மனிதாபிமான செயலுக்கு மதச்சாயம் பூசி வழக்கு போடுவீர்களா ? – அமைச்சர் கீதாஜீவனை சாடும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ !
“அமைச்சர் கீதாஜீவன் மதத்தையும், சாதியையும் வைத்துதான் அரசியல் செய்வாரா? : நாங்கள் என்ன அவ்வளவு சிறுபிள்ளைத்தனமாகவா நடப்போம்… மனிதாபிமானத்தோடு செயல்பட்டதற்கு எங்கள் மீது வழக்கு பதிவா?” என்பதாக விளாத்திகுளத்தில், நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆவேசமாக கேள்வி எழுப்பியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில், கழக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில், அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு எதிர்கட்சித் துணைப் பொதுச்செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் மற்றும் முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கட்சியினரிடைய சிறப்புரையாற்றினார். இதில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், என்.கே.பெருமாள் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசுகையில், “இன்று நானும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் திருச்செந்தூரிலிருந்து வந்து கொண்டிருந்த போது தங்களது காருக்கு முன்னால் சென்ற காரை ஓட்ட தெரியாமல் தாறுமாறாக ஒரு நபர் ஒட்டி சென்றதாகவும்; சிறிது தூரத்தில் நான்கு வழிச்சாலையில் அந்த காருக்கு முன்னால் வழிமறித்து ஒரு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அந்தக் காரை ஓட்டி வந்து நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதால் … நானும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் அங்கு சென்று கேட்டதற்கு … இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் தங்களை இந்த கார் மோதும்படி வந்ததாக கூறியுள்ளனர்.
இதையடுத்து அந்த பைக்கில் வந்த நபர்களையும், இந்த கார் ஓட்டியவரையும் இது போன்று நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் என்று பேசி சமாதானம் செய்து சரியாக காரை ஓட்டி நல்லபடியாக போய் சேருங்கள் என அனுப்பிவைத்தோம்” என்றும், “இந்த நபர் கிறிஸ்டியன், பாதிரியார் என்பதெல்லாம் ஒன்றும் தெரியாது.
ஒரு சம்பவம் நடக்கிறது அதை வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு போனால், என்ன மனிதாபிமானம் இருக்கும்? ஒரு பொறுப்புள்ளவங்க, அதிலும் நாங்கள் அமைச்சராக இருந்திருக்கிறோம். தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறோம். வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை பேசி அனுப்பி வைத்தோம். இதை செய்ததில் என்ன தப்பு இருக்கிறது?” என்று விளக்கம் அளித்துப் பேசினார்.
அதுமட்டுமின்றி, இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட அமைச்சரான தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவனின் பேட்டிக்கு பதிலாக… “உங்களுக்கு அரசியல் செய்வதற்கு வேறு பிரச்சினை இல்லையா… மதத்தையும், சாதியையும் வைத்தா அரசியல் பன்றது? என்ன நடந்தது என்று விசாரிக்காமலேயே இதுபோன்று பேசுவதா?” என்று ஆவேசமடைந்தார்.
— மணிபாரதி.