சாதிய, பாலியல் வன்மம் கொண்ட ஆசிரியர்களை ஆதரிக்காதீர் ! ஆசிரியர் இயக்கங்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு !
சாதிய, பாலியல் வன்மம் கொண்ட ஆசிரியர்களை ஆதரிக்காதீர் ! ஆசிரியர் இயக்கங்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ! திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவர் ஒருவர் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து, பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலருடனும் கலந்துரையாடல் நிகழ்த்தி, சாதிய உணர்வு மாணவர் பருவத்தில் உருவாவதைத் தடுத்திட வேண்டி பரிந்துரைகளுடன் ஒரு விரிவான மனுவை தமிழ்நாடு அரசிடம் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வழங்கியது.
அதைத் தொடர்ந்து மாணவர்கள் உருவாக்கிய பரிந்துரைகளை இணைத்து பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்புப் பாடம் இடம் பெறுதல் குறித்த பரிந்துரைகளும் தமிழ்நாடு அரசிடம் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வழங்கியது. அரசிற்கு வழங்கப்பட்ட மனுக்களுடன் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எழுதிய கட்டுரைகளை உள்ளடக்கி “சாதி ஒழிப்பு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில்” என்ற நூல் வெளியிடப்பட்டது.
இவை அனைத்திற்கும் பின்னர், திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து சாதிய வன்மத்துடன் பள்ளி மாணவர்களிடையில் மோதல் நிகழ்வதும், இதற்கு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் உடந்தையாக இருந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சிலர் மீது பாலியல் சீண்டல் குற்றச் சாட்டுக்களும் எழுந்துள்ளன.
மாணவர்களை நல்வழிப்படுத்த தவறியதும், அதற்கு சிறிதுகூட வருத்தம் தெரிவிக்கமல், எந்த மனமாற்றமும் இல்லாமல் மிகவும் ஆணவப் போக்கில் ஆசிரியர்கள் நடந்துக் கொள்வது மிகவும் கவலை தருகிறது.
அரசுப் பள்ளிகளை அழித்தொழிக்கும் முயற்சியில் பல்வேறு நபர்கள் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து கொண்டுள்ள சூழலில், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் இந்த போக்கு மிகவும் வேதனைக்குரியது. தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சங்கங்கள் இந்த விவகாரத்தில் தலையிடாமல் மௌனம் காப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் யாராக இருந்தாலும், தங்களின் தகாத செயலைக் கண்டித்தால் அவர்களை உடனே மாற்றப் போராடுவோம், எங்களை யாரும் எதுவும் கேட்க இயலாது என்ற ஆணவப் போக்கில் ஆசிரியர்கள் நடந்துக் கொள்வதை அனுமதிக்க இயலாது.
ஆசிரியர் சங்கங்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க தவறினால், பள்ளி வளாகத்தின் அமைதியை கெடுக்கும், மாணவர்கள் மத்தியில் சகோதரத்துவத்தை வளர்க்கத் தவறும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவாகலாம்.
ஆசிரியர்களின் அர்பணிப்பும், கடுமையான உழைப்புமே அரசுப் பள்ளிகளை சிறப்புடன் செயல்பட வைக்கிறது. ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திற்கும் அவப்பெயர் உண்டாவதை அனுமதிக்க இயலாது.
ஆசிரியர் சங்கங்கள் தங்களின் மௌனத்தை கலைத்து சாதிய, பாலியல் வன்மத்துடன் நடந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு அவர்களின் தவறுகளை உணர்த்தி நல்வழிப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தோழமையுடன் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு,
பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை.







