அமரன் – மிலிட்ரி மீது ஏன் கல்லெறிந்தார்கள் ?
அமரன் திரைப்படம் பார்த்துவிட்டு தியேட்டரிலேயே அப்படி அழுதேன் இப்படி அழுதேன் என்று பலர் சொல்கிறார்கள். அது சரிதான். அழ வைப்பதற்கென்றே தயாரித்த படமாக இருக்கிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் மரணம் துயரமானது. அவரது தியாகம் போற்றுதலுக்குரியது. அவரது மரணம் மட்டுமல்ல ஒவ்வொரு ராணுவ வீரரின் தியாகமும் போற்றுதலுக்குரியது.
படத்தைப் பார்த்ததிலிருந்து என் மனது சமனடைய மறுக்கிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் படம் என்பதால் கஷ்மீரில் அல்டாப்வானி என்ற குற்றவாளியை பிடிக்க நடத்திய மிலிட்ரி ஆப்ரேசனையும் அதில் அல்டாப்வாணியை அவர் சுட்டுக் கொன்றதையும் எதிர் தாக்குதலில் முகுந்தும் குண்டடிபட்டு மரணமடைந்ததையும் காட்டாமல் இருக்க முடியாது.
அதே சமயம் இப்படியான உண்மைச் சம்பவங்களை படமாக்கும் போது உண்மையான களத்தையும் இரு தரப்பு நியாயங்களையும் பேச வேண்டும். ஆனால் அமரன் இராணுவத்தின் அரசு தரப்பின் நியாயத்தை மட்டுமே பேசுகிறது. அதற்கும் மேலே கஷ்மீரின் பொது மக்களை தவறாகச் சித்தரித்துள்ளது.
குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக கஷ்மீர் பொது மக்கள் அதாவது இஸ்லாமிய மக்கள் மிலிட்ரி மீது கற்களை வீசுவதாகக் காட்டுகிறது. ஆம் கஷ்மீர் பொது மக்கள் ராணுவ வீரர்கள் மீது கற்களை வீசினார்கள். பள்ளிக்கூடம் போகும் சிறு வயது மாணவிகளும் ராணுவத்தின் மீது கற்களை வீசினார்கள். ஏன் அவர்கள் கற்களை வீசினார்கள். அதற்குப் பின்னால் உள்ள பயங்கரமான உண்மையை இந்தப் படம் சொல்லவில்லை. மாறாக உண்மையைத் திரித்துவிட்டது.
2008 கோடையிலிருந்துதான் பொதுமக்கள் மிலிட்ரி மீது கல்வீசுவது ஒரு போராட்ட வடிவமாக கஷ்மீர் பள்ளத்தாக்கில் உருவெடுத்தது. ஸ்ரீநகர் அருகிலுள்ள மச்சில் என்ற இடத்தில் மிலிட்ரி அரங்கேற்றிய போலி என்கவுண்டரில் 3 அப்பாவி இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2008 ஜூன் 11 அன்று டுஃபல் மாட்டூ என்ற பள்ளி மாணவன் ராணுவத்தின் கண்மூடித்தனமான கண்ணீர் புகை குண்டு வீச்சில் கொல்லப்பட்டான். இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ராணுவத்தின் மீது கற்களை வீசினார்கள். பிறகு அதுவே போராட்ட வடிவமாக மாறியது.
கஷ்மீர் பள்ளத்தாக்கில் விசாரணை என்ற பெயரில் இந்திய ராணுவம் எத்தனை இஸ்லாமிய இளைஞர்களை, சிறுவர்களை தூக்கிச் சென்று சித்தரவதை செய்துள்ளது. கொன்றுள்ளது. எத்தனை இஸ்லாமிய இளம் பெண்களை, பள்ளிக்கூடம், கல்லூரி சென்று கொண்டிருந்த மாணவிகளை இந்திய ராணுவம் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. கொன்று பிணத்தை தூக்கி வீசியுள்ளது.
எத்தனை முறை தடை செய்யப்பட்ட பெல்லட் குண்டுகளை பொதுமக்கள் மீது பயன்படுத்தியுள்ளது. பல பத்தாண்டுகளாக இதையெல்லாம் சகித்துக் கொண்டிருந்த மக்கள் வேறு வழியில்லாமல் மிலிட்ரி மீது கற்களை வீச போராடத் தொடங்கினார்கள். அதன் அடுத்த கட்டமாக தங்கள் உடலைக் காப்பாற்றிக் கொள்ள பெண்களே அதுவும் மாணவிகளே ரோட்டில் இறங்கி மிலிட்ரி மீது கற்களை வீசினார்கள்.
