அங்குசம் பார்வையில் ‘ஆர்யமாலா’ விமர்சனம், வில்லங்கம் விவகாரம்!
தயாரிப்பு : ‘ஜனா ஜாய்’ மூவிஸ்’ வடலூர் ஜே.சுதா ராமலட்சுமி, ஜேம்ஸ் யுவன். ரிலீஸ் : ஆக்ஷன் –ரியாக்ஷன் ஜெனிஷ். டைரக்ஷன் : ஜனா ஜாய் மூவிஸ் & டீம். நடிகர்—நடிகைகள் : ஆர்.எஸ்.கார்த்திக். மனிஷாஜித், எலிசபெத், சிவசங்கர், மாரிமுத்து, தவசி, மணிமேகலை, ஜாபர், வேல்முருகன். திரைக்கதை-வசனம்—இணை இயக்கம் : ஆர்.எஸ்.விஜயபாலா. ஒளிப்பதிவு : ஜெய்சங்கர் ராமலிங்கம், இசை : செல்வ நம்பி, எடிட்டிங் : ஹரிகரண். பி.ஆர்.ஓ. : கே.எஸ்.கே.செல்வகுமார்.
படத்தின் விமர்சனத்தை எழுதுவதற்கு முன்னால், படத்தயாரிப்பின் போது நடந்த விவகாரத்தையும் வில்லங்கத்தையும் எழுதுனாத்தான் நல்லாருக்கும். பொதுவாக தமிழ் சினிமா உலகில் சில கோடிகள் பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களுக்கு, பட ரிலீசுக்கு ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு முன்பு பல லட்சங்கள் செலவழித்து டீசர் ரிலீஸ், ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ், போஸ்டர் ரிலீஸ், டிரைலர் ரிலீஸ் என புரமோஷன் பண்ணுவார்கள் தயாரிப்பாளர்கள். அதன் பின் பிரஸ் ஷோ போடுவார்கள்.
ஆனால் ரொம்ப ரொம்ப கம்மியான பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களுக்கு படங்களின் பிரஸ் ஷோ அன்றே டிரைலர் ரிலீசும் நடக்கும், பிரஸ் மீட்டும் நடக்கும். இந்த வகையில் கடந்த 14—ஆம் தேதி திங்கள் கிழமை பிரஸ்மீட்டும் பிரஸ் ஷோவும் ஒரே நேரத்தில் நடந்த படம் தான் ‘ஆர்யமாலா’.
பிரஸ்மீட்டைத் துவக்கி வைத்துப் பேசிய படத்தின் ஹீரோ ஆர்.எஸ்.கார்த்திக், “ காத்தவராயன் தெருக்கூத்துக் கலையை ரத்தமும் சதையுமாக இந்தப் படத்தில் பதிவு செஞ்சிருக்கோம். ஆனால் இந்தப் படத்தயாரிப்புக்குப் பின்னால் நடந்த ரத்தக் களறி சம்பவத்தை தயாரிப்பாளர் விளக்கமாக விளக்குவார்” என்றார்.
அதன் பின் மைக் பிடித்த தயாரிப்பாளர் ஜேம்ஸ் யுவன், “என்னோட சில சொத்துக்களை வித்தும் கடன் வாங்கியும் இந்தப் படத்தை ஆரம்பித்தேன். டைரக்டர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தேன் எனச் சொல்லிக் கொண்டு ஒருவர் வந்தார். அதை நம்பி அவரை இயக்குனராகப் போட்டேன். படம் ஆரம்பிச்சு கொஞ்ச நாள்லேயே டைரக்டரின் லட்சணம் தெரிஞ்சு போச்சு. ஆக்ஷன், கட் கூட சொல்லத் தெரியல அவருக்கு. சரின்னு சகிச்சுக்கிட்டேன், ஏன்னா பணத்தைப் போட்டுத் தொலைச்சுட்டோமே. முக்கால்வாசிப் படம் முடிஞ்ச நிலையில சில லட்சங்களை சுருட்டிட்டு திடீர்னு எஸ்கேப்பாகிட்டான் அந்த டைரக்டர்.
என்னோட நிலைமை எப்படி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. அப்புறம் என்னோட மனைவி நகைகளை விற்றுக் கொடுத்தார். அதுக்கப்புறம் இணை இயக்குனர வச்சு படத்தைமுடிச்சோம். இதுக்காக என் மனைவி காலில் விழுந்தாலும் தப்பேயில்லை. [ ஜேம்ஸ் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போது தேம்பித் தேம்பி அழுதார் ஜேம்ஸின் மனைவியான சுதா ராஜலட்சுமி ] மூணு வருசம் பெரும்பாடுபட்டு இப்ப படத்தை ரிலீஸ் பண்ணிருக்கோம்.
என்னை ஏமாற்றியது மட்டுமல்ல, திருடிட்டுப் போன பணத்தைக் கேட்டா.. ஆள் வச்சு மிரட்டுறான் அந்த டைரக்டர். இப்படிப்பட்டவன் பேரை படத்தின் டைட்டிலில் போட முடியுமா? ‘எ ஃபிலிம் பை’ ஜனா ஜாய் மூவிஸ் & டீம்னு போட்ருக்கோம்” என கோபத்தையும் குமுறலையும் கொட்டித் தீர்த்தார் ஜேம்ஸ் யுவன்.
இப்ப விமர்சனத்திற்கு வருவோம். படத்தின் ஹீரோ கார்த்திக் சொன்னது போல காத்தவராயன் தெருக்கூத்துக் கலையை ரத்தமும் சதையுமாகவெல்லாம் படத்தில் பதிவு செய்யவேயில்லை. இன்னும் சொல்லப் போனால் காத்தவராயன் –ஆர்யமாலா கதையை போற போக்குல மூன்று சீன்களில் தான் சொல்லியிருக்கிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால் ஒரு பெண் பருவ வயது கடந்தும் பூப்பெய்தாத நிலையைத் தான் படத்தின் க்ளைமாக்ஸ் வரை நீட்டி முழக்கி, க்ளைமாக்சில் ஹீரோவையும் ஹீரோயினையும் சோலி முடித்து படத்தையும் முடித்திருக்கிறார்கள்.
பருவம் கடந்த பெண்ணாக மனிஷாஜித். காத்தவராயனாக ஆர்.எஸ்.கார்த்திக், மனிஷாவின் அம்மாவாக எலிசபெத், கூத்து வாத்தியாராக டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் [ இவர் இறந்து மூன்று வருசமாச்சு ] மனிஷாவின் தாய்மாமாவாக மாரிமுத்து [ இவரும் செத்து ஒன்றரை வருசமாச்சு ] இன்னொரு மாமனாக தயாரிப்பாளர் ஜேம்ஸ் யுவன் இவர்களெல்லாம் படத்தில் இருக்கிறார்கள். ஒரு காட்சி… ஒரே ஒரு காட்சியாவது மனசுல ஒட்டணுமே…ம்ஹும் அதுக்கு சான்ஸே இல்லை.
ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் தான் கொஞ்சம் சிரமப்பட்டு படம் நகர உதவியிருக்கிறார்கள்.
–மதுரை மாறன்.