”கண்டவன்கிட்ட எல்லாம் அடிவாங்குவதற்காகவா, அரசு அதிகாரிகளாக இருக்கிறோம் ! நடந்தது என்ன ?

தான் தாசில்தார் என்று சொன்னபிறகும்கூட, “நீ எவனா இருந்தா என்னடா? எங்கள் அண்ணன் கார்த்தி, கேபிள் ராஜூ, காஜாமலை விஜய் சொன்னால் யாராக இருந்தாலும்.....

0

”கண்டவன்கிட்ட எல்லாம் அடிவாங்குவதற்காகவா, அரசு அதிகாரிகளாக இருக்கிறோம் ! நடந்தது என்ன ?

திருச்சியில் மண்டல துணை தாசில்தார் பிரேம்குமார் தாக்கப்பட்ட விவகாரம் தணியாத நெருப்பாக ஆறு நாட்களைக் கடந்தும் தகித்துக்கொண்டிருக்கிறது. ”கண்டவன்கிட்ட எல்லாம் அடிவாங்குவதற்காகவா, அரசு அதிகாரிகளாக இருக்கிறோம். அரசின் உத்தரவை அமல்படுத்த சென்ற இடத்தில் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனில் அரசு அதிகாரியாக இருப்பதில் என்ன பயன்?” எனக்குமுறுகிறார்கள், வருவாய்த்துறை பணியாளர்கள்.

போராட்டத்தில் வருவாய் ஊழியர்கள்
போராட்டத்தில் வருவாய் ஊழியர்கள்

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கைகள் திருப்தியளிக்காத நிலையில் அக்-25 ஆம் தேதி முதலாக மாநிலம் தழுவிய அளவிலான பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கங்களின் ஒட்டுமொத்த கூட்டமைப்பினர்.

கிராம உதவியாளர் முதல் வருவாய் வட்டாட்சியர் வரையிலான அனைத்து அலுவலர்களும் பங்கேற்கும் இந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில், சட்டம் ஒழுங்கு, சான்றிதழ், மகளிர் உரிமைத்தொகை திட்டம், பட்டாசு உரிமம், மற்றும் முக்கிய பிரமுகர்கள் / அலுவலர்கள் வருகை வரவேற்புப் பணிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே, ஆயுதபூஜையை முன்னிட்டு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அக்-25 அன்று முதலாக வருவாய்த்துறை அலுவலகங்கள் இயங்குமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
என்னதான் பிரச்சினை?

SRI ACL INFOSYS OFFICE
SRI ACL INFOSYS OFFICE

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மேற்கு வட்டம், வில்லியம்ஸ் ரோடு, சுந்தரம் ஆர்கேட், மூன்றாவது தளம் என்ற முகவரியில் இயங்கி வந்த M/S SRI ACL INFOSYS என்ற நிறுவனத்தைச் சேர்ந்த பங்குதாரர்களான 1. கார்த்திக், 2. ரெங்கநாதன் 3. பக்கிரிசாமி உள்ளிட்டோரின் சார்பில், திருச்சி கனரா வங்கி ARM கிளையில் கடந்த 2012 – ஆம் ஆண்டு 22 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.

ஜப்தி வீடு
வங்கியில் வாங்கிய கடனை முறையாக கட்டி முடிக்காத நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் நடத்தி வந்த ஐ.டி. நிறுவனத்தையும் மூடிவிட்டனர். நிலுவையிலுள்ள கடனை வசூலிக்கும் சட்டரீதியான நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக, மேற்படி நிறுவனத்தின் பங்குதாரரான கார்த்தி த/பெ ஞானசம்பந்தம் என்பவருக்குச் சொந்தமான கோ-அபிஷேகபுரம் கிராமம், காஜாமலை, லூர்துசாமிபிள்ளை காலனியில் உள்ள 44 இலட்சம் ரூபாய் பெறுமானமுள்ள வீட்டை ஜப்தி செய்யும் நடவடிக்கைக்காக வருவாய்த்துறை அதிகாரிகளுடன் வங்கி ஊழியர்கள் சென்றிருக்கின்றனர்.

