தொடரும் கள்ளக்குறிச்சி சாராய சாம்ராஜ்ய கொலைகள் ! – நடந்தது என்ன ? முழுமையான ரிப்போர்ட்
ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத கால்நூற்றாண்டு கள்ளச்சாராய சாம்ராஜ்யம் ! ”கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களுக்கு பின்னணியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சதி உள்ளது” என பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருக்கிறார், திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் களைகட்டியிருக்கும் சூழலில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் தருவாயில், இப்படி ஒரு நிகழ்வு அரங்கேறியிருப்பதில் ஏதோ மர்மம் இருப்பதாக பலரும் பேசத் தொடங்கியிருக்கின்றனர்.
பாஜக அண்ணாமலை தொடங்கி, பா.ம.க. உள்ளிட்டு பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் எடப்பாடி வரையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் ஆளும் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கம் அளித்த பின்பும், அவற்றையெல்லாம் ஏற்காமல் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையில் விடாப்படியாக நிற்கிறார்கள். கூச்சலும் குழப்பமுமாக சட்டசபையை நடத்தவிடாமல் செய்து வருகிறார்கள்.
நேற்றுவரை தமிழகம் முழுவதுமே கஞ்சா விற்பணையில் ஆளும் திமுக கட்சியை சேர்ந்த பிரமுகர்கள்தான் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வந்தவர்கள்; கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு பிறகு அந்தப் பட்டியலில் கள்ளச்சாராயத்தையும் சேர்த்துக் கொண்டார்கள்.
”கள்ளச்சாராய காய்ச்சுபவர்களுக்கும் ஆளும் திமுகவிற்கும் தொடர்பு இருக்கிறது. இதனால் சிபிசிஐடி விசாரணையில் உண்மை வெளிவராது. எனவே கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும்.” என்று ஒரு படி மேலே சென்று கோரிக்கை விடுக்கிறார் நிர்மலா சீதாராமன்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடியதாகவும் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததற்காக முன்னாள் எஸ்.பி.மோகன்ராஜூக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும்; அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாகவே விருப்ப ஓய்வில் அவர் சென்றுவிட்டதாகவும் தினமலரில் செய்தி வெளியானது. அதை அப்படியே வேத வாக்காக எடுத்துக்கொண்டு அண்ணாமலை அண்ட் கோ கிளறிவிட்டார்கள்.
“அமெரிக்காவில் வசிக்கும் மகள் மற்றும் மருமகளின் பிரசவ காலத்தில் உடன் இருந்தாக வேண்டிய கட்டாயத்தின் காரணமாகவே, சொந்த காரணங்களுக்காகவே பணி ஓய்வு பெற எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில் விருப்ப ஓய்வில் சென்றேன்.”என்பதாக அமெரிக்காவில் இருந்து காணொளி வாயிலாக விளக்கம் அளித்திருக்கிறார், முன்னாள் எஸ்.பி.மோகன்ராஜ். மேலும், தன்னை பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
”குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரையில் சடலத்தை வாங்க மறுத்து போராடுங்கள்” என்பதாக உயிரிழந்தவர் ஒருவரின் உறவினரிடம் பாஜக அண்ணாமலை பேசுவதாக வெளியான வீடியோவாகட்டும்; ஒரே கலர் புடவையில் தோன்றும் பெண்மணி ஒருவர் பாஜக அண்ணாமலையை கட்டித்தழுவி அழுவதும்; அதிமுகவை சேர்ந்தவர் என்று ஒரு ஊடகத்திலும் ; பக்கா திமுக என்று மற்றொரு ஊடகத்திலும் அவர் பேசிய வீடியோவாகட்டும் அற்ப அரசியல் இலாபத்திற்காக “பிணத்தை வைத்து அரசியல் செய்கிறார்களோ” என்ற கேள்வியை முன் எழுப்பியிருக்கிறது.
திமுகவை சேர்ந்த நிர்வாகிகள்தான் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வருவதாகவும்; ஆளும்கட்சி பிரமுகர்கள் என்பதால் அரசியல் தலையீட்டின் காரணமாக போலீசார் மாமூல் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் விட்டதாகவும் மொத்தப்பழியையும் ஆளும் திமுக அரசின் மீதும் போலீசாரின் மீதும் சுமத்திவருகிறார்கள்.
