அம்மா உணவகம் பக்கத்திலேயே டாய்லெட் – இது மாற்றமில்லை துர்நாற்றம் !
”ஏழைகளின் பசிப்பிணி தீர்க்கும் அம்மா உணவகத்துக்கு பக்கத்திலேயே கழிவறைக்கான செப்டிக் டேங்க் கட்டுவீர்களா? இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா? துர்நாற்றமாக அல்லவா இருக்கிறது?” என்பதாக நகர்மன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய விவகாரம் துறையூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
துறையூர் நகர்மன்றக் கூட்டத்தில் ஆணையர், நகராட்சி பொறியாளர் பங்கேற்காததாலும், பங்கேற்ற அலுவலர்கள் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அமைதியாக இருந்ததாலும் நகர்மன்றத் தலைவர் கூட்டத்தை ஒத்தி வைத்தார்.
துறையூர் நகர்மன்றக் கூட்டம் நேற்று நகர்மன்றத் தலைவர் செல்வராணி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் மெடிக்கல் முரளி, மேலாளர் அம்பிகா முன்னிலை வகித்தனர். உதவி பொறியாளர் ஆதித்யா, இளநிலை பொறியாளர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் முரளி, நகரமைப்பு ஆய்வாளர் தவமணி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் லலிதா, நித்யா, கார்த்திகேயன், முத்துமாங்கனி, ஹேமா, கவுதமி, சுதாகர், இளையராஜா, திவ்யா,சந்திரா, ஜானகிராமன், பாலமுருகவேல், நியமன உறுப்பினர் அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தில்,
கார்த்திகேயன்(திமுக) -அம்மா உணவகம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட கழிவறைக்கு செப்டிக் டேங்க் கட்டிடியுள்ளீர்கள் . துர்நாற்றத்திற்கிடையில் ஏழைகள் எப்படி சாப்பிடுவார்கள் என்று யோசித்தீர்களா. யார் சொல்லி அப்படி செய்தீர்கள்.
உதவி பொறியாளர் – பொதுமக்கள் நலனுக்காக எம்எல்ஏ சொல்லித்தான் குழி தோண்டப்பட்டு செப்டிக் டேங்க் கட்டப்பட்டது.
கார்த்திகேயன் – எங்களுக்கு எம்எல்ஏ என்றால் ஸ்டாலின்குமார் தான். தற்போது புதிதாக வந்துள்ள எம்எல்ஏ துணை சபாநாயகரை சொல்கிறீர்களா. அம்மா உணவகம் எதிரில் ஏற்கனவே கழிவுநீர் வழிந்தோடி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில், அதன் அருகிலேயே கழிவறை மற்றும் செப்டிக் டேங்க் எப்படி கட்டலாம், இதற்காக முறையாக நகர்மன்றத்தில் அனுமதி பெற்றீர்களா? கழிவறைகள் மற்றும் செப்டிக்டேங்க் கட்டச்சொன்ன துணை சபாநாயகரை அம்மா உணவகத்தில் வந்து சாப்பிடச் சொல்லுங்கள். துர்நாற்றத்திற்கிடையில் உணவு சாப்பிடுவாரா? அல்லது அதிகாரிகளான நீங்கள் அங்கு சாப்பிடுவீர்களா ? சாப்பிடுங்கள். அப்போது தான் மக்கள் கஷ்டம் தெரியும். மூக்கு முட்ட சாப்பிடுவார்கள் என்றுதான் கேள்விப்பட்டுள்ளேன். மூக்கைப் பிடித்துக் கொண்டு ஏழை மக்கள் உணவை சாப்பிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை இப்போது தான் பார்க்கின்றோம்.மக்கள் எங்களை பற்றி என்ன பேசுவார்கள். உறுப்பினர்கள் மக்களிடம் செல்ல முடியாத அளவுக்கு முடித்துவிடலாம் என செயல்படுகிறீர்களா? இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது, ஒரு விதத்தில் எங்கள் தலைவர் முகஸ்டாலின் சொன்னது போல் இந்த அரசு மாற்றம் இல்லை , துர்நாற்றம் தான் என்பதை உறுதிப்படுத்துவது போல் நகராட்சி நிர்வாகம் செயல்பட்டுள்ளது.
நகர்மன்றத் தலைவர்- அம்மா உணவகத்தில் எலித்தொல்லையால் பொருட்கள் சேதமடைகின்றன எனவும், அதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என கடந்த ஒரு வருடகாலமாக நான் உங்களிடத்தில் சொல்லிவந்தேன். அதற்காக சிறிதும் நடவடிக்கை எடுக்காமல் தற்போது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் அளவிற்கு கழிவறைகள், செப்டிக்டேங்க் கட்டியுள்ளீர்கள் . ஒரு குடிநீர் இணைப்பு அமைக்கவே நிதி இல்லை என்று சொல்லும் நீங்கள் அம்மா உணவகத்தில் பெயிண்ட் அடிப்பதற்கும் கழிவறை செப்டிக் டேங்க் கட்டுவதற்கும் எங்கிருந்து பணம் வந்தது. என்னிடம் இது பற்றி அனுமதி கடிதம் கூட தரப்படவில்லை.
சுதாகர் – நகர்மன்றத்தில் அம்மா உணவகத்தில் செய்யப்பட்ட பணிகளுக்கு அனுமதி கடிதம் கொடுத்துள்ளீர்களா ? நகர்மன்றத்தலைவராகவும் துணை சபாநாயகர் ரவிசங்கர் மாறிவிட்டாரா எனத் தோன்றுகிறது?