ஒருநாள் தவணையைக் கட்டத்தவறினால்கூட, வீடுதேடிவந்து பலர் பார்க்க தெருவில் நின்றுகொண்டு அவமானப்படுத்தும் சில தனியார் வங்கிகளைப் போல, அடாவடியில் ஈடுபடவில்லை. கடன் வாங்கிய ஆண்டை கணக்கிட்டால் 11 ஆண்டுகள்; கம்பெனியை இழுத்து மூடிய ஆண்டை கணக்கிட்டால்கூட 4 ஆண்டுகள் காத்திருந்துதான் இந்த கையகப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றனர்.

வீடு ஜப்தி
வீடு ஜப்தி

அதுவும், கடனீட்டு சொத்தினை பத்திரப்படுத்துதல் நிதிச்சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்ட (2022) பிரிவு – 14 இன் கீழ் மேற்படி நபர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை கையகப்படுத்திட உத்தரவிடக்கோரி கனரா வங்கி நிர்வாகத்தின் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு முறையாக விண்ணப்பித்து மாவட்ட ஆட்சியரிடமிருந்து உரிய உத்தரவை பெற்றும் மேலும், உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் உரிய சட்ட வழிமுறைகளின்படியும்தான் மேற்படி சொத்தை கையகப்படுத்துவதற்காக சென்றிருக்கின்றனர். கனரா வங்கியின் சார்பில் அதன் துணை மேலாளர் இரா.வினோத் உள்ளிட்ட ஊழியர்கள் சிலரும், வருவாய்த்துறை சார்பில் திருச்சி மேற்கு மண்டல துணை தாசில்தார் பிரேம்குமார், வருவாய் ஆய்வாளர் சரவணன், கோ-அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் ஆகியோர் சென்றிருக்கின்றனர்.

துணை தாசில்தார் பிரேம் குமார்
துணை தாசில்தார் பிரேம் குமார்

காலை 11.30 மணியளவில் தொடங்கிய இந்த கையகப்படுத்தும் நடைமுறை, பிற்பகல் 3 மணிவரையில் எவ்வித பிரச்சினையும் இல்லாமல்தான் சென்றிருக்கிறது. வருவாய்த்துறை அலுவலர்கள் உணவு இடைவேளைக்குச் சென்ற சமயத்தில், கார்த்திக் மற்றும் அவருடன் வந்திருந்த 20 நபர்கள் வங்கி ஊழியர்களிடம் பிரச்சினை செய்திருக்கிறார்கள். சம்பவம் கேள்விபட்டு ஓடிவந்த துணைதாசில்தார் பிரேம்குமார், தான் தாசில்தார் என்று சொன்னபிறகும்கூட, “நீ எவனா இருந்தா என்னடா? எங்கள் அண்ணன் கார்த்தி, கேபிள் ராஜூ, காஜாமலை விஜய் சொன்னால் யாராக இருந்தாலும் அடிப்போம், கொலையும் செய்வோம்” என்று சொல்லியே அடித்திருக்கின்றனர்.

இந்த தாக்குதலில், துணை தாசில்தார் பிரேம்குமார், வங்கி உதவி மேலாளர் வினோத்குமார், வங்கி ஊழியர்கள் நிஷாந்த், சந்தோஷ் மற்றும் கையகப்படுத்தும் நிகழ்வை வீடியோ பதிவு செய்ய வந்திருந்த வீடியோகிராபர் இருதயராஜ், ஆகியோர் காயமடைந்திருக்கின்றனர். அவர்களிடமிருந்த வீடியோ காமிரா மற்றும் செல்போன்களை பறித்துச் சென்றிருக்கின்றனர்.
வருவாய்த்துறை அதிகாரிகளின் கோரிக்கை!

கவுன்சிலரும் - பகுதி செயலாளருமான காஜாமலை விஜய்
கவுன்சிலரும் – பகுதி செயலாளருமான காஜாமலை விஜய்

”இவ்வளவு நடந்தும், இன்னவரைக்கும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு மூல காரணமான காஜாமலைவிஜய் பெயரைக்கூட எஃப்.ஐ.ஆரில் சேர்க்கவில்லை. வங்கி ஊழியரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தை மட்டும் வைத்து எஃப்.ஐ.ஆர் போட்டிருக்கிறார்கள். சம்பவத்தை கேள்விபட்டு மேற்கு தாசில்தார் வந்தாங்க. அப்போ, கார்த்திக் கூட காஜாமலை விஜய் வந்திருந்தாரு. யாருக்கு போன் போட்டு துணை தாசில்தார் போன மட்டும் திரும்ப கொடுக்க சொன்னாரு. அவரு இந்த விசயத்தில் தலையிடாம அவர குறை சொல்வோமா?” என கேள்வி எழுப்புகிறார், பெயர் வெளியிட விரும்பாத வருவாய்த்துறை அதிகாரி ஒருவர்.