இழவுவீட்டில் நின்று கொண்டு இவ்வளவு இத்தியாதிகளை பேசும் இவர்கள் இத்தனை நாட்கள் எங்கே இருந்தார்கள்? இவ்வளவு நாளும் இந்த விவரங்கள் இவர்களுக்கே தெரியாமல் போனது எப்படி? என்ற கேள்வி இங்கே இயல்பாய் எழுகிறது. குறிப்பாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் திமுக லீக்ஸ் என்பதாக திமுகவின் ஊழல் பட்டியல்களை நாள் தேதி குறித்து டிரெய்லர் எல்லாம் ரிலீஸ் செய்து வெளியிட்டாரே பாஜக அண்ணாமலை. அவர் வெளியிட்ட அந்த பட்டியலில் கள்ளக்குறிச்சியில் திமுக நிர்வாகிகள் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகவோ? அதனை போலீசார் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதாகவோ, அப்போதே தெரிவித்திருக்கலாமே? என்ற கேள்வியும் எழுகிறது.
இவற்றுக்கு மத்தியில் அதிரடி திருப்பமாக அதிமுகவின் முக்கிய பிரமுகரான அதிமுக விவசாய அணியின் முன்னாள் ஒன்றிய துணை அமைப்பாளராக செயல்பட்ட கல்லாநத்தம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை கூட்டியிருக்கிறது. கருணாபுரத்தைச் சேர்ந்த கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜன், அவரது சகோதரர் தாமோதரன் ஆகிய இருவரும்தான் இந்தப் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டார்கள் என்பதாக முதலில் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையிலிருந்து இவர்களுக்கு சப்ளை செய்த சின்னத்துரையை கைது செய்தார்கள். சின்னத்துரை ஜோசப் என்பவரை கை காட்ட; ஜோசப் மாதேஷ் என்பவரை கைட்ட; கடைசியில் இவர்கள் அனைவருக்கும் சப்ளை செய்த ஹோல்சேல் வியாபாரியான சுரேஷை தட்டி தூக்கியிருக்கிறார்கள்.
யார் இந்த சுரேஷ்?
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பெத்தநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த இளங்கோவன். எடப்பாடியின் ஆட்சிக்காலத்தில் நிழல் முதல்வராக வலம் வந்தவர். மர்மம் நிறைந்த கொடநாடு வழக்கில் தொடர்புடையவர். குறிப்பாக, மர்மமான முறையில் இறந்துபோன ஜெ.வின் கார் ஓட்டுநர் கனகராஜ் தான் இறப்பதற்கு முன்பாக கொடநாட்டிலிருந்து சில பைகளை இளங்கோவனிடமும் எடப்பாடியின் மச்சானிடமும் கொடுத்ததாக கனகராஜின் அண்ணன் தனபால் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த அளவுக்கு எடப்பாடியுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் இளங்கோவனின் வலது கரங்களில் ஒருவர்தான் தற்போது கைதாகியிருக்கும் சுரேஷ். ”சந்துக்கடை” தான் சுரேஷின் அடையாளம் என்கிறார்கள். இவரது தாயாரும் ”சந்துக்கடை” நடத்தி வந்தவர்தான் என்கிறார்கள்.
சுரேஷுக்கு கல்வராயன் மலையில் மனபாச்சி எனும் கிராமத்தில் 25 ஏக்கர் நிலம் இருக்கிறது. மலைப்பகுதியில் பேக்டரி போலவே கள்ளச்சாராயத்தை கூலிக்கு ஆள் வைத்து காய்ச்சி வந்திருக்கிறார் சுரேஷ். கல்வராயன் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மனப்பாச்சி என்ற பகுதி சேலம் மாவட்டத்திற்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குமான எல்லைப்பகுதியில் அமைந்திருப்பதால் இருமாவட்ட போலீசாரும் கண்டுகொள்வதில்லை என்பதாக சொல்கிறார்கள். குறிப்பாக, முட்டல் பகுதி வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்கிறார்கள். முழுக்க முழுக்க வனத்துறையினரை கையில் போட்டுக்கொண்டு கள்ளச்சாராய சாம்ராஜ்யத்தை நடத்தி வந்திருக்கிறார் சுரேஷ்.
