அங்குசம் பார்வையில் ‘ஆலன்’ திரை விமர்சனம்
தயாரிப்பு & டைரக்ஷன் : ‘3 எஸ் பிக்சர்ஸ்’ சிவா.ஆர். நடிகர்-நடிகைகள்: வெற்றி, மதுரா [ ஜெர்மனி நடிகை ], அனுசித்தாரா, விவேக் பிரசன்னா, ‘அருவி’ மதன், ஹரிஷ் பெராடி, டிட்டோ வில்சன், ஸ்ரீதேவா, மற்றும் ஒரே ஒரு காட்சியில் கு.ஞானசம்பந்தன், மனுஷ்யபுத்திரன், கேபிள் சங்கர். ஒளிப்பதிவு : விந்தன் ஸ்டாலின், இசை ; மனோஜ் கிருஷ்ணா, எடிட்டிங் : மு.காசி விஸ்வநாதன். தமிழ்நாடு ரிலீஸ் : கிரியேட்டிவ் எண்டெர்டெய்மெண்ட் & டிஸ்ட்ரிபியூடர்ஸ்’ ஜி.தனஞ்செயன். பி.ஆர்.ஓ. : யுவராஜ்.
சின்ன வயசிலேயே சிறுகதை எழுதுவதில் ஆர்வமும் திறமையும் கொண்டவன் தியாகு [ வெற்றி ]. வளர்ந்து பெரியவனானதும் புகழ் பெற்ற எழுத்தாளனாகிறானா? அவனது எழுத்துக்கள் வெளிச்சம் பெறுகிறதா? இதாங்க இந்த ‘ஆலன்’ படத்தோட கதை. இதை எவ்வளவு அழகா ஆரம்பிச்சு, எப்பேர்ப்பட்ட உணர்வுகளைக் கடத்தியிருக்கணும்? ஆனா படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சிவா, “ஓம் நமச்சிவாயா… சிவாய நமஹோ”ன்னு காசியில ஆரம்பிச்சுட்டாரு. அப்பவே நமக்கு கண்ணைக் கட்ட ஆரம்பிச்சிருச்சு.
சிறுவயதிலேயே வீட்டைவிட்டு.. ஸாரி அடைக்கலம் கொடுத்த சென்னை மேன்ஷன் ஒன்றின் ஓனரைவிட்டு, காசிக்குப் போய், சில சாமியார்களிடம் சிக்கி அல்லாடுகிறான் தியாகு. இதைப் பார்த்த ஒரு மடத்தின் தலைமைச் சாமியார் ஹரிஷ்பெராடி அவனுக்கு சன்னியாசம் வழங்கி, உபதேசம் செய்கிறார். ஆனாலும் தியாகுவுக்குள் இருக்கும் எழுத்தாளனைக் கண்டுபிடித்த தலைமைச் சாமியார், “இருப்பதைத்தேடு, இல்லாதிருப்பதை விட்டுவிடு” என்ற அரிய அறிவுரை சொல்லி சென்னைக்கு அனுப்புகிறார்.
காசியிலிருந்து ட்ரெயினில் வரும் போது ஜனனி தாமஸ் [ மதுரா] என்ற பெண்ணைச் சந்தித்து பழகி சென்னைக்கு கூட்டி வருகிறார். தியாகுவுக்குள் இருக்கும் எழுத்தாளனை தூண்டிவிடும் ஜனனி, புதுச்சேரிக்குப் போகிறார், கயவர்களால் கற்பழித்துக் கொல்லப்படுகிறார். இதனால் விரக்தியான தியாகு மீண்டும் சாமியாராகி, ரிஷிகேஷுக்கு வருகிறார். இங்கு வந்த பின் மீண்டும் கதை எழுதுகிறார். ஜனனி தாமஸ் பெயரில் வெளியாகும் ‘ஆலன்’ என்ற அந்த நாவல் [ ஸ்ஸ்ஸ்…..ஸ்ப்படா டைட்டிலைப் பிடிச்சுட்டாரு டைரக்டரு ] லட்சக்கணக்கில் விற்கிறது.
அதே தலைமைச் சாமியாரிடம் மறுபடியும் போக, அதே அறிவுரையை அந்தச்சாமியாரும் சொல்ல, மீண்டும் சென்னைக்கு வருகிறார். இப்போது தாமரையை [ அனு சித்தாரா ] சந்திக்கிறார், காதல் கொள்கிறார். இருவரும் இராமேஸ்வரம் போகிறார்கள். அங்கே முன்னொரு காலத்தில் பார்த்த ஜனனி தாமஸ் கண் முன்னே வந்து போகிறாள்.
இத்துடன் படமும் முடிகிறது. நாமும் ஆளவிடுங்கடா சாமிகளா என கிளம்பிவிட்டோம்.
1991-ல கதை நடக்குது. 1986 ஃப்ளாஷ்பேக் வருது. அப்புறம் 21 வருசம் கழிச்சு 2000-ல கதை நடக்குது. இடையில 1986 ஃப்ளாஷ்பேக் வருது. படம் முழுக்க காசி, இராமேஸ்வரம், ரிஷிகேஷ்னு காட்டி, ஓம் நமச்சிவாயன்னு சொல்லிக்கிட்டிருந்தா சங்கின்னு ஸ்டாம்ப் அடிச்சிருவாய்ங்களேன்னு பதறிய டைரக்டர், ஜெர்மன் பொண்ணை இம்போர்ட் பண்ணி, சர்ச்ல ஒரு சீனை வச்சு பிச்சு உதறிட்டாரு போங்க. [ என்ன ஒரு வில்லத்தனம் ]
மதுராவும் அனுசித்தாராவும் அழகாக இருக்கிறார்கள். அதிலும் அனுசித்தாரா நல்லா பளிச்சுன்னு பப்ளிமாஸ் மாதிரி கும்முன்னு இருக்கார். ஹீரோ வெற்றி, பொதுவாகவே எல்லாப் படங்களிலும் லேசான தாடி வச்சு, பேண்ட் சட்டை போட்ட சாமியார் மாதிரி தான் உம்முன்னு வருவாரு… போவாரு…. இதுல காசியில சாமியார் கெட்டப்புன்னா சும்மாவா? மூணு அடி நீளத்துக்கு தாடி, ஜடாமுடின்னு அசல் சாமியாரே தோத்தாரு போங்க. என்ன ஒண்ணு நடிக்கத்தான் ரொம்ப திணறியிருக்காரு.
காசி மற்றும் ரிஷிகேஷை நல்லா சுத்திக்காட்டியதற்காக கேமராமேனுக்கு நன்றி சொல்லலாம். மற்றபடி இந்த ‘ஆலன்’—ஐ ஆஹா ஓஹோன்னு சொல்றதுக்கு ஒண்ணுமேயில்லை.
— மதுரை மாறன்.