பதட்டத்தில் அதிகாரிகள்
பதட்டத்தில் அதிகாரிகள்

மேலும், “இதைவிடக் கொடுமை, துணை தாசில்தார் உள்ளிட்ட 5 பேரும் ஆஸ்பத்திரியில் படுத்து கிடக்கிறாங்க. போலீசார் ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில், முதல் குற்றவாளி கார்த்திக் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வாங்கியிருக்கிறார். போலீசாரின் ஒத்துழைப்பு இல்லாமல் எப்படி இது சாத்தியமாகும்? அப்போ யாரையோ காப்பாற்றுவதற்காக எங்களை பலிகடா ஆக்குகிறார்களா?” என கேள்வியெழுப்புகிறார், அவர்.

வருவாய் அலுவலர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து, கே.கே.நகர் காவல் உதவி ஆணையர் அவர்களிடம் பேசினோம். “இதுவரை 8 பேரை கைது செய்திருக்கிறோம். இரண்டு நாட்களாக குற்றவாளிகளைத் தேடி வருகிறோம். எஞ்சிய நபர்களையும் கைது செய்துவிட்டு பேசுகிறேன்.” என்றார், அவர்.

இதுவரையில், இந்த வழக்கில் தேவாசீர்வாதம், சுப்ரமணி, ரெங்கநாதன், அசன், சையது ஜாஹிர் ஹூசைன், ஷேக் மொய்தீன், முத்துப்பாண்டி, மாடசாமி ஆகிய எட்டு பேரை கைது செய்திருக்கிறார்கள்.

 

பிரதீப்குமார் கலெக்டர்
பிரதீப்குமார் கலெக்டர்

மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவை அமல்படுத்துவதற்காக சென்ற சமயத்தில்தான் இந்த சம்பவமே நிகழ்ந்திருக்கிறது. அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக இவ்விவகாரத்தில் உரிய தீர்வு காண இயலாமல் தடுமாறுவதாக சொல்கிறார்களே? என்ற கேள்வியோடு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஐ.ஏ.எஸ். அவர்களை அணுகினோம். “ஒரே வழக்கில் ஒரு எஃப்.ஐ.ஆர். மட்டும்தான் பதிவு செய்ய முடியும்.

வங்கி தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர். போட்டிருக்கிறார்கள். தாசில்தார் லேட்டாகத்தான் புகார் கொடுத்திருக்கிறார். இன்னொரு எஃப்.ஐ.ஆர். போட முடியாது. ஆன்லைனில் திருத்தவும் முடியாது. அவர்கள் உடனே செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். துணை தாசில்தார் ஸ்டேட்மெண்ட் செக்சன் 161 –இன்படி எஃப்.ஐ.ஆரில் கூடுதல் ஆவணமாக இணைத்துக்கொள்ளப்படும். அவரது புகாரில் குறிப்பிட்டுள்ள அனைத்து நபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்” என்கிறார்.