கல்வராயன் மலையில் தயாராகும் கள்ளச்சாராயம் சேலம், கள்ளக்குறிச்சியைத் தாண்டி தலைவாசல், ஆத்தூர், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், கொல்லிமலை, நாமக்கல் என அண்டை மாவட்டங்களுக்கும் சப்ளை ஆகி வந்திருக்கிறது. கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கான சப்ளை மாதேஷ் பொறுப்பில் இருந்து வந்ததாகவும்; மற்ற மாவட்டங்களுக்கான சப்ளையை செவத்தான், பொன்னுசாமி, வேலுமணி ஆகியோர் கவனித்து வந்ததாகவும் சொல்கிறார்கள்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கல்வராயன் மலையில் ரெய்டு நடத்திய கள்ளக்குறிச்சி போலீசார் சுரேஷை கைது செய்ததாகவும்; கைது செய்து அழைத்து வரும் வழியிலேயே மேலிடத்தின் அழுத்தம் காரணமாக வழக்கு எதுவும் இல்லாமல் விட்டு விட்டதாகவும் சொல்கிறார்கள்.
கள்ளச்சாராயம் காய்ச்சிய வழக்கில் சுரேஷ் இதற்கு முன்னர் இரண்டு முறை குண்டாசில் சிறைபடுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆத்தூர் மதுவிலக்கு போலீசு நிலையத்தில் சுரேஷ் மீது 17 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதுதவிர, ஆத்தூர் டவுன் போலீசு நிலையத்தில் 10 வழக்குகள்; ஆத்தூர் ஊரகம் போலீசு நிலையத்தில் 13 வழக்குகள்; கெங்கவல்லி போலீசு நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
இத்தகைய குற்ற வழக்குகளை பின்னணியாக கொண்ட, கள்ளச்சாராய சாம்ராஜ்யத்தை நடத்தி வந்த சுரேஷூக்கு அதிமுக கட்சிதான் பாதுகாப்பு கவசமாக இருந்து வந்திருக்கிறது. உரியவர்களை கவனிக்கும் விதத்தில் கவனித்து வந்ததால் ஆட்சி மாறினாலும் தனது தொழிலை விடாது தொடர்ந்து வந்திருக்கிறார் சுரேஷ்.
பொதுவில் தமிழகம் முழுவதுமே மலைப்பகுதிகளில்தான் ஊறல் போட்டு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக சொல்கிறார்கள். மலைப்பகுதிகளில் டாஸ்மாக் சாராயக்கடைகள் கிடையாது. மலைகிராம மக்களின் தேவைக்கு குடிசைத்தொழில்போல ஊறல் போட்டு சாராயம் காய்ச்சுவதை பாரம்பரியமாகவே கடைபிடித்து வருகிறார்கள்.
திருச்சி துறையூரில் பச்சமலை போன்ற பகுதிகளில், அதிகபட்சம் அண்டை கிராமத்தின் தேவைக்காக ஒரு மலை கிராமத்தில் காய்ச்சுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஓரிடத்தில் காய்ச்சி மற்ற இடங்களுக்கு கடத்திச்சென்று விற்பது என்ற அளவில் வியாபார ரீதியாக கள்ளச்சாராயத்தை காய்ச்சும் தொழிலின் கேந்திரமாக திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டத்தின் ஜவ்வாதுமலை, கள்ளக்குறிச்சியின் கல்வராயன் மலை ஆகியவை அமைந்திருக்கின்றன.
ஜவ்வாதுமலைக்கு திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடி, ஆலங்காயம் வழியாகவும்; வேலூர் மாவட்டத்திலிருந்து அமிர்தி வழியாகவும்; திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து போளூர் மற்றும் செங்கம் வழியாகவும் என நான்கு வழிகளில் அடையலாம் என்கிறார்கள். ஜவ்வாது மலையில் ஊறல் போட்டு காய்ச்சப்படும் சாராயம் மேற்கண்ட நான்கு தடங்களின் வழியாகவே விற்பணைக்கு கீழே கொண்டு வரப்படுவதாக சொல்கிறார்கள்.
