திடீரென்று விலக்கிக்கொள்ளப்பட்ட போலீசு பாதுகாப்பு ! அச்சத்தின் பிடியில் அன்னலெட்சுமி ?
போலீசு பாதுகாப்பை விலக்கிக்கொள்வது அவர்களது நிர்வாக முடிவு. அதில் தலையிட ஏதுமில்லை. ஆனால், ஒரு வார்த்தை எங்களுக்கு சொல்லிவிட்டு செய்திருக்கலாமே? அப்போதும்கூட, சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டருக்கு போன் செய்தேன். தொடர்ந்து ஏழுமுறைக்கு மேல் அழைத்தும் கடைசிவரை எனது அழைப்பை அவர் எடுக்கவேயில்லை.
திடீரென்று விலக்கிக்கொள்ளப்பட்ட போலீசு பாதுகாப்பு ! அச்சத்தின் பிடியில் அன்னலெட்சுமி ? ஊருக்கு சொந்தமான பொது ஏரி ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய தந்தையும் உடன்பிறந்த சகோதரனும் கொடூரமாக கொல்லப்பட்டதையடுத்து, தனக்கும் தனது குடும்பத்திற்கும் நான்காண்டுகளுக்கும் மேலாக, தொடர்ந்து வந்த போலீசு பாதுகாப்பை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி விலக்கிக்கொண்டதன் மூலம் அச்சத்தின் பிடியில் இருத்தப்பட்டிருப்பதாக அச்சம் தெரிவிக்கிறார், திருச்சியைச் சேர்ந்த வீ.அன்னலெட்சுமி.
சுமார் 200 ஏக்கர் அளவிலான ஏரி ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் என்ற ஒரே காரணத்திற்காக, ஏரியை ஆக்கிரமித்தவர்களின் தீராப்பகைக்கு ஆளாகி தந்தை மகன் இருவரும் ஒரே நேரத்தில் கடந்த 2019 – ஆம் ஆண்டு ஜுலை 29- ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கிய சம்பவங்களுள் ஒன்று.
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் முதலைப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற வீரமலை மற்றும் அவரது மகன் நல்லதம்பி ஆகியோரின் இரட்டைக் கொலை வழக்கை மதுரை உயர்நீதிமன்றக்கிளை சூ-மோட்டோ Suo Motu வழக்காக பதிவு செய்து, கொலை வழக்கை முறையாக விசாரித்தல், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்குதல், இழப்பீட்டு தொகை வழங்குதல், அரசு வேலை அல்லது வாழ்வாதார மேம்பாடு மற்றும் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுதல் முதலானவற்றை முன்வைத்து விசாரித்தது. இவ்வழக்கு இன்றளவும் நிலுவையில் இருக்கிறது. முக்கியமாக, பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெண்கள் மற்றும் குழந்தைகளாக இருப்பதாலும் 24 மணிநேர போலீசு பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதாக, அப்போதைய திருச்சி சரக டிஐஜி நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருந்தார். இதன்படி, கடந்த கடந்த 2019 ஆம் ஆண்டு முதல், இரட்டைக் கொலையில் பலியான வீரமலை – நல்லத்தம்பி குடும்பத்திற்கு 24 மணிநேர போலீசு காவல் அமலில் இருந்து வந்தது. அவர்களின் குடியிருப்பு திருச்சி மாவட்ட எல்லையிலும், அதனையொட்டி மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அவர்களின் விவசாய நிலம் குளித்தலை மாவட்ட எல்லையிலும் அமைந்திருந்ததால், குடியிருப்பு பகுதியான இனாம்புலியூர் கிராமத்தில் திருச்சி மாவட்ட போலீசாரும், விவசாய நிலத்தில் குளித்தலை போலீசாரும் 24 மணி நேர ஆயுதம் தாங்கிய போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்தினர்.
இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, கடந்த 30.04.2024 முதல் வீட்டிற்கு வழங்கி வந்த போலீசு பாதுகாப்பை திருச்சி போலீசார் திரும்பப் பெற்றுக்கொண்டதன் மூலம் தங்களை அச்சத்தின் பிடியில் இறுத்திவிட்டதாக கவலை தெரிவிக்கிறார்கள் வீரமலை குடும்பத்தார்.
