ரயில்வேயில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வசதி !
ரயிலில் பயணம் செய்ய மாற்றுத்திறனாளிகளுக்கு 75 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கட்டண சலுகையை பெற கடந்த காலத்தில் அரசு மருத்துவரிடம் பெற்ற மருத்துவ சான்றிதழை பயன்படுத்தி கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. அதன் பிறகு அடையாள அட்டை பயன்படுத்தும் முறை அமுலுக்கு வந்தது.
இந்த அடையாள அட்டையைப் பெற கோட்ட ரயில்வே அலுவலகங்களுக்கு சென்று உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்து வேண்டிய பரிசீலனைக்கு பிறகு அடையாள அட்டை பெற வேண்டும். இந்த நடைமுறைகளை எளிதாக்கவும், மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திலிருந்தே அடையாள அட்டை பெறவும் புதிய இணையதள வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது இந்திய ரயில்வே.
இந்த புதிய முறையில் அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் தேவையான சான்றிதழ்களை https://divyangjanid.indianrail.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். உரிய பரிசீலனைக்கு பிறகு அடையாள அட்டையும் இணையதளம் மூலமே வழங்கப்படும். இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி ரயில்வே பயண சீட்டு பதிவு அலுவலகங்கள் அல்லது இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக இணையதளம் வாயிலாகவும் பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அதேபோல அடையாள அட்டையை பயன்படுத்தி பயணச்சீட்டு பதிவு அலுவலகங்கள் அல்லது யூ டி எஸ் செயலி வாயிலாகவும் முன்பதிவில்லாத பயண சீட்டுகள் பதிவு செய்து கொள்ளலாம். இந்த புதிய முறையின் மூலம் பயனாளிகள் எளிதாக அணுகும் மற்றும் கால நேர விரயத்தை தவிர்க்கும் வாய்ப்புகளும் அமையும். மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டண சலுகை விதிமுறைகளும் இந்த இணையதளத்தில் உள்ளது.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.