ஜமுனா மரத்தூர், போளூர், கலசப்பாக்கம், கந்தவாசல் போலீஸ் லிமிட்டில் லோக்கல் போலீசாரை சரிகட்டி இந்த பகுதிகளில் கள்ளச்சாராய விற்பணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கிறார்கள். லாக்டவுன் சமயத்தில் மலைப்பகுதியில் ஊறல் போட்டு தயாரித்த பாக்கெட் சரக்கு சக்கைப் போடு போட்டதாகவும் குறிப்பிடுகிறார்கள். மரக்காணம் கள்ளச்சாராய சாவை தொடர்ந்து, திருவண்ணாமலை எஸ்.பி.யின் கடுமையான ரெய்டு நடவடிக்கையால் பெருமளவு குறைந்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
பொதுவில், பாக்கெட் சாராயத்தை காட்டிலும் பாட்டில் சரக்கின் விலை மூன்று மடங்கு அதிகமாக விற்கப்படுவதும்; அன்றாடங்காய்ச்சிகளும் கடும் உடல் உழைப்பில் அன்றாடம் ஈடுபடுபடும் விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்டு சாமானியர்களின் எளிய தேர்வாக பட்டை சாராயம் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
போலீசின் கெடுபிடி காரணமாக, ஊறல் போட்டு கொண்டு வரப்படும் சரக்கின் தட்டுப்பாடு ஒருபுறம்; அவ்வாறு கொண்டுவரப்படும் சரக்கிலும் குறிப்பிட்ட அளவே தண்ணீரை கலந்து விற்க முடியும்; இலாபத்தை உத்தரவாதப்படுத்தும் அளவுக்கு தண்ணீரையும் கலந்தாக வேண்டும் அதேசமயம் வாடிக்கையாளர்களுக்கு போதையும் ஏறியாக வேண்டும். இதற்கான எளிய தீர்வாகத்தான் இவர்களுக்கு மெத்தனால் கை கொடுக்கிறது. பொதுவில் மெத்தனால் கலப்பதே உடலுக்கு தீங்கு எனும் பொழுது, இலாபத்திற்கு அளவுக்கு அதிகமாக கலக்கப்படுவதன் காரணமாகவே இதுபோன்ற துர்சம்பவங்கள் நேர்ந்துவிடுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.
மிக முக்கியமாக, கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வந்த சுரேஷ், பண்ருட்டியில் ஜோதி சிப்ஸ் என்ற பெயரில் கடை நடத்தி வரும் சக்திவேல் என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். தன்னுடைய ஜி.எஸ்.டி. பில்லை மாதேஷ் ஜி.எஸ்.டி. எண்ணை பயன்படுத்தி தனியார் ஆலை ஒன்றிலிருந்து மொத்தமாக மெத்தனாலை வாங்கி வந்து, தேவைக்கேற்ப ஊறல் சரக்கோடு மெத்தனாலையும் சப்ளை செய்து வந்திருக்கிறார்.
ஊறல் போட்டு வடித்து எடுக்கும் பட்டை சாராயத்தில் போதைக்காக, அதிக இலாபத்திற்காக மெத்தனாலை கலந்து விநியோகிப்பது ஒருபுறமிருக்க; முழுக்க முழுக்க எத்தனாலில் தண்ணீர் மட்டுமே கலந்து கலக்கல் சாராயமாகவும் பல இடங்களில் விற்பணை செய்யப்படுவதாகவும் சொல்கிறார்கள். என்னதான் தண்ணீர் கலந்து அதன் வீரியத்தை குறைத்து பாக்கெட் சாராயமாக விற்றாலும் அது மெல்லக் கொல்லும் விஷம் என்பதில் மாற்றமில்லை.
குறிப்பாக, கடந்த ஆண்டு மே-13 மரக்காணத்தில் விஷ சாராயம் அருந்தியதில் 14 பேர் உயிரிழந்த சம்பவத்திலும் அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்திலும் மெத்தனால் கலக்கப்பட்ட சாராயம்தான் சாவுக்கான காரணம் என்பதாக சொல்லப்பட்டது. மேலும், வில்லியனூரை அடுத்த கரசூரில் கெமிக்கல் ஆலை நடத்திவரும் ஏழுமலை என்பவர் தான் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான எத்தனாலை சாராய வியாபாரிகளுக்கு வழங்கினார் என்ற புகாரில் அப்போது கைது செய்யப்பட்டார். தற்போது, கள்ளக்குறிச்சி விவகாரத்திலும் அதே ஏழுமலைதான் மெத்தனால் சப்ளை செய்திருக்கிறார். இந்த முறை ஏழுமலையோடு பர்கத் அலி என்பவரையும் சேர்த்து கைது செய்திருக்கிறார்கள். மெத்தனால் சப்ளை செய்ததாக, சென்னை புழல் வடபெரும்பாக்கம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் சிவக்குமார் என்பவரையும் கைது செய்திருக்கிறார்கள்.
