GRI நிகர்நிலைப் பல்கலை மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதி மொழி !
திண்டுக்கல், காந்திகிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் தேசிய நாட்டு நலப்பணித் திட்டம், திண்டுக்கல் மாவட்ட காவல்துறையுடன் இணைந்து, “போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” என்ற பிரசாரத்தின் கீழ், 11 ஆகஸ்ட் 2026 அன்று காந்திகிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா அரங்கில் மாபெரும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தியது.
மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதுடன், போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கான கூட்டு உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு காந்திகிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் T. டேவிட் ஜெயராஜ் பிராங்க்ளின் வரவேற்புரை வழங்கினார். காந்திகிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியரும், துணைவேந்தர் அலுவலக OSD-யுமான பேராசிரியர் A. பாலகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் S. கருணாகரன், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதன் முக்கியத்துவத்தையும், ஆரோக்கியமான மற்றும் பொறுப்பான சமூகத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கையும் எடுத்துரைத்தார். காந்திகிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் B.Tech. பயிலும் செல்வி காவியா மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு, போதைப்பொருட்களிலிருந்து விலகி இருப்பதற்கும், “போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” என்ற இலக்கை அடைவதற்கு தங்களது பங்களிப்பை வழங்குவதற்கும் உறுதியளித்தனர். இந்த உறுதிமொழியை திண்டுக்கல் துணைக் காவல் கண்காணிப்பாளர் சங்கர் முன்னின்று நடத்தினார்.
மேலும், அம்பாத்துரை காவல் நிலைய ஆய்வாளர் B. சத்யா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் “போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” இணையதளம் மற்றும் செயலியின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கமளித்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக, காந்திகிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் T. அனந்த விஜயா நன்றியுரை வழங்கினார்.
— அங்குசம் செய்திப் பிரிவு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.