நமக்கான வாழ்க்கையை நாம் வாழ வேண்டும் – ‘யுகா’ அமைப்பின் தலைவி அல்லிராணி
நமக்கான வாழ்க்கையை நாம் வாழ வேண்டும் – ‘யுகா’ அமைப்பின் தலைவி அல்லிராணி
திருச்சி மாவட்டம் குளித்தலையை சொந்த ஊராக கொண்டு தற்போது திருச்சியில் தொடர்ந்து பல புதிய சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் யுகா அமைப்பின் தலைவி அல்லிராணி அளித்த சிறப்பு நேர்காணல்
எனக்கு சொந்த ஊர் குளித்தலை விவசாய குடும்ப பின்னணியில் வளர்ந்த நான் என்னுடைய பள்ளி படிப்பை குளித்தலையிலும், கல்லூரி படிப்பை திருச்சி சீத்தாலட்சுமி ராமசாமி கல்லூரியிலும் முடித்தேன். என்னுடைய தாத்தா முத்துகிருஷ்ணன் தான் என்னுடைய முதல் குரு அவரை பார்க்க வரும் மக்களுக்கு அவர் செய்யும் நன்மைகள், அவருடைய அணுகு முறை இவை எல்லாமே எனக்குள் படிப்பினையை கொடுத்தது.
கல்லூரி காலத்திலே 10 வருடங்களுக்கு முன்பு பல அமைப்புகளுடன் இணைந்து என்னுடைய பணிகளை செய்ய துவங்கினேன். தற்போது பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கான அமைப்பாக “யுகா” என்ற அமைப்பை துவங்கி நடத்தி வருகிறேன்.
இந்த சமுதாயத்தில் பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்றால் நமக்கான வாழக்கையை நாம் வாழ வேண்டும் என்பது மட்டுமே. அதோடு சமுதாயத்தில் பெண்கள் நேர்மறையான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். பல்வேறு குணாதிசயங்களை கொண்ட மனிதர்கள் வாழும் இந்த சமுதாயத்தில் நான் சந்தித்த ஒவ்வொருவரிடமும் இருந்து ஒரு நன்மையானதை மட்டும் நான் தேர்வு செய்துகொள்வேன்.
பாரதியார் கண்ட புரட்சி பெண்கள் இன்றும் இந்த சமுதாயத்தில் உள்ளனா். பாரதியார் எழுதிய வரிகள் பெண்களுக்கான அடிமைத்தனத்தை இந்த சமுதாயத்தில் இருந்து விரட்டி அடித்தாலும், தவிர்க்க முடியாத சில காரணங்கள் இன்றும் பெண்களை அடிமையாக தான் வைத்திருக்கிறது. கடந்த காலங்களைவிட இன்றைய காலத்தில் சமையல்கட்டுகளை விட்டு வெளியே வந்துள்ளனர்.
இந்த சமுதாயத்தில் உள்ள மனிதர்கள் அவர்களுடைய மனித தன்மையை உணர்ந்தால் பல தவறுகள் குறையும். ஆண், பெண் ஒவ்வொருவரும் தங்களுக்கான வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். பெண்களுக்கான சில அடிப்படை தடைகள் எனக்கும் வந்தது நான் அதை கடந்து வந்துவிட்டேன். இன்றைய காலகட்டத்தில் வெளிநாடுகளில் உள்ள தமிழ் பெண்கள் கூட தங்களுடைய கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளனா்.
இப்படிபட்ட சமுதாயத்தில் என்னை மிகவும் பாதித்த சில விஷயங்கள் தங்களுடைய பெற்றோர்களை பாதுகாக்க முடியாமல் சாலையோரங்களிலும், முதியோர் இல்லங்களிலும் இருப்பதை பார்க்கும் போதெல்லாம் அதை சொல்ல வார்த்தைகளே இல்லை.
தற்போது யுகா அமைப்பின் மூலம் குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். முதலில் குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டுதல்களை ஒவ்வொரு பெற்றோரும் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கான வழிகாட்டுதல் தான் நாளை நல்ல சமுதாயம் உருவாக வழிவகுக்கும். நாங்கள் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் அரசு பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு தங்களுடைய இலக்கு எது என்பதை தேர்ந்தெடுக்க கற்றுகொடுத்துள்ளோம். இதேபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் பள்ளியில் பயிலும் குழந்தைகள் அனைவருக்கும் பள்ளி பருவத்திலேயே அவர்களுக்கான இலக்கை முடிவு செய்வது தான் யுகா அமைப்பின் இலக்கு. அடுத்ததாக இளைஞர்கள் ஆட்டு மந்தைகள் போன்று கூட்டம் கூட்டமாக இலக்குகளே இல்லாமல் பணியாற்றும் நிகழ்வு இந்த சமுதாயத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு இளைஞர்களும் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்ற இலக்கை முதலில் தீர்மானிக்க வேண்டும் என்பதை தன்னுடைய வேண்டுகோளாக முன்வைக்கிறார்.
நான் செய்யும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும், என்னுடைய அம்மா, மகள் இருவரும் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்வார்கள். குறிப்பாக என்னுடைய மகள் எனக்கு கூறும் அறிவரை எந்த நிகழ்ச்சியை நடத்தினாலும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று கூறுவார்.
சோர்வை முகத்தில் காட்ட கூடாது, உடை விஷயத்தில் எனக்கு அழகு கலை நிபுணராக ஈடுபடுத்திகொள்வார். பல வருடங்களாக எந்த நிகழ்ச்சிக்கும் வராத என்னுடைய அம்மா கடந்த சில நிகழ்ச்சிகளில் அவரும் வந்து கலந்துகொண்டு என்னுடைய நிறைகுறைகளை கூறுவதோடு ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ரசித்துவிட்டு மிகவும் சந்தோசப்படும் ஒரு நல்ல உள்ளம்.
என்னுடைய கணவர் பாலாஜி முழுமையாக விவசாயத்தையும், விவசாயம் சார்ந்த தொழில்களையும் கவனித்துகொண்டு வருகிறார். அவர் இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் வந்ததில்லை, ஆனால் அந்த நிகழ்ச்சி பற்றி முழுமையாக அறிந்துகொள்வார்.
என்னை சுற்றி உள்ள என்னுடைய குடும்பத்தார், மட்டுமல்லாமல் என் நலம் விரும்பிகள் அனைவரும் நான் நினைத்த நிகழ்ச்சியை செய்ய ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனா். பல அமைப்புகள் மூலம் சமுதாயம் சார்ந்த பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாலும், பெண்களுக்காகவும், பெண்களே பங்கெடுத்து அவர்கள் முன் நின்று நடத்தும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அமைய வேண்டும் என்பதே யுகாவின் நோக்கமாகும்.
அல்லிராணி என்பவர் இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல மனுஷி என்ற அடையாளம் மட்டும் தான் எனக்கான அங்கீகாரம்.
இங்கு நான் மட்டும் நல்ல மனுஷி என்ற அடையாளத்தை தாண்டி ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பங்காக இந்த சமுதாயத்திற்க்கு ஏதோ ஒரு வகையில் தன்னுடைய பங்களிப்பை வழங்க வேண்டும். அது தான் இந்த சமுதாயத்தில் அவர்களுக்கான மனிஷி, மனுஷன் என்ற அந்தஸ்தையும், ஆசிர்வாதமான வாழ்க்கையையும் கொடுக்கும்.
19-06-2017