வேறு எந்த மாநிலத்திலும் நினைத்துப் பார்க்க முடியுமாவெனத் தெரியவில்லை. ! அந்த நிமிடம் என் கண்கள் கலங்கின. அழுகையைத் தடுக்க முடியவில்லை.
வேறு எந்த மாநிலத்திலும் நினைத்துப் பார்க்க முடியுமாவெனத் தெரியவில்லை. ! அந்த நிமிடம் என் கண்கள் கலங்கின. அழுகையைத் தடுக்க முடியவில்லை.
வண்டலூரில் இறங்கி பேருந்து மாற வேண்டியவன் அவ்வாறு செய்யாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்று இந்தப் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு வர என்ன காரணம்? காலையில் கிளாம்பாக்கத்திலிருந்து மாநகரப் பேருந்தில் மதுரவாயல் சென்ற போது ஒரு சம்பவம் நடந்தது.
தன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் பயணி ஏதோ சுகவீனமுற்றிருக்கிறார் என்று இளம் பெண் ஒருவர் உரக்கக் குரல் எழுப்ப, அதற்குள் அவர் அருகில் அமர்ந்திருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க ஆண் பயணி, அப்படியே முன்னால் சரிந்து விழ,அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. மோதிய வேகத்தில் அவர் வாயில் அடிபட்டு இரத்தம் கொட்டியது.
“பஸ்ஸை நிறுத்துங்க” என்று சிலர் கத்த, “இரும்பு ஏதாவது இருந்தால் கொடுங்க” என்று யாரோ சொல்ல “இரும்புச் சாவியெல்லாம் கொடுக்காதீங்க” என்று சத்தமிட்டுக் கொண்டே இளைய பெண் ஒருவர் முன்னால் வந்து நோயாளியைப் பரிசோதிக்க ஆரம்பித்தார். மடங்கிக் கிடக்கும் அவரைத் தூக்கிப் படுக்க வைக்க உதவுமாறு சக பயணிகள் உதவியைக் கோரினார். நோயாளி பருமனானவராக இருந்ததால் நான்கு பேர் சேர்ந்து அவரைத் தூக்கி இருக்கையில் அமர வைத்தோம். அந்தப் பெண் “பஸ் ஜன்னலைத் திறந்து காற்று வர வையுங்கள்” என்று எங்களிடம் சொன்னதுடன் . “பஸ்ஸை நிறுத்தாமல் ஓட்டிச் செல்லுங்கள்” என்று ஓட்டுனருக்கும், “போரூர் டோல்கேட் 108 ஆம்புலன்சை அலர்ட் பண்ணுங்க ” என்று நடத்துனருக்கும் அறிவுறுத்தினார்.
இதற்குள் அந்தப் பெண்ணுக்கு உதவ மற்றோர் இளைஞர் வந்து விட்டார். அவரும் மருத்துவராக இருக்கலாம். வந்தவுடன் முதலுதவியைத் தொடங்கினார். நோயாளியைத் தன் உடலோடு சாய்த்துக் கொண்டு முதுகில் ஓங்கித் தட்ட ஆரம்பித்தார். சுகவீனமுற்ற பயணியின் சொருகிய கண்கள் இயல்புக்குத் திரும்புகையில் அந்தப் பெண் அவரிடம் விடாமல் உரத்த குரலில் பேசிக் கொண்டே அவருடைய கன்னத்தைத் தட்டித் தட்டி நினைவுக்குக் கொண்டு வந்தார். “நான் பேசுறது புரியுதா?” “நீங்க எங்கே இருக்கீங்கன்னு தெரியுதா?” இது மாதிரி கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தார். இதற்குள் டோல் கேட் நெருங்கி விட, நடத்துனர் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் அலைபேசியில் பேசிக் கொண்டே பேருந்தை விட்டு இறங்கி முன்னால் ஓடித் தடுப்புகளை அகற்ற வைக்கிறார்.
ஆம்புலன்ஸ் உதவியாளர் ஓடிவந்து பயணியின் நாடித்துடிப்பைப் பரிசோதிக்கிறார். பேருந்து நடத்துனர் பயணியின் மொபைல் ஃபோனைக் கேட்டுப் பெற்று, பயணி கடைசியாக பேசிய எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் சொல்கிறார். மறுமுனையில் இருந்து பேசியவர் தன்னிடம் இவர் முன்பு பணி புரிந்து பின்னர் விலகியதாகவும் மீண்டும் வேலை கேட்டு வருவதாகச் சற்று முன் ஃபோன் செய்திருந்ததாகவும் சொல்கிறார். எனினும் தான் கோயம்பேடு வந்து அவரை அழைத்துச் செல்வதாகக் கூறுகிறார். அதற்குள் ஆம்புலன்ஸ் உதவியாளர்கள் தொடர்பு கொண்டவரிடம் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து விடுங்கள் என்று சொல்லி விட்டுப் பயணியை ஆம்புலன்சுக்கு அழைத்துச் சென்றார்கள்.
“வழக்கமான மாத்திரைகளைச் சாப்பிடாமல் இருந்திருப்பீர்கள். வேறொன்றும் இருக்காது. உங்கள் பல் உடைந்து உதடு கடிபட்டதால் வந்த இரத்தமாகத் தான் இருக்கும். பயப்படாதீர்கள்” என்று அந்தப் பெண் தைரியம் சொல்லி வழிஅனுப்பினார்.
என்னை பூமர் என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள். அந்த நிமிடம் என் கண்கள் கலங்கின. அழுகையைத் தடுக்க முடியவில்லை. என் சக மனிதர்கள் ஒவ்வொருவரைக் குறித்தும் பெருமிதமாக உணர்ந்தேன்.
எவ்வளவு சிறப்பான, மனிதநேயம் நிறைந்த கட்டமைப்பு கொண்டது என் மாநிலம் என்று பெருமிதமாக இருந்தது. மாநகரப் பேருந்தொன்றில் இரு மருத்துவர்கள் பயணம் செய்து கொண்டிருப்பதை வேறு எந்த மாநிலத்திலும் நினைத்துப் பார்க்க முடியுமாவெனத் தெரியவில்லை. அந்தப் பேருந்து நடத்துனர் முகத்தையும் அவர் பதட்டத்துடன் இறங்கி ஓடி வழியேற்படுத்தியதையும் நான் மறக்கவே மாட்டேன்.
மதியம் திரும்பி வரும்போது தான் கிளாம்பாக்கம் வந்து இந்தப் புகைப்படத்தை எடுத்துக் கொண்டேன்.
– முத்துக்குமார் சங்கரன்