”எனது தந்தையும் சகோதரனும் இரட்டைப்படுகொலை செய்யப்பட்டதற்கு பிறகு, அதுவரை ஆதரவாக நின்றவர்கள்கூட அச்சத்தில் ஒதுங்கிக் கொண்டனர். அதன்பின்னர், எனது தந்தை முன்எடுத்த பணியை தொடர வேண்டும் என்ற முடிவோடு, ஆவணங்களையெல்லாம் சேகரித்து எனது பெயரிலேயே வழக்கும் தொடுத்தேன். இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் சமயத்தில் போலீசு பாதுகாப்பை விலக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
போலீசு பாதுகாப்பை விலக்கிக்கொள்வது அவர்களது நிர்வாக முடிவு. அதில் தலையிட ஏதுமில்லை. ஆனால், ஒரு வார்த்தை எங்களுக்கு சொல்லிவிட்டு செய்திருக்கலாமே? அப்போதும்கூட, சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டருக்கு போன் செய்தேன். தொடர்ந்து ஏழுமுறைக்கு மேல் அழைத்தும் கடைசிவரை எனது அழைப்பை அவர் எடுக்கவேயில்லை. இதுஎல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.” என்கிறார், வீரமலையின் மகளும் நல்லத்தம்பியின் சகோதரியுமான வீ.அன்னலட்சுமி.
”ஒரே சம்பவத்தில், இன்றுவரை கரூர் போலீசார் பாதுகாப்பை வழங்கிவரும் நிலையில், திருச்சி மாவட்ட போலீசார் மட்டும் பாதுகாப்பை ஏன் விலக்கிக்கொள்ள வேண்டும்? இதெல்லாம்விட, புத்திசுவாதீனம் குறைவான அன்னலட்சுமியின் தங்கை வீட்டில் இருந்த சமயத்தில் அவரிடம் ஏதோ ஒரு பதிவேட்டை கொடுத்துவிட்டு அதைப் புகைப்படமும் எடுத்து சென்றிருக்கிறார்கள். வழக்கை தொடுத்தவரே, அன்னலட்சுமிதான். அவரிடமே நேரடியாக விசயத்தை சொல்லியிருக்கலாமே? எதற்காக இப்படி செய்ய வேண்டும்? நடந்த விவகாரத்தை திருச்சி சரக டிஐ.ஜி. மனோகரிடம் மனுவாக அளித்திருக்கிறோம். நீதிமன்றத்திலும் முறையிட இருக்கிறோம்.” என்கிறார், அன்னலட்சுமிக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் தங்கவேல்.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அறிய, சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் முகம்மது ஜாபரை அங்குசம் சார்பில் தொடர்பு கொண்டோம். நமது அழைப்பையும் ஏற்று பதில் அளிக்கவில்லை. அடுத்து, ஜீயபுரம் டி.எஸ்.பி. பாலச்சந்தரை அணுகினோம். “முதல்விசயம், அவர்களுக்கு இப்போது எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதாலும், போலீசில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதாலும் இந்த முடிவை எடுக்க வேண்டியதாயிற்று. முழுமையாக பாதுகாப்பை விலக்கிக் கொண்டோம் என்றில்லை, ஏ.டி.எம்., மையங்கள் மற்றும் நகரில் முக்கியமான இடங்களில் சுற்றுக்காவல் செய்வதைப் போல, அவர்களது வீட்டிற்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுற்றுக்காவல் செய்து பதிவேட்டில் கையெழுத்திடும்படியான பாதுகாப்பை தொடர்ந்துதான் வருகிறோம்.” என்கிறார் டி.எஸ்.பி. பாலச்சந்தர்.
வீ.அன்னலட்சுமி தொடுத்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் தருணத்தில், அதைவிட முக்கியமாக இரட்டைக் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் குற்றவாளிகள் தங்களது தண்டனைக்கு எதிராக நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ள நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திருச்சி மாவட்ட போலீசார் பாதுகாப்பை விலக்கிக்கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உரிய நடவடிக்கையின் வழியே, அன்னலட்சுமியின் அச்சம் போக்குமா, போலீசும் மாவட்ட நிர்வாகமும்?
– ஆதிரன்.