அரசு அலுவலகங்களில் போராட்டம்
அரசு அலுவலகங்களில் போராட்டம்

”அடிவாங்கிட்டு ஆஸ்பத்திரியில் படுத்து கிடக்கிறவன்கிட்ட போயிட்டு ஏன் கரெக்ட் டையம்க்கு கம்ப்ளையிண்ட் கொடுக்கலனு கேட்கிறது எப்படி சார்? போலிசார்தான் மருத்துவமனைக்கு வந்து வாக்குமூலம் வாங்கிட்டு போறாங்க. 5 பேருகிட்டயும் வாங்கியிருக்காங்க. அதுல ஒருத்தரோட ஸ்டேட்மெண்ட மட்டும் வச்சி வழக்கு பதிவு செஞ்சிட்டு இப்படி சொல்லலாமா? ஒரு அரசு அதிகாரியை பணி செய்ய விடாம தடுத்திருக்காங்க. மிக முக்கியமா, அடிச்சதுல ஒருத்தரு டெய்லி தாலுகா ஆபிசுக்கு வர்ற ஆளு. நான் டெபுடி தாசில்தாருனு தெரியாதானு பிரேம்குமார் கேட்டிருக்காரு. நீ எவனா இருந்தா எனக்கென்னாடானு சொல்லி அடிச்சிருக்காங்க. அப்போ, இவரு கொடுத்த ஸ்டேட்மெண்ட வச்சிதானே போலீசு வழக்கு போட்டிருக்கனும். இதெல்லாம்விட, அடிவாங்கிட்டு ஆஸ்பத்திரியில படுத்திகிடக்காங்க. நீங்க இன்னும் பார்க்க போகலியா சார்னு பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட பிறகுதான் ஒரு நாள் கழிச்சி கலெக்டரும் டி.ஆர்.ஓ.வும் ஆஸ்பத்திரி வந்து பார்த்திட்டு போனாங்க. கேவலமாக இருக்கு சார்” என்கிறார், அந்த வருவாய்த்துறை அலுவலர்.
போலீசார் காட்டிய அலட்சியம்!

ஆறுதல் கூறும் கலெக்டர்
ஆறுதல் கூறும் கலெக்டர்

”சம்பவம் மதியம் மூன்று மணிவாக்கில் நடைபெறுகிறது. நாலு, நாலரை மணிக்கெல்லாம் ஜி.எச்.ல அட்மிட் ஆயிட்டாங்க. கே.கே.நகர் போலீசில் இருந்து ஜி.எச்.ல ஸ்டேட்மெண்ட் வாங்க நைட்டு 9.30 மணிக்கு மேலதான் போலீசு போயிருக்காங்க. இந்த 5 மணிநேரம் தாமதத்துக்கு என்ன காரணம்? அடுத்து, திருச்சி மேற்கு தாசில்தார் ராஜவேலு கம்ப்ளையிண்ட் கொடுக்க கே.கே. நகர் போலீஸ்டேஷனுக்கு நேரா போனபிறகும் இன்ஸ்பெக்டர் இல்லைனு சொல்லி கம்ப்ளையிண்ட் காப்பிய வாங்கவே இல்லை. இன்டலிஜென்ஸ் போலீசுக்கு சொல்லிதான் கம்ப்ளெயிண்ட் காப்பியவே வாங்கினாங்க.
அடுத்து, நாலு மணி வாக்குலதான் கே.கே.நகர் போலீசார்தான் அடிபட்டவங்கள ஜி.எச்.க்கு அனுப்பி வைக்கிறாங்க. அப்போ வரைக்குமே, கார்த்திக் சம்பவ இடத்துல இருக்காரு.

கார்த்திக் முன்ஜாமீன்
கார்த்திக் முன்ஜாமீன்

அப்போதே கார்த்திக்கை கைது செய்யாமல் தப்ப விட்டுவிட்டார்கள். நேரே மதுரைக்கு போயிட்டு முன்ஜாமீன் வாங்கிட்டு வந்துட்டாரு. ஆரம்பத்தில இருந்தே போலீசார் சட்டப்படி நடக்கல, ஒரு சார்பாகத்தான் இந்த விசயத்துல நடந்துகிட்டாங்க. அதுதான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம்.” என்கிறார், சம்பவ இடத்தில் உடன் இருந்த வருவாய்த்துறை அலுவலர் ஒருவர்.

” இங்கன்னு இல்ல, தமிழகத்தில எல்லா இடத்திலயும் வருவாய்த்துறை ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவம் அதிகரிச்சிட்டுதான் இருக்கு. இதுக்கு ஒரு முடிவுகட்டனும்னு நாங்க எதிர்பார்க்கிறது தப்பா சொல்லுங்க? இந்த விசயத்தில்கூட, கலெக்டர் உத்தரவை அமல்படுத்ததானே சார் நாங்க போனோம். அப்போ அவரு எங்க பக்கம்தானே சார் நிற்கனும். எனக்கு விழுந்த அடியாதான் பார்க்கிறேனு சொல்றாரு. ஆனா, நடவடிக்கை எடுக்க மாட்றாரு. மழுப்புறாரு. மேலிடத்த அழுத்தமா என்னனு தெரியல.” என்கிறார், மற்றொருவர்.

