்வி கேட்கும் அதிமுக !
தமிழகத்தில் போதை பொருள் பயன்பாட்டை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கின்றனர்.
தலைநகர் தில்லி தொடங்கி நாடெங்கிலும் போதைப் பொருட்கள் கிலோ கணக்கில் கைப்பற்றப்படுவதான செய்திகள் அச்சமூட்டுவையாக அமைந்திருக்கின்றன.
தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், போலீசு உயர் அதிகாரிகள் பங்குபெற்ற கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தியது தொடங்கி, அந்தந்த மாவட்ட அளவில் சிறப்பு தனிப்படைகளை அமைத்து போதைப் பொருட்களின் கட்டுப்பாட்டை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, குக்கிராமங்களில் பெட்டிக்கடைகளில் விற்கப்படும் விமல் பாக்குகளைக்கூட கைப்பற்றி கடையை தொடர்ந்து நடத்த முடியாதபடி, சீல் வைக்கும் நடைமுறை உள்ளிட்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் போலீசார் தரப்பில் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் போதைப் பொருட்களின் பயன்பாட்டை கட்டுக்குள் கொண்டுவர திமுக அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டி கண்டன ஆர்ப்பாட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்தியிருக்கிறார்கள்.
மதுரையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு மனித சங்கிலி போராட்டமாக நடைபெற்றிருக்கிறது. மதுரை பெரியார் பேருந்து நிலைய சந்திப்பில் இருந்து நேதாஜி சாலை, மேலமாசி வீதி சந்திப்பு, பாலமுருகன் கோவில் வழியாக ஜான்சி ராணி பூங்கா வரை நடைப்பெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் 1,000 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு, “ஆஸ்திரேலியா நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் போதை பொருட்கள் தற்போது தமிழ்நாட்டில் புழக்கத்திற்கு வந்துள்ளது. போதைப் பொருள் கடத்தலில் ஆளும் கட்சியை சார்ந்தவர்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் நிலவும் போதைப் பொருள் கடத்தலை தமிழக காவல்துறை கண்டுபிடிக்கவில்லை. அமெரிக்கா உளவுத்துறை கூறியதன் அடிப்படையில் கடத்தல் தற்போது தெரிய வந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் முதலமைச்சர் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என கூறினார், முதலமைச்சர் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுத்தாரா? அதன் பின்னரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்கிறது.
திமுக கட்சி தொடர்ந்தால் விலைவாசியேற்றம், பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள், திருட்டு கடத்தல் உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெறும், தமிழகத்தில் அனைத்து விதமான சட்ட விரோதமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். ஜாபர் சாதிக் மீது 2013 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜாபர் சாதிக் மீண்டும் போதைப்பொருள் கடத்தலை தொடங்கியுள்ளார். ஜாபர் சாதிக் முதலமைச்சர் குடும்பத்துடன் நெருக்கமாக உள்ளதால் காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. சூரசம்ஹாரத்தில் கம்சனை வதம் செய்து மக்களை முருக கடவுள் காப்பது போல எடப்பாடி பழனிசாமி மக்களை காக்க போராட்டங்களை நடத்தி வருகிறார்” என கூறினார்.
திருச்சியில் …
அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மலைக்கோட்டை பகுதி சார்பாக நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பை கண்டித்து மனித சங்கிலி தெப்பக்குளம் தபால் நிலையம் முன்பு மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. அவைத் தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன் ,திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் C கார்த்திகேயன் , மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் C அரவிந்தன் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் இஞ்சினியர் இப்ராம்ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாநகர் மாவட்டம் தில்லை நகர் பகுதி சார்பாக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் J சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற போதை பொருட்களை தமிழகத்தில் இருந்து அகற்ற கோரி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நஜீமா ஃபாரிக், ஜனாப் ஷேக் அப்துல்லா தில்லை நகர் பகுதி செயலாளர் முஜீபுர் ரஹ்மான், திருச்சி மாவட்ட துணை செயலாளர் புகழ் திருச்சி மாவட்ட துணை செயலாளர் முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாநகர் மாவட்டம் கருமண்டபம் பகுதி அதிமுக சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம் அமைப்புச் செயலாளர் T.ரத்தினவேலு Ex.Mp. தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் பரமசிவம், மாவட்ட துணை செயலாளர் பத்மநாபன், பகுதி செயலாளர் கலைவாணன், வட்டச் செயலாளர்கள் சிங்காரவேலன் வசந்தம் செல்வமணி ,மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் தேன்மொழி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு திமுக அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பினர்.
லால்குடி நகர அதிமுக சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் Ex.MP. பங்கேற்று கண்டன உரையாற்றி கோசங்களை முழங்கினார். இதில் பொதுமக்களும், லால்குடி ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி செயலாளர்கள் பங்கேற்றனர்.
- மதுரை ஷாகுல்,படங்கள் : ஆனந்த்.
- திருச்சி சந்திரமோகன்.