ஆனால் இந்த உண்மையைத் திரித்து குற்றவாளிகளை காப்பாற்றத்தான் மக்கள் கற்களை வீசுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் குற்றாவாளிகளை காப்பாற்ற ஒரு சிலர் கற்களை வீசியிருக்கலாம். அது பொதுமக்கள் அல்ல.
ஆனால் இந்திய ராணுவத்தின் சித்ரவதை, மனித உரிமை மீறல்கள், கொலை, பாலியல் வன்கொடுமைக்கு எதிராகத்தான் பெரும்பான்மையான கல் வீச்சுகள் நடந்துள்ளது. தங்களின் அரசியல் உரிமைக்காக அரசுக்கு எதிரான போராட்டமாகத்தான் கஷ்மீர் மக்களின் கல்வீச்சு நடந்துள்ளது. குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக அல்ல.
ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை ஏன் காட்டவில்லை. காட்சிகளால் இல்லையென்றாலும் குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட ஒரு வெகு சனத்தின் எதிர் கேள்வி அல்லது ஆதங்கம் அல்லது வசனத்தின் ஊடாகக்கூட பதிவு செய்யவில்லை. இது முழுக்க முழுக்க ராணுவத்தின் பார்வையில் அரசின் பார்வையில் எடுக்கப்பட்ட படம். எப்படிப்பட்ட ஒரு தலைப்பட்சம். வரலாற்றுத் திரிபு. இந்தப் புள்ளியிலேயே படம் தன் அறத்தை இழந்துவிட்டது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
திரைக்கதையை ஒன்றிய பாதுகாப்புத்துறை, முகுந்தின் குடும்பம், முகுந்தின் மிலிட்ரி நண்பர்கள் ஆகிய மூன்று தரப்பினரிடமும் காட்டி ஒப்புதல் பெற்றுதான் படத்தை தயாரித்தோம் என விளக்கம் சொல்லும் தயாரிப்பாளர் கமல்ஹாசன் அவர்கள் ஏன் கஷ்மீர் மக்கள் எவரிடமும் கருத்துக் கேட்கவில்லை. எப்படி ஒரு ஒட்டுமொத்த சமூகத்தையே தீவரவாதிகளாகவும் தீவரவாதிகளுக்கு உதவி செய்பவர்களாகவும் சித்தரிப்பீர்கள்.
முகுந்த் கஷ்மீரில் பணியில் சேர்ந்த போது அவருடைய மேலதிகாரி கஷ்மீரின் அரசியல் வரலாற்றை ஒரு டாக்குமெண்ட்ரியாக முகுந்திற்கு போட்டுக் காட்டுவார். அதிலும் உண்மையும் கஷ்மீரில் நடக்கும் வன்முறைகளுக்கான பின்னனி வரலாறும் மறைக்கப்பட்டுள்ளது.
கஷ்மீர் மன்னர் கஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் கையெழுத்திட்ட போது ஒப்புக்கொள்ளப்பட்ட கஷ்மீர் முதலமைச்சர் கஷ்மீர் பிரதமர் என அங்கீகரிக்கப்படுவார் என்ற வாக்குறுதி, இந்தியாவுடன் இணையலாமா வேண்டாமா என மக்களின் கருத்தை அறிய 5 ஆண்டுகளுக்குள் ஐ.நா. சபை மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற நிபந்தனைகளை இந்திய அரசு இதுவரை நயவஞ்சகமாக செயல்படுத்தவில்லை என்ற உண்மையை திட்டமிட்டு மறைத்து விட்டார்கள்.
படத்தில் பல காட்சிகளில் இராணுவ வீரர்கள் “ஜெய் பஜ்ரங் பலி” என கோஷமிடுகிறார்கள். இயக்குனர் ராஜ்குமார் அவர்களே இது என்ன தேசபக்தி கோஷமா, நாட்டுப்பண்ணா, இல்லை தேசிய கீதமா? RSS, VHP, பஜ்ரங்தள், சங்பரிவார் கூட்டங்கள் கூச்சலிடும் மதவெறி கோஷங்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா. இதை எப்படி ராணுவ வீரர்களை முழங்க வைத்தீர்கள்.
— மு.ஆனந்தன்.