எடப்பாடியாரை கதறவைத்த விஜய் !
இதுவரை திரைப்படங்களில் மட்டுமே நீளமான அரசியல் வசனங்களையும் பஞ்ச் டயலாக்குகளையும் பேசிவந்த நடிகர் விஜய், முதல்முறையாக இலட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் மைக்கை பிடித்து பேசி அசத்தியிருக்கிறார். ஜெ. பாணியில் குட்டிக் கதைகளை சொல்லியும் கடைசி வரையில் பெயரை குறிப்பிடாமல் திமுகவையும் அதன் திராவிட அரசியலையும் கடுமையாக சாடி பேசியதும் அரசியல் சூட்டை கிளப்பியது. இவற்றையெல்லாம்விட, கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்படும் தருணங்களில் கூட்டணி கட்சியினருக்கும் ஆட்சியில் பங்கு கொடுக்கப்படும் என்பதாக விஜய் பேசியது பெரும் விவாதத்தையும் கிளப்பியிருந்தது.
திமுகவை டார்கெட் செய்து விஜய் பேசியதாக சொல்லப்பட்டாலும், உண்மையில் படு அப்செட் ஆனது என்னவோ, அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமிதான் என்கிறார்கள். மாநாட்டுக்கு தேதி குறித்து, இடம் பார்ப்பதற்கு முன்பாகவே, எடப்பாடியார் – விஜய் தரப்பில் சில டீலிங்குகளை பேசியிருக்கிறார்கள். ”துட்டு ஆயிரம் ”சி”, 100 சீட்டு, துணை நாற்காலி ” என்றும் சுமுகமாக முடிவானதாம்.
ஜெ.வின் மறைவிற்கு பிறகு, அதிமுக நாலாபுறமும் சிதறியுள்ள நிலையில், மிக முக்கியமாக சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். உள்ளிட்டு கட்சிக்குள்ளேயே இருக்கும் சில துரோகிகள் எடப்பாடியை தனிமைப்படுத்த முயற்சித்த நிலையில்தான் இந்த டீலிங் நடைபெற்றிருக்கிறது.
அதிலும் குறிப்பாக, ஒன்று கட்சியை காப்பாற்றிக்கொள்வது; குறிப்பிட்ட கட்சியினருக்கான கட்சி என்ற முத்திரையை மாற்றி, கொங்கு மண்டலத்திலிருந்து எடப்பாடியை முதல்வராக்குவது; தமிழகத்தில் கடும் விமர்சனத்துக்குள்ளாகிவரும் பாஜகவுடனான சகவாசத்தை கைவிடுவது என்பதான மூன்று நோக்கங்களையும் மனதில் வைத்தே ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்பதாக, அந்த பேச்சு வார்த்தையும் நடந்து முடிந்திருக்கிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வேறொரு நடிகரை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட திரைக்கதைக்கு, கடைசி நேர ட்விஸ்ட்டாகி சம்பந்தமில்லாத இன்னொரு நடிகரை வைத்து படம் எடுக்க நேர்வது கோலிவுட்டில் சர்வசாதாரணம். அதுபோலவே, எடப்பாடியாரை முதல்வராக்குவது; விஜய்க்கு துணை முதல்வர் பதவியும் ஆட்சியில் பங்கும் கொடுப்பது என்பதாக இருந்த ஸ்கிரிப்ட், மாநாட்டு மேடையில் அப்படியே உல்ட்டாவாக மாறிப்போனது. எங்களோடு யார் கூட்டணி வைக்க முன்வந்தாலும், அவர்களுக்கு ஆட்சியில் பங்கு என்பதாக விஜய் தனது சொந்த வசனமாகவே பேசி கைத்தட்டலை அள்ளிக்கொண்டார்.
பொதுவில், விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள் பெரும்பாலும் அண்டை மாநிலங்களிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட படங்களாகவே அமைந்திருக்கும். அதே சக்சஸ் பார்முலாவின்படியே, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியிலும் பங்கெடுத்த பவன்கல்யாண் பாணியில் 2026 இல் ஆட்சியமைப்பது என்பதாக எடப்பாடியார் போட்ட கணக்கும் தப்பிப்போனது.
தம்பி விஜய் தயவில் துணை முதல்வர் பதவியை எதிர்நோக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார், எடப்பாடியார். விஜயுடனான எடப்பாடியின் இந்த டீலிங்குகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி, “விஜயிடம் கட்சியை அடகு வைத்துவிட்டார் எடப்பாடி” என்பதாக சொந்தக் கட்சியினரின் அவச்சொல்லுக்கும் ஆளாகிவிட்டார், எடப்பாடியார்.
— விசாகன்.
வாழ்த்துகள்