கார்த்திகேயன்-தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மத்திய அரசின் தொழில் தீர்ப்பாயம் மற்றும் தொழிலாளர் நீதிமன்றத்தில் ரூ. 65,85,373 கோரி தொடர்ந்த வழக்கில் 25 சதவிகிதம் செலுத்த உத்தரவிட்டதையடுத்து ரூ. 16,46,343 தொகையை திருச்சி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் செலுத்தியிருப்து தொடர்பாக மன்றத்தின் பார்வைக்கு தீர்மானமாக ஏன் வைத்துள்ளீர்கள்.
அமைதிபாலு(அதிமுக) – நகராட்சி பணியாளர்கள் அரசுப் பணியாளர்கள் என்பதால் அவர்களுக்கு சம்பளத்தில் பிடித்து செலுத்தாமல் இருக்க வாய்ப்பில்லை. எனவே இவ்வளவு பாக்கி எந்தப் பணியாளர்களுக்காக செலுத்தினீர்கள்.
மேலாளர் அம்பிகா – ஒப்பந்த பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் செலுத்த வேண்டிய தொகை
அமைதி பாலு -ஒப்பந்த பணியாளர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் தானே செலுத்த வேண்டும். நகராட்சி நிர்வாகம் ஏன் செலுத்த வேண்டும்.
அம்பிகா – செலுத்திய நிதியை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
கார்த்திகேயன் – மக்களுக்கு பயன்படும் வகையில் வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி கேட்டால் நிதி இல்லை என்று கூறும் நகராட்சி நிர்வாகம், ஒப்பந்ததாரர்கள் செலுத்த வேண்டிய தொகை ஏன் செலுத்தியது. இது முறைகேடு இந்த நிதிக்கு நகர்மன்றம் பொறுப்பேற்காது. இந்த நடைமுறை தவறு என்றால் தீர்மானத்தை ஒத்தி வைக்காமல் நீக்கவேண்டும்.
துணை தலைவர் -பழைய பேருந்து நிலையம் முன்பு திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை மறைத்தவாறு பயணிகளுக்கு தற்காலிக நிழற்குடை அமைத்துள்ளீர்கள். ஆட்சி மாறியது என்று அதிகாரிகள் மாறக்கூடாது. நிழற்குடையை 5 அடி உயர்த்துங்கள், அல்லது 5 அடி குறையுங்கள். கலைஞர்கருணாநிதியின் சிலையை மறைக்கும் நோக்கத்திற்காகவே பேருந்து நிலையத்தில் செட் போடப்பட்டுள்ளது.
அமைதி பாலு – பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்படும் என்று முதலில் அறிவித்த போதே பேருந்துகள் அம்மா உணவகத்தை சுற்றிச் செல்லுமாறு ஏற்பாடு செய்யவேண்டும் என்றேன்.
அப்படி செய்திருந்தால் பயணிகளுக்கான நிழற்குடையை தலைவர்கள் சிலைக்கு பின்புறம் அமைத்திருக்கலாம்.
22வது வார்டில் பூங்காவில் கட்டப்பட்டுள்ள கட்டடம் என்ன விவகாரம். தனி நபர் கட்டடம் கட்ட எப்படி அனுமதித்தீர்கள். எனக்கு ஒரு அலுவலகம் வேண்டுமென நினைத்து பூங்காவில் நான் கட்டிக் கொண்டால் விடுவீர்களா. அதை இடிக்காமல் இருப்பதால் சமூக ஆர்வலர் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
கார்த்திகேயன் – குடிநீர் கட்டணத்தை வீடுகளுக்கு ரூ. 80 லிருந்து ரூ. 300க்கும் கடைகளுக்கு ரூ. 305 லிருந்து ரூ. 500க்கும், தொழிற்சாலைகளுக்கு ரூ. 500 லிருந்து ரூ. 1000த்திற்கும் உயர்த்தி கருத்துருவை நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்ப மன்றத்தின் அனுமதி கேட்டுள்ளீர்கள். முதலில் அனைத்துக் கட்டடங்களுக்கும் வரி போடுங்கள். ஏற்கனவே வரி செலுத்துபவர்களிடம் பிடுங்காதீர்கள். வருவாய்த்துறையில் உள்ள அதிகாரிகள் என்ன செய்து கொண்டுள்ளார்கள்.
அமைதி பாலு – உள்ளாட்சி அமைப்பு செயலில் இருக்கும் போதே இந்த அவலம் உள்ளது. அதிகாரிகள் மட்டும் தன்னிச்சையாக செயல்பட்டால் மக்களின் வேதனை எப்படி இருக்கும் என்பதற்கு துறையூர் நகராட்சியின் செயல்பாடுகள் உதாரணமாக உள்ளது.
துணைத்தலைவர்- எந்த ஒரு கேள்விக்கும் ஆணையர்தான் பதில் சொல்ல வேண்டும் என்றால் ஆணையர் இல்லாமல் கூட்டத்தை ஏன் நடத்துகிறீர்கள்.
நகர்மன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அதிகாரிகள் தரப்பில் சரியான விளக்கம் அளிக்காததால் நகர்மன்றக் கூட்டத்தை உறுப்பினர்களின் வேண்டுகோள்படி நகர்மன்றத் தலைவர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
— ஜோஷ்






Comments are closed, but trackbacks and pingbacks are open.