துறையூர் சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா .
துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக அலங்காரத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உலகில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும் பசிப்பிணியைப் போக்கும் விதமாகவும், ஆண்டு முழுவதும் விவசாயத் தொழில் செழித்து உணவுப் பஞ்சம் இல்லாமல் இருந்திடவும், அதனை உணர்த்தும் விதமாக,
ஒவ்வொரு வருடமும் , ஐப்பசி மாதத்தில் வருகின்ற பெளர்ணமி தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் மூலவருக்கு அன்னத்தைக் கொண்டு அபிஷேக அலங்காரம் நடைபெறும். அதே போல் திருச்சி மாவட்டம், துறையூர் , உப்பிலியபுரம் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் நேற்று மூலவரான சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேக விழா நடைபெற்றது.
துறையூர் பாலக்கரை நந்திகேஸ்வரர் , காசி விஸ்வநாதர் , உப்பிலியபுரம் அடுத்த கொப்பம்பட்டி சப்தரிஷு ஸ்வரர், எரகுடி ஏகாம்பரேஸ்வரர், உப்பிலியபுரம் பகபதீஸ்வரர், சோபனபுரம் காசி விஸ்வநாதர்,பகளவாடி ஏகாம்பரேஷ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பச்சரிசி கொண்டு வடித்த சாதத்தால் மூலவருக்கு சாற்றுபடி செய்யப்பட்டு , காய்கறிகள் மற்றும் வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்து, மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.துறையூர் பாலக்கரை நந்திகேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பின்னர் பச்சரிசி கொண்டு வடித்த சாதத்தை சுவாமி மேல் சாற்றுப்படி செய்யப்பட்டு காய்கறிகள் மற்றும் வண்ண வண்ண மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
அன்னாபிஷேக சிறப்பு அலங்காரத்தில் நந்திகேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.மேலும் அன்னாபிஷேகத்தில் சுவாமி மேல்சாற்று படி செய்யப்பட்ட சாதம் அனைத்தும் விசேஷ பூஜை செய்யப்பட்டு அருகிலுள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது. பின்னர் மூலவருக்கு தேன், பால் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
அன்னாபிஷேக அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாட்டினை சிவராமன், கோபால், துவாரகேஷ் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.இந்நிகழ்ச்சியில் துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வேணுகோபால் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.