கன்னுக்குட்டி கோவிந்தராஜன் என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளச்சாராயம் விற்பதையே தொழிலாக கொண்டிருக்கிறார். அவர் மீது 40-க்கும் அதிகமான வழக்குகள் இருக்கிறது. கள்ளச்சாராயம் விற்றதற்காக குண்டாசிலும் சென்று வந்திருக்கிறார். கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக கைதாகியிருக்கும் சுரேஷ் மீதும் நாற்பதுக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அவரும் இரண்டு முறை குண்டாசில் சென்று வந்திருக்கிறார். கடந்த ஆண்டு மெத்தனால் சப்ளை செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட அதே ஏழுமலை மீண்டும் அதே குற்றச்சாட்டிற்காக இப்போது கைதாகியிருக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே பழைய குற்றவாளிகள்தான். கள்ளச்சாராய விற்பணை உள்ளிட்ட வழக்குகளை பின்னணியாக கொண்டவர்கள்தான். ஆக, இந்த விவரங்கள் நமக்கு உணர்த்தும் செய்தி, லோக்கல் போலீசு, மதுவிலக்கு போலீசு, வருவாய்த்துறை அதிகாரிகள், லோக்கல் அரசியல் புள்ளிகள் ஆகியோரின் ஆதரவில்லாமல் அல்லது அவர்களுக்கு தெரியாமல் இந்த நெட்வொர்க் செயல்படுவதற்கான சாத்தியமே இல்லை என்பதுதான்.
தொழிலே வேண்டாம் என்று ஒதுங்கிச் சென்றாலும், போலீசே பழைய வழக்குகளை காட்டி, தொழிலை தொடர நிர்ப்பந்திப்பதாகவும் சாராய வியாபாரிகள் தரப்பில் வைக்கும் குற்றச்சாட்டுகளிலும் உண்மை இல்லாமல் இல்லை. அந்த அளவுக்கு பணம் கொழிக்கும் தொழிலாக கள்ளச்சாராய பிசினஸ் இருந்து வருகிறது என்பதுதான் யதார்த்தம்.
இந்த விவகாரம் தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சேலம் மாவட்ட செயலாளர் மேவை சண்முகராஜாவிடம் அங்குசம் சார்பில் பேசியபோது, ”ஏதோ மலைப்பிரதேசங்களில், ஊர் எல்லையில், தெரியாமல் விற்றதாக அல்ல; கள்ளக்குறிச்சியினுடைய போலீஸ் ஸ்டேசனுக்கும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு நடுவில் விற்கப்பட்டிருக்கிறது என்பதுதான் மிகப்பெரும் கொடுமை. காவல்துறைக்கு தெரியாது என்பது கேலிக்குரிய விசயம்.
மதுவிலக்கு அமல்படுத்தும் பிரிவு என்பது தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் எங்கு காய்ச்சப்படுகிறதோ அதை முறையாக கண்டறிந்து அது ஒழிக்கப்பட வேண்டும்; சம்பந்தபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட துறை அது. ஆனால், தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சியில் அந்த மதுவிலக்கு அமல்படுத்தும் பிரிவு என்பது சாராயம் காய்ச்சுபவர்களை முறையாக கண்டறிந்து அவர்களிடம் கமிஷன் வாங்கும் துறையாக மாறிவிட்டதோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் துவக்கத்தில் ஏற்பட்ட இரண்டு, நான்கு மரணங்களின்போது கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர் பத்திரிகையாளர் சந்திப்பில் இது கள்ளச்சாராய சாவினால் ஏற்பட்ட மரணம் அல்ல என்று பத்திரிக்கை சந்திப்பில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் வந்தது? மாவட்ட ஆட்சித்தலைவர் கைது செய்யப்பட வேண்டும். காவல்துறை கண்காணிப்பாளரில் இருந்து எஸ்.பி.ஏட்டிலிருந்து எஸ்.பி. இன்ஸ்பெக்டர் உள்ளிட்டு கீழே உள்ள அனைத்து நபர்கள் மீதும் கடுமையான கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இடமாறுதல் என்பது ஏமாற்றுகிற வேலை.
