அந்தகன் டைரக்டர் மாறியது ஏன்? தியாகராஜன் சொன்ன சீக்ரெட் !
அந்தகன் டைரக்டர் மாறியது ஏன்? தியாகராஜன் சொன்ன சீக்ரெட்!
ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான ‘அந்தகன்’ திரைப்படம் – வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
இதற்காக ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஆகஸ்ட் 16-ஆம் தேதி மதியம் நடைபெற்றது. இதில் இயக்குநர் தியாகராஜன், இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார், ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த், நடிகைகள் சிம்ரன், வனிதா விஜயகுமார், பிரியா ஆனந்த், செம்மலர் அன்னம், நடிகர் பெசன்ட் ரவி, கலை இயக்குநர் செந்தில் ராகவன், சண்டை பயிற்சி இயக்குநர் ராம்குமார், இயக்குநர் பிரவீண் காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் பிரவீண் காந்த் பேசுகையில், “பிரசாந்த்திற்கு மீண்டும் ஒரு வெற்றியைக் கொடுத்த தியாகராஜனுக்கு வாழ்த்துகள்,” என்றார்.
நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், “இந்தப் படத்திற்காக இணையதளத்தில் வெளியிடப்பட்ட பொதுமக்களின் கருத்தில் ஒரு முக்கியமான விஷயம் இடம் பிடித்திருந்ததை கவனித்தேன். படம் பார்க்கும்போது தியேட்டரில் யாரும் செல்போனை பார்க்கவில்லை என குறிப்பிட்டிருந்தனர். நானும் இந்த திரைப்படத்தை மூன்று முறை ரசிகர்களின் வரவேற்பினை காண்பதற்காக திரையரங்கத்திற்கு சென்றேன். அப்போது யாரும் செல்போனை பார்க்கவில்லை.
அனைவரும் படத்தினை சீரியசாக பார்த்தனர். 90களில் ஒரு திரைப்படத்தை திரையரங்கத்திற்கு சென்று பார்க்கும் போது எந்த மாதிரியான வரவேற்பு கிடைத்ததோ..அது போன்றதொரு வரவேற்பு அந்தகன் படத்திற்கு கிடைத்தது. இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”என்றார்.
நடிகை ப்ரியா ஆனந்த் பேசுகையில், “அந்தகன் போன்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்கு பெருமிதம் அடைகிறேன். இந்தப் படத்தை வெற்றி பெற செய்த பிரசாந்தின் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி,” என்றார்.
சிம்ரன் பேசுகையில், ”திரையுலகப் பயணத்தில 29 வருடங்களை நிறைவு செய்து விட்டேன். இந்த முப்பதாவது ஆண்டில் ‘அந்தகன்’ சூப்பர் ஹிட் படமாக அமைந்திருக்கிறது. இதற்காக நான் இயக்குநர் தியாகராஜனுக்குத் தான் நன்றி சொல்வேன். அவர்தான் இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அளித்தார்.
பிரசாந்த் – என்னுடைய ராசியான ஜோடி. இதற்காக அவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு எனக்கு மிகப்பெரிய பரிசை போன்றது. இந்தப் படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி,” என்றார்.
இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் பேசுகையில், “இதுதான் நிஜமான வெற்றி. படத்தைப் பற்றி வெளியான விமர்சனங்கள் அனைத்தும் சிறப்பானதாக இருந்தன.
இந்தப்படம் திரையிட்ட திரையரங்குகளில் இரவுக் காட்சிகளில் கூட ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் இந்த படக் குழுவினர் வெற்றி விழா கொண்டாடுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஏனெனில் அந்தகன் படம் உண்மையான வெற்றியை பெற்றிருக்கிறது. ,” என்றார்.
இயக்குநர் தியாகராஜன் பேசுகையில், “இந்தப்படத்தில் பிரசாந்த் நாயகனாக இருந்தாலும் அனைத்து கேரக்டருக்கும் சமமான வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.. முதலில் இந்தப்படத்தை மோகன் ராஜா இயக்குவதாக இருந்தது. அவருடன் மூன்று மாதம் இணைந்து பயணித்தோம். இந்த மூன்று மாத காலத்திற்குள் அவர் லண்டனில் உள்ள வெளிநாட்டு நடிகை ஒருவர் இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சொன்னார். அவருடனும் பேச்சு வார்த்தை நடத்தினோம்.
அவர் கேட்ட சம்பளத்தையும் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டோம். ஆனால் மூன்று மாதத்திற்கு பிறகு மோகன் ராஜாவிற்கு சிரஞ்சீவி நடிக்கும் படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தை முடித்த பிறகு இந்த படத்தில் பணியாற்றுகிறேன் என மோகன் ராஜா சொன்னார். நான் நன்றி என்று சொல்லிவிட்டு, உங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக தொடருங்கள் என்றேன். அதன் பிறகு தான் நான் டைரக்ட் பண்ண முடிவு செய்தேன்.
படத்தில் நடித்த அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த திரைப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க அதிபர்களுக்கும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் பேசுகையில், ”அந்தகன் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
படம் வெளியான தருணத்திலிருந்து இப்படத்தைப் பற்றிய விமர்சனம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ரசிகர்களுக்கு பிடித்த அனைத்து நட்சத்திரங்களும் இணைந்து நடித்தது தான் இப்படத்தின் வெற்றிக்கு காரணம் என்றும் சொல்லலாம். அடுத்ததாக இயக்குநர். என் தந்தையாக இருந்தாலும் அவர் படப்பிடிப்பு தளத்தில் கதைக்கு என்ன தேவையோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவருக்கு பக்கபலமாக திறமை வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களும் பணியாற்றினர்.
இந்தப் படத்தின் வெற்றி என் திரையுலக பயணத்தில் இன்னொரு தொடக்கம் தான். தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டும். ரசிகர்களின் அன்பை தொடர்ந்து சம்பாதிக்க வேண்டும். என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், சக நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தேசிய விருதினை வென்றிருக்கும் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் தேசிய விருதை வென்ற அனைத்து கலைஞர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.