அதியன் பதில்கள் ! பகுதி – 1
ஆளுநராகத் தமிழிசையின் செயல்பாடுகள் எப்படி உள்ளன?
பதில் : தமிழிசை தெலுங்கனா ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர்க் கூடுதல் பொறுப்பில் புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். தெலுங்கனா செல்வதில்லை. புதுச்சேரியிலும் இருப்பதில்லை. தமிழ்நாட்டில் வலம் வந்து அரசியல் சார்ந்த கருத்துகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவ்வளவு தான்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவது தேவையா?
பதில் : திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி உரிமைத்தொகையை வழங்கி வருகிறது. கர்நாடகாவில், ஆந்திராவில், மத்தியப்பிரதேசத்தில், இராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவுள்ளது. இது உதவித்தொகை அல்ல.
தாங்கள் படித்தவுடன் இதை அறியாமல் இருந்தோமே என்று வியந்த செய்தி ஏதேனும் உள்ளதா?
பதில் :வலம்புரி ஜான் ‘தாய்’ இதழின் ஆசிரியராக இருந்தபோது, ‘ஆசிரியர் தொகுதி’ என்று கடைசி பக்கப் பத்தி எழுதுவார். அதில், உலகில் ஆதாரங்களுடன் சொற்பொழிவு நிகழ்த்தும் 10 பேரில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் பெயர் 3ஆம் இடம் பெற்றிருந்தது என்பதுதான் நான் வியந்த அந்தச் செய்தி.
அரசியல் களத்தில் விசிக தலைவர் திருமாவின் வளர்ச்சி எப்படியுள்ளது?
பதில் :நன்றாகவே உள்ளது. சாதிய வட்டத்திலிருந்து விலகி, அனைத்து சமூக மக்களுக்குமான தலைவராக வளர்ந்து வருகிறார். குழப்பம் இல்லாத அவரின் தெளிவான உரைவீச்சே அவருக்குப் பலம்.
அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலை உணவுத் திட்டத்தின் முன்னோடியாக யாராவது செயல்பட்டுள்ளார்களா?
பதில் :திருச்சி பாரதமிகுமின் நிறுவனத்தில் உள்ள சாரதா நடுநிலை (உதவிபெறும்) பள்ளியின் செயலாளராக இருந்த மணி அவர்களின் வழிகாட்டலில், மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டத்தை 2009ஆம் ஆண்டு செயல்படுத்தியவர் அப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பா.சுமதி அவர்களுக்கே இப்பெருமை சேரும்.
மகேந்திரன் இயக்கத்தில் கமல், ரஜினி போன்ற உச்ச நட்சத்திரங்கள் நடிக்க மறுத்த திரைப்படம் எது? ஏன்?
பதில் :உதிரிப்பூக்கள் வெற்றியைத் தொடர்ந்து, மகேந்திரன் இயக்கிய பூட்டாத பூட்டுகள் படத்தில்தான் உச்ச நட்சத்திரங்கள் நடிக்க மறுத்தார்கள். காரணம், ஆணாதிக்கத்தை மகேந்திரன் சுக்குநூறாக உடைத்திருப்பார். தமிழின் தரமான தோல்வி படம்.
உலகம் முழுவதும் போற்றும் வசீகரமான தலைவர் யார்?
பதில் : அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்து, சுட்டு கொல்லப்பட்ட ஜான் எப். கென்னடி தான் உலகம் இன்றும் போற்றி கொண்டிருக்கும் வசீகரமான தலைவர்.
முதன்முதலாக கடல் பயணம் மேற்கொள்ளப்படும்போது ‘கடல் நோய்’ ஏற்படும் என்கிறார்களே, அது என்ன?
பதில் :முதல்முறை கடலில் கப்பல் பயணம் மேற்கொள்ளும்போது, கடல் காற்றின் ஒவ்வாமை, கப்பல் இடம், வலம், மேல், கீழ்க் குலுங்கிச் செல்லும்போது, வயிற்றில் குமட்டல் ஏற்படும். வாந்தி வரும். இதுவே கடல் நோய் ஆகும். இதற்கு உரிய மாத்திரைகள் சாப்பிட்டால் நோய் நீங்கிவிடும்.
படித்து இன்றும் நினைவில் இருக்கும் புத்தகம் எது?
பதில் :தோழர் தியாகு ஜூனியர் விகடன் இதழில் தொடராகச் சிறை கைதிகளின் வாழ்வியல் குறித்து எழுதிய, “சுவருக்குள் சித்திரங்கள், கம்பிக் குள் வெளிச்சங்கள்” என்னும் இரு நூல்கள் இன்றும் என் நினைவில் இருக்கின்றன.
கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் காவிரி நீர் கொடுக்க மறுக்கின்றார்களே? இதற்குத் தீர்வே இல்லையா?
பதில் : உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே தீர்வாக உள்ளது. இந்தத் தீர்ப்பும் நிறைவேற்றப்படாமல் இருக்கும்போது இந்தியா ஒரே நாடு என்ற சாயம் காவிரி நீரில் அடித்துச் செல்லப்படும்.
மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வரும் வாய்ப்பு உள்ளதா?
பதில் :2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக 272 இடங்களைப் பெற்றால் மோடி மீண்டும் ஒன்றியத் தலைமை அமைச்சராக வரும் வாய்ப்பு உள்ளது.
அரசியல் சாசனப்படி உள்ள மக்களவை துணை சபாநாயகர் பதவி இன்னும் ஏன் நிரப்பப்படாமலே உள்ளது?
பதில் : இது குறித்துப் பலமுறை ராகுல்காந்தி மக்களவையில் வினா எழுப்பியபோது, அவர் ஒன்றும் அறியாத ‘பப்பு’ (சின்னப் பையன்) என்று பாஜகவால் கேலி செய்யப்பட்டார். துணை சபாநாயகர் நியமனத்தால் ஏற்படும் செலவைச் சிக்கனம் செய்ய மோடி முடிவு செய்திருக்கலாம்.
அரசு ஊழியர்களைக் கையில் வைத்துக்கொண்ட கலைஞரின் இலாவகம் மு.க.ஸ்டாலினுக்கு ஏன் புரியவில்லை?
பதில் :மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1000/-, அரசு பள்ளியில் படித்துக் கல்லூரிக் கல்வியைத் தொடரும் மாணவியருக்கு உதவித்தொகை ரூ.1000/-, அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டம் என மு.க.ஸ்டாலின் அசத்தி வருகிறார்.
அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் அறிவித்துக் கலைஞரைப்போல் அவர்களைக் கையில் வைத்துக்கொள்வார்.