அங்குசம் பார்வையில் ”ஆரகன்” திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : ஹரிகரன் பஞ்சலிங்கம். இணைத் தயாரிப்பு : கிரிஷாந்தி ஹரிகரன், வரகுணம் பஞ்சலிங்கம், மதுரதன் பஞ்சலிங்கம். டைரக்டர் : அருண் கே.ஆர். நடிகர்-நடிகைகள் : மைக்கேல் தங்கதுரை, கவிப்ரியா மனோகரன், ஸ்ரீரஞ்சனி ராஜசேகர், கலைராணி, ப்ரீத்தம் சக்கரவர்த்தி,, கிருஷ்ணன், யாஸர், ஆதித்யா கோபி, கெளரி. ஒளிப்பதிவு : சூர்யா வைத்தி, இசை : விவேக்—ஜெஸ்வந்த், எடிட்டிங் : சசி தக்ஷா. பி.ஆர்.ஓ.: ஏ.ஜான்.
”சுமார் அறுநூறு—எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த வனப்பகுதியில் முனிவர் ஒருவரை இளந்திரையன் என்ற இளைஞன் பேராபத்திலிருந்து காப்பாற்றுகிறான்”. இந்த பின்னணிக் குரலுடனும் ஓவியக் காட்சிகளுடனும் டைட்டில் போட்டு முடிக்கிறார்கள். பரவாயில்லையே ஆனானப்பட்ட முனிவர் ஒருவரையே இளைஞன் ஒருவன் காப்பாற்றியிருக்கானே, படம் எதையோ சொல்லப் போகுது, அதையும் வித்தியாசமா சொல்லப் போகுதுன்னு நாமும் நம்பி படம் பார்க்க ஆரம்பித்தோம்.
டைட்டில் முடிஞ்சவுடனே இப்போதைய சென்னை மாநகரில் கதை ஆரம்பமாச்சு. மைக்கேல் தங்கதுரையும் கவிப்ரியா மனோகரனும் தீவிரமாக லவ் பண்றாக. இதுல கவிப்ரியாவுக்கு அம்மா—அப்பா கிடையாது. அதனால் ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி வேலை பார்த்தபடியே தங்கதுரையை லவ் பண்றார். மைக்கேல் தங்கதுரையும் அதே கேஸ் தான். பிஸ்னஸ் பண்றதுக்கு கையில நாலு லட்சம் சம்பாரிச்ச பிறகு கல்யாணம் பண்ணிக்கலாம் என்பது மைக்கேல் தங்கதுரையின் கண்டிஷன்.
இந்த நேரத்துல தான் மலைப்பகுதியில் ஒத்த வீடு ஒன்றில் ஒத்தையில் இருக்கும் ஸ்ரீரஞ்சனியைக் கவனித்துக் கொள்ளும் வேலை கிடைக்கிறது கவிப்ரியாவுக்கு. நல்ல சம்பளம் என்பதால் ஒத்துக் கொண்டு கிளம்புகிறார் கவிப்ரியா. வேண்டா வெறுப்பாக அனுப்பி வைக்கிறார் மைக்கேல் தங்கதுரை.
இதுவரைக்கும் தாங்க நமக்கு ஓரளவு புரிஞ்சது. அதுக்குப் பிறகு நடப்பதெல்லாம் கண்ணைக் கட்டி காட்டில்விட்டு கண்கட்டுவித்தை காட்றது மாதிரி இருந்துச்சு. காட்டுப் பகுதியில் ஒதுக்குப்புறமா ஒத்த வீடுன்னாலே அமானுஷ்யமும் பேயும் இல்லாமலா? இதுல அதுவும் இருக்கு. அதுக்கு மேல என்னவெல்லாமோ இருக்கு.
இம்புட்டுக்காணு பாழடைஞ்ச தகரக் கொட்டைகையில பைத்தியம் மாதிரி கலைராணியை காலில் சங்கிலி போட்டுக் கட்டி வைத்திருக்கிறார் மைக்கேல் தங்கதுரை. ஸ்ரீரஞ்சனி யார்? பெளர்ணமி ராத்திரியன்னைக்கு ஒரு சின்னச் சிலையை வச்சு, அதுல தனது உள்ளங்கை ரத்தத்தை ஊத்தி மைக்கேல் தங்கதுரை பூஜை செய்றாரு. அது ஏன்னா முன்னொரு காலத்துல முனிவரைக் காப்பாத்துன இளந்திரையன் தான் இவரு. காப்பாத்துனதுக்கு பிரதியுபகாரமா எப்போதுமே இளைஞனா இருக்க வரம் வாங்கிவிட்டார் என்கிறார் டைரக்டர் அருண்.
அடங்கப்பா… எப்படிப்பா இப்படியெல்லாம் உங்களால யோசிச்சு கதை எழுதி கதைவிட முடியுது?
ஹீரோயின் கவிப்ரியா முகத்தில் நல்ல களை இருக்கிறது, ஓரளவு நடிப்பும் வருகிறது. நல்ல கதைகளை செலக்ட் பண்ணி நடித்தால், தமிழ் சினிமாவில் சுமாராக தாக்குப் பிடிக்கலாம். இரட்டையர்களின் இசையும் சூர்யா வைத்தியின் ஒளிப்பதிவும் இந்தக் கதைக்குப் போதுமானது.
தமிழ் சினிமாவில் அறிவியல் தொழில்நுட்பம் அபாரமாக போய்க் கொண்டிருக்கும் போது ‘ஆரகன்’ மாதியான பிற்போக்குத்தனமான சினிமாக்கள் வருவது… ??
–மதுரை மாறன்