அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம்!
அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம்!
உணவுப் பழக்கங்கள் தொடங்கி, மாறிவரும் இயந்திரகதியான வாழ்க்கைச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இயல்பான குழந்தைப் பேறு என்பதே இன்று பலருக்கு சிக்கலாகிவருகிறது. திருமணமாகி ஆண்டுக்கணக்கில் குழந்தைப்பேறின்றி தவிக்கும் தம்பதியினரை குறிப்பாக பிள்ளைப் பெற்றுத்தராத பெண்களை சமூகம் கண்ணியக்குறைவாக அணுகும்போக்கு நிலவிவருகிறது. மலடி என்ற அவச்சொல்லோடு வாழ்நாள் முழுக்க அப்பெண்கள் எதிர்கொள்ளும் மனஅழுத்தங்கள் வார்த்தைகளில் விவரிக்கவியலாதது.
இருக்கும் சொத்துக்களை விற்றாவது, பிள்ளை பெற்றாக வேண்டுமென்று அவர்களை நெருக்கடிக்குள்ளாக்குகிறது. இந்த புறவயமான சூழல் தனியார் கருத்தரிப்பு மையங்களை நோக்கித் தள்ளுகிறது. கருத்தரிப்பு மையம் தொடங்கி, வாடகைத்தாய் நடைமுறை வரையில் சேவை மனப்பான்மையைத் தாண்டி இலாபமீட்டும் தொழிலாகவே மாறிவிட்டது என்பதே நிசர்தனமான உண்மை.
வசதிபடைத்தவர்கள் சில இலட்சங்களைக் கொட்டி, பிள்ளைப்பேறை பெற்றுவிட முடியும். சாமானியர்களின் நிலை பரிதாபகரமானதுதான். காதலித்து திருமணம் செய்திருந்தாலும்கூட, பெற்றோர்களின் நெருக்கடி காரணமாக கட்டிய மனைவியை கைவிடும் கணவன்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இத்தகைய சூழல்களை கருத்தில் கொண்டு, தனியார் செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு கட்டண வரையறை நிர்ணியக்க வேண்டும் என்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையங்களை அமைத்திட வேண்டுமென்றும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையின் சார்பில் யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.