அமைச்சர் கே.என்.நேருவுடன்
அமைச்சர் கே.என்.நேருவுடன்

”திருச்சியில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர், காஜாமலைவிஜய். அமைச்சர் கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான இவர் ஏற்கெனவே, எம்.பி.சிவா வீட்டை அடித்து நொறுக்கிய விவகாரத்தில் சிக்கியவர். சில ஆண்டுகளுக்கு முன்பு ஏ.சி. ஒருவரை சட்டையப் பிடித்துவிட்டார் என்ற பஞ்சாயத்து வேற ஆனது. வெளியில் அடாவடியாக காட்டிக்கொண்டாலும், நேருவிடம் பம்மிவிடுவார். சிறுகுழந்தைபோல அழுது அடம்பிடித்து காரியம் சாதித்து விடுவார். இங்க எல்லோருமே மினிஸ்டர் நேரு பேர சொல்லிட்டுதான் இப்படி பன்றாங்க. ஆனா, பல விசயம் அவருக்கு தெரியாமல்தான் நடக்குது. இவங்களமாதிரி ஆளுங்களால, கட்சிக்குத்தான் தர்ம சங்கடம்” என்கிறார், உடன்பிறப்பு ஒருவர்.

 

சந்து என்கிற கணேசன்
சந்து என்கிற கணேசன்

இந்த சர்ச்சையில் சிக்கிய காஜாமலை விஜய்-க்கு அடுத்த இடியாக உடன்பிறந்த சகோதரர் சந்த்ரு (எ) கணேசன் எதிர்பாராத இறப்பு அவரை துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. துணைதாசில்தார் தாக்கப்பட்ட விவகாரத்தில் அவரது சகோதரர் சந்த்ரு (எ) கணேசனும் இருந்ததாகவும்; கைது நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காக நாமக்கல் மாவட்டத்தில் தங்கியிருந்ததாகவும், அப்போது அளவுக்கு அதிகமாக மது அருந்தியதையடுத்தே மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோனதாகவும் உறுதிப்படுத்த முடியாத தகவல் ஒன்று உலவிவருகிறது. சம்பவ இடத்தில் கணேசன் இல்லை என்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

கொந்தளிக்கும் அதிகாரிகள்
கொந்தளிக்கும் அதிகாரிகள்

”சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்” என்ற வருவாய்த்துறை அலுவலர்கள் ஒருபக்கம் போராட… ”சட்டத்தின்படி இரண்டு எஃப்.ஐ.ஆர். போட முடியாது” என்று போலீசாரும் மாவட்ட நிர்வாகமும் மற்றொருபக்கம் வாதாட … இப்படியே ஆறுநாட்களை ஆறப்போட்டதன் விளைவு, தற்போது தமிழகம் தழுவிய விவகாரமாக மாறிப்போயிருக்கிறது.

வீடியோ லிங்

 

ஏற்கெனவே, எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், “உடனடியாக, பாதிக்கப்பட்ட மண்டல துணை வட்டாட்சியர் பிரேம்குமார் கூறிய புகாரில் தெரிவித்துள்ளவாறு, தாக்குதலில் ஈடுபட்ட அமைச்சர் கே.என்.நேருவின் வலதுகரமான தி.மு.க. பகுதி கழக செயலாளர் காஜாமலை விஜய் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட குண்டர்கள் அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனியும் அரசு அதிகாரிகள் மீது இது போன்ற தி.மு.க.வினரின் தாக்குதல்கள் தொடர்ந்தால், மோசமான எதிர்விளைவுகள் இருக்கும் என்றும் தி.மு.க. அரசை எச்சரிக்கிறேன்.” என காட்டமாக கண்டனத்தை டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார், பாஜக அண்ணாமலை.

அரசுக்கு அவப்பெயரையும், அரசு ஊழியர்கள் மத்தியில் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இனியும் தாமதிக்காமல் உடனடி நடடிவக்கை எடுத்து அரசு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!

– அங்குசம் புலனாய்வு குழு

எங்கள் WhatsApp  சேனலில் இணைந்திடுங்கள்.. 

Leave A Reply

Your email address will not be published.