தண்ணீா் வரவில்லை – அழுக்குத் துணி மூட்டையுடன் ஆணையரை அதிர வைத்த ஆசாமி !
”ஏழு மாசமா எங்க ஏரியாவுல ஒழுங்கா தண்ணீர் வரலைன்னா என்னதான் ஆபிசர்ஸ் செய்யிறது? அழுக்குத் துணி மூட்டையுடன் ஆணையரை அதிர வைத்த ஆசாமி !
பை நிறைய அழுக்குத் துணிகளுடனும் காலி பக்கெட்டுடனும் நகராட்சி அலுவலகத்தை அப்பகுதியை சேர்ந்த இருவர் அதிர வைத்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள துவாக்குடி நகராட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த இருவர், கையோடு கொண்டு வந்திருந்த அழுக்குத்துணிகளை நகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர்க்குழாயை பயன்படுத்தி துணி துவைத்துக் கொள்வதற்காக நகராட்சி ஆணையரின் அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையோடு வந்ததுதான் பரபரப்புக்கு காரணம்.
அழுக்குத்துணி மூட்டையோடு வந்திருந்த செ.கார்க்கியிடம் பேசினோம். “துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட துவாக்குடி மலை (தெற்கு) பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளாக வசித்து வருகிறேன். நானும் என் மனைவி இருவருமே அன்றாட கூலி வேலைக்கு சென்று வருகிறோம். எங்களுக்கு தெரிந்து கடந்த பத்தாண்டுகளாகவே, எங்கள் பகுதிக்கு ஒருநாள்விட்டு ஒரு நாள் என்ற வீதம் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே குடிநீர் வழங்கி வருகிறார்கள். அதுவும் இந்த ஆண்டில் மட்டும் கடந்த ஆறு, ஏழு மாதங்களில் வாரத்திற்கு இரண்டு நாள் மட்டுமே குடிநீர் வழங்கி வருகிறார்கள்.
நாங்கள் ஒவ்வொருமுறையும், முறையாக குடிநீர் வழங்காததை சுட்டிக்காட்டி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளிடம், நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கிறோம். நாங்கள் புகார் தெரிவிக்கும் ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லியே, தட்டிக் கழித்து வந்திருக்கிறார்கள்.
உதாரணமாக, குடிநீர் இணைப்பிற்காக நீரேற்றும் மோட்டாரில் பழுது ஏற்பட்டுவிட்டது; குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு விட்டது; மின்சாரம் இல்லாததால் மேல் தேக்க தொட்டியில் நீர் ஏற்ற முடியாமல் போய்விட்டது; புதியதாக குடிநீர் குழாய் இணைப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் குடிநீர் வழங்க முடியவில்லை என்பதாக, ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு காரணத்தை சொல்வார்கள்.
நாங்களும் அது சரி, எங்களுக்கு மாற்று ஏற்பாடாக லாரியில் கொண்டு வந்தாவது தண்ணீர் சப்ளை செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். அதற்கும், “துவாக்குடி நகராட்சியில் 21 வார்டு இருக்கிறது. எங்களிடம் ஒரே ஒரு தண்ணீர் லாரிதான் இருக்கிறது. இதை வைத்துக் கொண்டு எப்படி எங்களால் தண்ணீர் விநியோகம் செய்ய முடியும்?” என்று எங்களிடமே கேள்வி கேட்பார்கள். அதிலும் குறிப்பாக, துவாக்குடி மலை (தெற்கு) மற்றும் சி.ஆர்.எஸ். கிரஷர் பகுதியில் வசிக்கும் மக்கள்தான் அதிகம் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதுவும், இந்த பகுதியை ஒட்டி அமைந்துள்ள பெல் வளாகத்தில் உள்ள குடிநீர் குழாயில் அவசரத்தேவைக்கு தண்ணீர் பிடித்து வருவதால், ஓரளவு பிரச்சினையை சமாளித்து வருகின்றனர். அதிலும், எங்களைப் போல கணவன் – மனைவி இருவருமே வேலைக்கு போகிறவர்களாக இருந்துவிட்டால், தண்ணீர் வரும் நேரம் பார்த்து தண்ணீரை பிடித்து வைக்கவும் முடியாமல் போய்விடும்.
அதிகாரிகளுக்கு மனுவாக எழுதி பல முறை மனு கொடுத்துவிட்டோம். நேரில் சந்தித்தும் எங்களது நிலைமையை வாய்மொழியாக எடுத்து சொல்லிவிட்டோம். அதிகாரிகள் தொடங்கி அரசியல்வாதிகள் வரையில் அனைவரிடத்திலும் இந்த பிரச்சினையை கொண்டு சென்றிருக்கிறோம். ஆனாலும், இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.
இந்த நிலையில்தான், அதிகாரிகளுக்கு புரியும்படியாக, “ஐயா, குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால், குடிப்பதற்கும் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கும் நாங்கள் எங்கேதான் செல்வது? அதுதான் நகராட்சி அலுவலகத்தில் இருக்கும் குழாயில் எந்நேரமும் தண்ணீர் வருகிறதே. அதனை பயன்படுத்தி நாங்கள் எங்கள் துணிமணிகளை துவைத்துக் கொள்வதற்கு அனுமதி அளியுங்கள் என்ற கோரிக்கையுடன் வந்திருக்கிறோம்.” என்கிறார், செ.கார்க்கி.
இந்நிலையில், “நகராட்சி தரப்பிலிருந்து தொடர்புகொண்ட அதிகாரிகள் எப்போது தண்ணீர் லாரியை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டார்கள். எங்கள் பகுதியில் பெரும்பாலும் கூலி வேலைக்கு செல்பவர்கள் வசிப்பதால் மாலை 5 மணிக்கு மேல் வருமாறு தெரிவித்திருக்கிறோம். நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையருக்கு பகுதி மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்கிறார், செ.கார்க்கி.
— கலைமதி. படங்கள்: DK