அரசியலில் இரும்பு பெண்மணி யார் ? உள்ளிட்ட விறுவிறுப்பான சுவாரஸ்யமான அதியன் பதில்கள் ! பகுதி – 2
அண்ட புளுகு, ஆகாச புளுகு என்றால் என்ன?
அதியன் பதில்கள்
அண்ட புளுகு, ஆகாச புளுகு என்றால் என்ன?
அண்டம் என்பது உலகம். ஆகாசம் என்பது ஆகாயம் வானத்தைக் குறிப்பதாகும். புளுகு என்பது பொய். உலகம் மற்றும் வானம் அளவிற்குப் பொய்கூறுதலே இதற்குப்பொருள்.
“உடைந்து போன பாஜக & அதிமுக உறவு மீண்டும் ஒன்றிணைய வேண்டும்” என்ற டாக்டர் கிருஷ்ணசாமி எடுக்கும் முயற்சி வெற்றி பெறுமா?
அரசியலில் எதுவும் நடக்கலாம். நிரந்தர நண்பர்களும்; நிரந்தர எதிரிகளும் கிடையாது என்ற பொன்மொழி பல முறை உண்மையாகி உள்ளதே.
இன்ஸ்டாவில் ஒரு கவிஞர், “பழனிக்குச் சென்று முருகனையும் கும்பிடுவோம், பெரியாரைப்படித்து சுயமரியாதையும் கொள்வோம்” என்பது முரண்பாடாக இல்லையா?
பெரியார் இறைமறுப்பாளர் மட்டுமல்ல; தமிழ் மக்களுக்குத் தன்மானத்தையும் சுயமரியா தையும் கற்றுக்கொடுத்த ஆசான். பக்தியின் பெயரால் நடைபெறும் மூடநம்பிக்கைக்குப் பெரியார் எதிரானவர் என்பதே உண்மை.
அதியன் யார் என்பதை அறிந்துகொள்ளலாமா?
பரணர், மாமூலனார் போன்ற புலவர்கள் போற்றிப்பாடிய சங்ககால மன்னன் அதியன். பசும்பூண் பாண்டியன் படைத்தலைவனாக இருந்தவர். பெருங்கொடைவள்ளல்.
இன்றைய பத்திரிகைத் துறையில் நடுநிலைமை வெற்றிதருமா?
எல்லா துறையிலும் நடுநிலைமை வெற்றியைத் தரும். அநீதிக்கான எதிர்ப்புதான் நடுநிலை. வெற்றிகரமான பத்திரிகைகள் அனைத்தும் வலியோர் பக்கம் நிற்கின்றது. இதழியலில் நடுநிலைமை என்பது இல்லை.
அரசியலில் ‘இரும்பு பெண்மணி’ என்று அழைக்கப் பட்டவர் யார்?
1969ல் இஸ்ரேல் நாட்டின் பிரதமராக இருந்த கோல்டாமேயர் தான் உலகின் இரும்பு பெண்மணி என்று வருணிக்கப்பட்டார். இவர் இஸ்ரேலின் முக்கிய குடியிருப்பு மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமான திட்டங்களை செயல்படுத்தி வீட்டுவசதி மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சனைகளை தீர்க்க வழிவகுத்தார். பின்பு அவர் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டு, வளர்ந்து வரும் ஆப்பிரிக்க நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் அமெரிக்கா மற்றும் லத்தின் உடனான உறவுகளை வலுப்படுத்தினார்.
கோல்டா மேயரின் பல திட்டங்களை கண்டு இஸ்ரேலின் முன்னாள் பிரதமரான டேவிட் பென்-குரியன் கோல்டாவை “இரும்பு பெண்”என்று அழைத்தார். இதனை யடுத்து 1967 முதல்1973 வரை நடந்த அரபு இஸ்ரேலிய போர்களுக்கிடையேயான நிலஉரிமை கோரலிலும் வெற்றியை கண்டார். இதனை யோம் கிப்பூர் போர் என்று அழைத்தனர். இப்போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றதையடுத்து அரபு நிலங்களையும் கைப்பற்றியது . இப்போருக்கு பின்பு கோல்டா மேயர் ஓய்வு காரணமாக ஏப்ரல் 10, 1974ல் தனது பதவியை ராஜினாமா செய்தார்
மணிப்பூரில் கலவரங்கள், உயிரிழப்புகள் தொடர்கதையாகவே உள்ளனவே?
33% மகளிர் மசோதா நாடாளுமன்ற இரு அவைகளில் நிறைவேறிவிட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி விட்டார். அது போதுமே மகளிர் உரிமை காத்தவர் என்று பெருமை கொள்ள.. மணிப் பூரா…. அப்படி ஓர் ஊர் எங்குள்ளது? என்று கேட்கும் நிலையே உள்ளது.
தொலைக்காட்சி விவாதங்களில் அதியனைக் கவர்ந்த நெறியாளர்கள் யார்?
அறிவார்ந்த கேள்வி களால் கவர்ந்தவர் மு.குணசேகரன் (சன் நியூஸ்). பாமரத் தனமான எளிய கேள்விகளால் கவர்ந்தவர் கார்த்திகேயன் (புதிய தலைமுறை)
“திமுகவின் சூழ்ச்சியால்தான் பாஜக-&அதிமுக கூட்டணி முறிவு ஏற்பட்டது“ ஜான்பாண்டியன் கூறியிருப்பது உண்மையா?
அதிமுகவும் பாஜகவும் அமை தியாக இருக்க, ஜான்பாண்டியன் கூறியிருப்பது சிறந்த அரசியல் நகைச்சுவையாக உள்ளது.
வரும் தேர்தல்களில் நாம்தமிழர் கட்சித்தலைவர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலெட்சுமி போட்டியிடுவார் என்று பத்திரிக்கையாளர் பாண்டியன் கூறியுள்ளரோ? நடக்குமா?
அதியனுக்கு எதிர்காலம் குறித்து எந்தக் கருத்தும் இல்லை. காரணம் அதியன் சோதிடம் சொல்பவர் இல்லை.
இந்தோனேசியாவில் 350 கி.மீ. வேகத்தில் புல்லட் இரயில் சேவையைத் தற்போது தொடங்கியுள்ளதாமே.
130 கி.மீ. வேகத்தில் இயங்கும் வந்தே பாரத் தையே புல்லட் இரயில் என்று கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு இப்படியொரு சோதனையா?
அரசு ஊழியர்கள் எந்தப் போராட்டமும் நடத்தாமல்1971இல் கலைஞர் முதல்- அமைச்சராக இருந்தபோது அரசு ஊழியர் இறந்தால் ரூ.ஒரு இலட்சம் என்று அறிவிப்பு அதியன் அறிவாரா?
அறிவார். இப்போது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தினந்தோறும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். முதல்-அமைச்சர் கண்டும் காணாமாலும் இருப்பது வேதனை யாக உள்ளது.
தமிழ்நாடு அரசில் எந்த துறை இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற கருத்து உள்ளது?
பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை இன்னும் சிறப்பாக செயல்பட்டால் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்குப் பெருமை ஏற்படும்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள பெரியார் உயராய்வு மையம் சார்பில் தந்தை பெரியார் விழா நடைபெறுவதில்லையே? ஏன்?
2019இல் நடைபெற்றது. பின்னர் 2023ஆம் ஆண்டு வரை நடைபெறவில்லை. நிதியில்லை என்று பல்கலைக்கழகம் கைவிரிக்கிறது. காதில் விழுந்தும் உயர்கல்வித்துறைஅமைச்சர் மௌனம் காக்கிறார்.
தொடரும்….