வசூலில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வரும் அரியமங்கலம் ஆர்எஸ்ஐ(RSI)
மலைக்கோட்டை மாநகர் கன்டோன்மென்ட் போக்குவரத்து பிரிவில் இருந்த ஆர்ஐ பதவி உயர்வில் டிஎஸ்பியாக அரியலூருக்கு மாற்றப்பட்டார். இதனால் கடந்த 3 மாதமாக அந்த இடம் காலியாக இருந்தது. ஆர்ஐ(RI) நியமிக்கப்படாததால் அரியமங்கலம் ஆர்எஸ்ஐ(RSI) வசூலில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தார். லோடு ஆட்டோக்கள், லாரிகள் மூலம் கிடைக்கும் மாத தொகையை எவ்வித பிரச்னையும் இன்றி லபக்கினார். இந்நிலையில் புதிதாக ஆர்ஐ நியமிக்கப்பட்டபின்பும் மாத வசூல் தொகையை ஆர்எஸ்ஐயே வைத்துக்கொண்டார். இதனால் ஆர்ஐ டிரைவர் பங்கு தொகை கிடைக்காமல் பரிதவித்து வந்தார்.
இந்நிலையில் ஆர்எஸ்ஐயின் ரைட்டரிடம் (பைக் ஓட்டுபவர்) எங்களின் பங்கு தொகையை ஏன் கொடுக்கவில்லை என ஆர்ஐ டிரைவர் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது போக்குவரத்து போலீசாரை முகம் சுளிக்க வைத்துள்ளது. தற்போதைய ஆர்ஐயின் டிரைவர் இதற்கு முன் ஶ்ரீரங்கம் இன்ஸ்பெக்டரின் டிரைவராக இருந்தார். அப்போது பெண் அமைச்சரின் உறவினர் ஒருவர் காவிரியில் 7 மாட்டு வண்டியில் மணல் அள்ளி சென்றதை இன்ஸ்பெக்டர் கண்டறிந்து பறிமுதல் செய்ததை அவருக்கு தெரியாமல் 5 வண்டிகளை இவர்தான் விடுவித்தாராம். இதில் அப்பாவியான இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தன்மீது எதற்கு நடவடிக்கை என்பது தெரியாமல் அவர் தவிக்கிறாராம். இந்நிலையில் தற்போது இந்த ஆர்ஐ சிக்கி இருப்பதாக சக போலீசார் சிலாகித்து வருகின்றனர்.