அப்ரூவராக மாறிய ஆய்வாளா் ! எதிர்ப்பு தொிவிக்கும் பென்னிக்ஸ் குடும்பத்தினர் !
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் – பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய பணிநீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் , தலைமை காவலர்கள் முருகன் , காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகிய 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் 2 கட்டங்களாக 2ஆயிரத்தி 427பக்கம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது
இந்த கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் சாட்சிய விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கில் பணிநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தரப்பில் தான் அப்ரூவராக மாற அனுமதி கோரி முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பணி நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் நேற்று முன்தினம் தாக்கல் செய்த மனுவில் : நான் அப்ரூவல் ஆக மாற விரும்புகிறேன். என்னை தவிர்த்து மற்ற காவலர்கள் செய்த அனைத்து செயல்களையும் உண்மைகளையும் நீதிமன்றத்தில் கூற விரும்புகிறேன். எனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தந்தையும் மகனையும் இழந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன்.
இந்த வழக்கில் அப்ரூவராக மாறி அரசு தரப்பு சாட்சியாக மாற விரும்புகிறேன் எனவும் தன்னை மன்னித்து , விடுதலை வழங்கும்பட்சத்தில் அப்ரூவராக மாறி நடந்த உண்மைகளை கூறவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். பணி நீக்கப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்த மனு குறித்து சிபிஐ பதிலளிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில்,
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகுவதற்காக மதுரை மத்திய சிறையில் இருந்து பணிநீக்கப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது ஸ்ரீதரின் அப்ரூவராக கோரிய மனு மீதான விசாரணையின் போது ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்ப உறுப்பினரான செல்வராணி தரப்பு மற்றும் சிபிஐ தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தந்தை மகன் கொலை வழக்கு மற்றும் ஸ்ரீதர் அப்ரூவராக கோரிய மனுக்கள் வரும் ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்