சுத்தம் சோறு போடும், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு உங்களை அழகாக்கும்! – தொடா் 3
முந்தைய தொடரை படிக்க https://angusam.com/hospitality-practitioner-we-are-human-too/
நாம் வேலை செய்து சம்பாதித்து சாப்பிடுவோம். ஆனால், சாப்பாடு போட்டு சம்பாதிக்கும் தொழில் உணவுத்தொழில். இந்த தொழில் முதல் மூலதனம் சுத்தம்தான். ஹோட்டல் என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ்ப் பதம் விடுதி என்று கடந்த தொடரில் குறிப்பிட்டு இருந்தோம்.
நாங்கள் விடுதி மேலாண்மை மற்றும் உணவாக்க தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் எங்களுக்கு சொல்லித் தந்தது சுயசுத்தம் தான். ஒரு தனி மனிதன் எந்த அளவுக்கு சுத்தமாக இருக்கவேண்டும்? அதனை எவ்வாறு ஒழுங்காக கடைபிடிக்க வேண்டும்? என்று எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள்.
”தலைமுடி குறைவாக இருக்க வேண்டும். தினசரி முகமளிப்பு (Shaving) செய்ய வேண்டும். நகம் வெட்டி இருக்க வேண்டும். சுத்தமான கசங்காத ஆடை அணிய வேண்டும். பளபளவென கசங்காத ஆடை அணிந்திருக்க வேண்டும்.” என எங்கள் சுய சுத்தத்தின் பட்டியல் மிக நீளமானது.
இப்படி நாங்கள் கற்றுக் கொண்ட சுயசுத்தம் தான் எங்களை எல்லா இடத்திலும் அழகாக வெளிக்காட்ட உதவுகிறது. இந்த ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு ஒரு மனிதனை அழகுபடுத்தவும் அழகாக வெளிக்காட் டவும் உதவுகிறது. நம்மைநம்பி நம்மிடம் வந்து தங்குவதற்கும் உணவு உண்பதற்கும் வரும் மனிதர்களுக்கு நாம் எவ்வளவு அழகாக நம்மை வெளிக்காட்டி நான் உணவையும் உபசரிப்பையும் கொடுக்க வேண்டும் என்பதற்கான ஒரு அடிப்படை துவக்கமாக சுயசுத்தம் இருக்கிறது.படிப்பின் ஆரம்பத்தில் இது கொஞ்சம் பயமாகவும் கடினமாகவும்தான் இருந்தது. ஆனால், இரண்டாமாண்டு படிக்கும்போது எங்களுக்கு அடுத்து வந்த தம்பி தங்கைகளுக்கு நாங்களே இந்த சுய சுத்தத்தை சொல்லிக் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டோம்.
காரணம், இப்பொழுது எங்களுக்கு சுத்தத்தின் முக்கியத்துவம் புரிந்துவிட்டது. இதன் தொடர்ச்சியாக, இடத்த சுத்தம் செய்வது, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் என சுத்தம் பற்றிய புரிதலில் துவங்கிய படிப்பு ஒரு தனிமனித ஒழுக்கத்தை பிரமாண்டமாக கட்டமைத்துத் தந்தது.
அதனைத் தொடர்ந்து, மரியாதை, பணிவு, நற்சொற்கள் போன்றவற்றின் மூலம் விருந்தோம்பலை எப்படி சேவையாக, சிறப்பாக செய்ய வேண்டும் என்பதை எங்கள் ஆசிரியர்கள் எங்களுக்கு கற்றுத் தந்து வாழ்வியலின் அவசியத்திற்கு தேவையான எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் இந்த படிப்புக்கு எப்பொழுதுமே மவுசு அதிகம்தான்.
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகமாக பயணம் செய்கிறார்கள். ஹோட்டல்களுக்கு சாப்பிட அதிகமாக செல்கிறார்கள். அதனால் எங்கள் படிப்புக்கு வேலை வாய்ப்பும் தொழில் வாய்ப்பும் கொட்டிக் கிடக்கிறது. எத்தனை ஹோட்டல்துறை கல்லூரிகள் இருந்தபோதும், இன்றைய சூழலில் வேலைக்கு ஆள் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது.
நான் பயிற்சிக்கு செல்லும் அனைத்து இடங்களிலும் வேலைக்கு ஆள் இருந்தால் சொல்லுங்கள் என்றுதான் கேட்கிறார்கள். அந்த அளவுக்கு ஹோட்டல் துறையில் வேலை வாய்ப்பு கொட்டிக்கிடக்கிறது. இந்த படிப்பு பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கி இருக்கிறது. பலவகையான தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை அள்ளித் தருகிறது. அத்தனைக்கும் ஆதாரம் சுத்தம்தான். சுத்தம் சோறு போடும் என்பார்கள்.
சாம்பார் யார் ஊத்துவா? பொரியல், கூட்டு, சிக்கன், மட்டன்லாம் யாரு போடுவான்னு? யாராவது கிண்டல் பண்ணலாம் கேக்கலாம். ஆனால், அதற்குத்தான் மற்ற தகுதிகள், சுகாதாரம், மரியாதை, பணிவு, அன்பு, மற்றும் சேவை மனப்பான்மை என்பதெல்லாம். இப்படி ஒவ்வொன்றும் நமது வாழ்க்கையில் சோறு போடுவது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த சுவையையும் சேர்த்துக் கொண்டு போகும்.
இவை அத்தனையும் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த ஒரு படிப்பு ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஆகும். சும்மா கை கழுவினால், சுத்தம் சோப்பு போட்டு கை கழுவுதல் சுகாதாரம் என்று எங்கள் பயிற்சியில் நாங்கள் அடிக்கடி சொல்லிக் கொடுப்போம். சென்றதொடரில் சொன்னது போல், உலகிலேயே, அடுத்தவர்கள் மகிழ்வாக இருக்க வேண்டும் என்று எண்ணும் ஒரு உயிர், அம்மாவிற்கு பிறகு, ஹோட்டல் துறையில் வேலைசெய்யும் உயிர்தான்.
அதனால் இந்த தொழிலை நாங்கள் அகமகிழ்வோடு செய்கிறோம். ஹோட்டல் மேனேஜ்மென்ட் – கேட்டரிங் டெக்னாலஜி படிப்பின் சுவாரஸ்யங்கள், நிகழ்வுகள், பல உண்மைத்தகவல்கள், சில சவால்கள் ஆகியவற்றுடன், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்வாய்ப்புகள் பற்றி இனி வரும் தொடர்களில் தொடர்ந்து பார்ப்போம் •
— கபிலன்.