கல்வராயன்மலை கள்ளக்குறிச்சி சேலம் மாவட்டத்தை இணைக்க்கூடிய மலை. சின்னக்கல்வராயன், பெரிய கல்வராயன் என சொல்லப்படுகிறது. கள்ளக்குறிச்சிக்குட்பட்ட கல்வராயன் மலையில் 15-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றங்கள் இருக்கிறது. ஏராளமான மலைவாழ் மக்கள் வாழ்கிறார்கள். அந்தப் பகுதியில் நீண்ட காலமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த கள்ளச்சாராய மரணத்திற்குப் பிறகுதான் வெட்டவெளிச்சமாகிறது. ஆனால், தமிழக அரசினுடைய உளவுத்துறையோ, மதுவிலக்கு அமல்படுத்தும் பிரிவு காவல்துறைக்கே தெரியாமல் இவ்வளவு காலம் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது என்று சொன்னால் எல்லோரையும் ஏமாற்றுகிற வேலை. காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிந்த விவகாரமாகத்தான் இதை நாங்கள் கருதுகிறோம். இதன்மீது சரியான விசாரணை நடத்தி சம்பந்தபட்ட அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைக்கு உள்ளாக்க வேண்டும்.
அதே நேரத்தில், குடிப்பழக்கம் தமிழகத்தை பெரிய அளவில் ஆட்படுத்தி வருகிறது. அடிமைபடுத்தி வருகிறது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்துபோன முதல் நபர்கள் பிரவீன், சுரேஷ் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க வந்தவர்கள் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு இறந்த விசயம் வேதனையானது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், மீண்டும் கள்ளச்சாராயம் குடித்து பாதிப்பிற்குள்ளான விசயம் தெரியவருகிறது. ஆக மக்கள் மத்தியில் போதைக்கு அடிமையாகிவிட்ட சூழலில் இதிலிருந்து மக்கள் விடுபட உண்மையாக நேர்மையாக செயல்படுகிற மறுவாழ்வு மையங்கள் உடனடியாக திறக்கப்பட வேண்டும். கவுன்சிலிங் கொடுக்கப்பட வேண்டும்.
கள்ளச்சாராயத்தை அனுமதித்தது அரசு. கண்டும் காணாமல் இருந்தது காவல்துறை. இதனால் பாதிக்கப்பட்டு குடும்பத்தலைவர்கள் இறந்திருக்கும் பொழுது, அந்த குடும்பம் நிர்கதியாகிவிடக்கூடாது. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.” என்கிறார் அவர்.
“நாங்கள் மட்டும்தான் பொறுப்பா? வருவாய்த்துறைக்கு இதில் பங்கு இல்லையா? எங்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது பாரபட்சமானது.” என போலீசு தரப்பில் புலம்புவதாகவும் சொல்கிறார்கள். குறிப்பாக, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் குறித்த விவரங்களை சரிபார்ப்பது வருவாய்த்துறையின் பொறுப்பில்தான் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மிகமுக்கியமாக, கள்ளக்குறிச்சி விவகாரத்திலேயே கன்னுக்குட்டி கோவிந்தராஜன் இருபது ஆண்டுகளாக தொழிலை தொடர்ந்து வருகிறார் என்ற உண்மையின் வழியே இழையோடும் விசயம், லோக்கல் போலீசு, மதுவிலக்கு போலீசு, உளவுப்போலீசு, வருவாய்த்துறை, அரசியல் கட்சிகளின் மறைமுக ஆதரவு இல்லாமல் சாராய சாம்ராஜ்யத்தை தொடர்ந்திருக்க முடியாது என்பதுதான். அதிலும் குறிப்பாக, ஆட்சிமாறினாலும் காட்சி மாறாமல் கள்ளச்சாராய விற்பணை கனஜோராக நடைபெற்று வந்திருக்கிறது என்பதும்தான்.
– ஆதிரன்