ரயில்வே துறையின் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி !
ரயில்வே துறையில் உள்ள பல்வேறு துறைகளில் ஒன்றாக ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை செயல்பட்டு வருகிறது. இந்தத் துறை இந்திய அளவில் வருடந்தோறும் அக்டோபர் மாதத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சிறப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு துவக்க நாளான இன்று மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் கோட்ட ரயில்வே மேலாளர் சரத் வத்சவா தலைமையில் ரயில்வே அதிகாரிகள் ஊழியர்கள் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர்ராவ், வேக சக்தி முதன்மை திட்டம் மேலாளர் ஹரிக்குமார், கோட்ட ஊழியர் நல அதிகாரி சங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். “”தேசத்தை வளப்படுத்த ஒருமைப்பாட்டை வளர்ப்போம்” என்ற கருத்தியல் அடிப்படையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இதன் முக்கிய நோக்கமாகும்.
இதற்காக ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி நாடக நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், போன்றவை நடத்தப்படும். மத்திய கண்காணிப்பு ஆணைய இணையதளமான cvc.gov.in – ன் வாயிலாக பொதுமக்கள் மற்றும் ரயில் பயனாளர்களும் மின்னணு உறுதிமொழி எடுத்து ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சியில் பங்கேற்கலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
– ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.